பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 35


வீதியில் வரப்படாது, எங்கள் சுவாமி உங்கள் வீதியில் வரலாம் என்பது வந்தேமாதரத்தின் செயலாமோ. சாதி பொறாமெயை (பைகாட்) பண்ணாமல் ஏழைகளின் குடிசைகளைக் கொளிர்த்தி அவர்கள் சுவாமிகளின் ரதங்களையுங் கொளிர்த்தி அதனால் இவர்கள் (பைகாட்) நிலைக்குமோ ஒருக்காலும் நிலைக்கா. நமது தேசத்தோர் செய்கைகள் யாவும் ஆரம்பத்தில் அதி சூரம், மத்தியில் அதன் குறைவு, அந்தியில் அர்த்தநாசம் என்பது அனுபவமேயாம்.

ஆதலின் நமது தேசத்தார் தமக்குள்ள ஒற்றுமெய்க் குறைவையும், விவேகக் குறைவையும், தனக்குறைவையும், வித்தியாக் குறைவையும் உற்றுநோக்காமல் சாம - தான - பேத - தண்டம் என்னும் சதுர்விதவுபாயங் கண்டவர்களும், வித்தை - புத்தி - யீகை சன்மார்க்கம் நிறைந்தவர்களுமாகிய பிரிட்டிஷ் கவர்ன்மென்றாரைப் புண்படுத்துவது அவலமேயாம். நம்முடைய சொற்ப சோம்பலற்று கிஞ்சித்து வேகம் பிறந்திருப்பதும் அவர்களுடைய கருணையேயாம். அவ்விவேகத்தை மேலுமேலும் விருத்திபெறச் செய்து, செய்யும் நன்முயற்சிகளை ஆதியில் ஆய்ந்தோய்ந்தெடுத்து மத்தியில் வித்தியாவிருத்திகளைத் தொடுத்து அந்தியில் எடுத்தத் தொழில்களை முடித்துக் காட்டுவார்களானால் அதன் பலனை அனுபவிக்கும் குடிகள் யாவரும் இவர்களைக் கொண்டாடிக் குதூகலிப்பார்கள். அங்ஙனமின்றி வெறுமனே அரோரக் கூச்சலுஞ் கோவிந்தக் கூச்சலும் போடுவதுபோல் வந்தேமாதரம் கூறுவதில் யாதுபலன்.

பெரியசாதிகள் என்போர் புசிக்கும் பதார்த்தங்களாகும் அரிசி, பருப்பு, நெய், புளி முதலியவைகளைப் பறையனென்போன் தொடலாம் அவைகளைத் தூக்கலாம், கல்லினாலுஞ் செம்பினாலுஞ் செய்துள்ள சிலைகளை மட்டும் பறையன் என்போன் தூக்கப்படாது,

- 1:28; டிசம்பர் 25, 1907 -

பெரியசாதிகள் என்போர் புசிக்கக்கூடிய பதார்த்தங்கள் யாவையுஞ் செய்வதற்கும் தொடுவதற்கும் பேதமற்றப் பறையன் என்போன் செம்பு சிலைகளையும் பித்தளைச் சிலைகளையுந் தீண்டலாகாது, அவைகளை எடுத்துக்கொண்டும் ஊர்வலம் வரலாகாதென்னுங் காரணம் யாதென்பீரேல், ஊர்வலம் வருபவன் சிலாலயத்துள் செல்ல வேண்டி வரும். அவ்வகையில் உள்ளுக்குச் செல்லுவதினால் நாளுக்கு நாள் சிலாலயத்துள் செல்லும் வழக்கம் அதிகரித்து அதில் வைத்துள்ள அரசமரம் வேப்பமரத்தின் காரணங்கள் யாதென்றும் நிருவாண யோகசயன சிலைகளின் சரித்திரங்கள் யாதென்றும் கண்டுத் தெளிந்துப் பூர்வநிலையைப் பற்றிக்கொள்ளுவார்களென்னும் பீதியால் உள்ளே நெருங்கவிடாமல் துரத்திக்கொண்டிருந்த பழக்கமானது அவர்களைக் கண்டவுடன் தாழ்ந்தவர்களென்னும் பொறாமெயால் புறங்கூறிக்கொண்டு வந்தார்கள்.

இத்தகைய பொறாமேயால் நெறுக்குண்டு க்ஷீண திசையடைந்த குடிகளை கிறிஸ்துமதத்திற் பிரவேசித்து சொற்ப நாகரீகம் பெற்றும் பூர்வ நிலையை ஆராய்ந்து சீரடையாமல் என்பினால் செய்த சிலைகளையும் மரங்களினால் செய்த சிலைகளையும் இரதங்களில் வைத்து ஊர்வலம்வர ஆரம்பிப்பதைக் காணும் ஏனையோர் மனஞ்சகியாது கலகத்திற் கேதுவைத் தேடிவிடுகின்றார்கள். இவ்வகை ஒற்றுமெய்க் கேடாகுங் கலகங், கல்வியற்றவர்பாற் காணலாமா, கல்விபெற்றவர் பாற் காணலாமாவென்று உசாவுங்கால் உள்ள பொறாமெய் இருதிறத்தவர்பாலும் உண்டென்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளங்குகின்றது.

அதாவது விழுப்புரத்தில் நேர்ந்த கலகம் கல்வியற்றவர்களே பெருக்கி விட்டார்களென்னும் வதந்தியிலிருந்தது. அவ்வதந்திக்கு மாறாய் 1907ம் வருடம் டிசம்பர் மாதம் கூடிய நாஷனல் காங்கிரஸ் கமிட்டியாரின் கலகத்தை நோக்குங்கால் கல்வி பெற்றவர்களின் கலகமே கடும் போராயினவாம்.