பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/769

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம்/721

போடுங்கோ, குறுக்குப்பூச்சை விடாதேயுங்கள். நெடுக்குப் பூச்சை மறவாதேயுங்கள், எங்களுக்குக் கொடுக்க வேண்டிய கட்டணத்தொகையை குறைக்காதேயுங்கோள், உங்கள் கையை நாங்கள் பார்த்திருக்கின்றோம் எங்கள் வாயை நீங்கள் பார்த்திருங்கோள் என்னும் பெருஞ்சோம்பேறிகளைப் பெருக்கி விட்டதன்றி தாய் தந்தை சுற்றத்தோரைக் காப்பாற்றும் வித்தையற்று வேதாந்திகள் என்னும் வீண் சோம்பேறிகளும் பலுகிப்பெருகி கட்டுக்கழுத்திகள் பால் புஞ்சித்தும் கைம்பெண்களை வஞ்சித்தும் அவர்களை அடுப்போர்யாவரும் சாமியார் சாமியாரென்று கூறவும் சாமியென்னும் மொழிக்கே பொருளறியா போலிவேதாந்த குரு உலகம் பொய் யாவும் பொய், எனக்குக் கொடுக்கவேண்டிய தொகைகள் மட்டிலும் மெய், அதை மட்டிலும் ஆளுக்குக் கொஞ்சங் கொடுத்து வந்தால் போதுமென மூன்று வேளையுங் கொழுக்கத்தின்று உலகமும் பொய், விதத்தையும் பொய், புத்தியும் பொய்யென மயக்கி தேசவிருத்தியையும் மநுக்கள் விருத்தியையுங் கெடுத்துவருவது அநுபவமுங் காட்சியுமே யாதலின், நூதன சாதிச்செயல்களையும் நூதன மதப்போதகங்களையும் நம்பி வீண் மோசமடைந்து சோம்பேறிகளாகி சோம்பித்திரியாமல் விசாரிணை ஊக்கமென்னும் உறைக்கல் கொண்டறிந்து வித்தையிலும் புத்தியிலும் ஈகையிலும் சன்மார்க்கத்திலும் முயன்று தற்காலம் இந்தியதேசத்தையும் இந்தியர்களையும் சீர்பெறச்செய்து சுகமளித்துவரும் பிரிட்டிஷ் சாமிகள் மீது விசுவாசத்தை வளர்த்து அவர்கள் செய்துவரும் நன்றியை மறவாது அவர்கள் மீது அன்பை வளர்ப்பதே அழகாம். அங்ஙனமின்றி பொய்சாதி வேஷங்களையும் பொய்ம்மதக்கோஷ்டங்களையும் பின்பற்றி அன்னமிட்டோர் வீட்டில் கன்னமிடுவது போல் இராஜ துரோகங்கொள்ளுவதாயின் தோன்றியுள்ள சீருங் கெட்டு நாசமடைவோமென்பது சத்தியம், சத்தியமேயாம்.

- 7:36; பிப்ரவரி 11,1914 -


51. நூதன சாதிகள் தோன்றியது முதல் இந்தியதேசப் பூர்வ வைத்தியம் முக்காலேயரைக்கால் அழிந்துபோக நீக்குள்ள அரைக்கால் பாகமும் அழிய நேர்ந்தது போலும்

ஐயிந்திரியங்களை வென்று இந்திரரென்னும் பெயர்பெற்ற புத்தபிரான் நிருவாணம் பெற்று சகலமும் உணர்ந்து சத்தியதன்மத்தைப் பரவச்செய்ய வேண்டி வரி வடிவின்றி ஒலிவடிவிலிருந்த மகட பாஷையாம் பாலி பாஷையையே மூலமாகக் கொண்டு சகட பாஷையாம் வடமொழியையும் திராவிட பாஷையாம் தென்மொழியையும் வரிவடிவில் இயற்றி ஜனகர், வாம தேவர், பாணினி, நந்தி ரோமர், கபிலர், திருமூலர், அகத்தியர் முதலானோர்க்கு விளக்கியதுமன்றி பரத்துவாசர், மச்சர், தன்வந்திரி முதலியோருக்கு சத்தியதன்மத்தோடு சீவர்களுக்குண்டாம் வியாதியின் குணா குணங்களையும் மூலிகைகளின் குணா குணங்களையும், உப்பின் குணா குணங்களையும், உலோக குணா குணங்களையும், இரத்தின குணா குணங்களையும், பாஷாண உப்பின் குணா குணங்களையும் தெளிவுபட விளக்கி வாமர், நந்தி, ரோமர், ஜனகர், முதலியோர்களை வடதிசைக்கும், அகஸ்தியர், தன்வந்திரி மச்சர் முதலியோர்களை தென்திசைக்கும் சட்டர், சுந்திரர் முதலியோரை கீழ்திசைக்கும், திருமூலர் முதலியோரை மேல்திசைக்கும் அனுப்பி அங்கங்கு பௌத்த வியாரங்கட்டி உலகோபகாரமாகவும் மக்கள் சீர்திருத்த சத்திய தன்மத்தைப் பரவச் செய்யும்படி செய்ததுடன் புத்தபிரான் பரிநிருவாணம் அடையும் வரையில் ஐன்பத்தைந்து வருடகாலம் அவரவர்கள் சருவகலைகளுக்கும் நாதனாக விளங்கி உலகெங்கும் பரவச்செய்துள்ளார். அத்தகைய தன்மத்தில் உலகமக்கள் சகலருக்கும் பேருபகாரமாக விளங்கும் வைத்தியத்தையும் கல்வியையுமே மேலாகக்கொண்டு ஒவ்வோர் மடங்களென்னும் அறப்பள்ளிகளிலும் கல்வி விருத்தியையும் ஒடதிகளென்னும் அவுடத விருத்திகளையும் செய்து அவுடதம் கொடுப்பதுடன் சத்திர சிகிட்சையென்னும் அறுத்து குணமாக்கும் வழிவகைகளையும் விருத்திசெய்து வந்தவற்றுள் பல மூலிகைகளையும்