பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38 / அயோத்திதாசர் சிந்தனைகள்


ஸ்டேஷ்னண்டை கண்டவுடன் அவமானம் அவமானமென்றும், வெட்கம் வெட்கம் என்றும் சொல்லிக் கூச்சலிட்டார்களாம். அந்தோ! இவ்வகை சிறுப்பிள்ளைகள் செய்யுஞ் சேஷ்டை விளையாட்டை அடக்க முடியாதவர்கள் பெரியோர்களுக்கு உண்டாயிருக்கும் பொறாமெயை அகற்றுவார்களோ. ஒருக்காலும் அகற்றப்போகிறதும் இல்லை, உவரை ஆளப்போகிறதும் இல்லை. காரியத்தின் பேரில் கண்ணோக்கம் இராது வீரியத்திற்கு விருது கட்டுகிறவர்கள் வீணர்களேயாம்.

- 1:31: சனவரி 25, 1908 -

நம்முடைய தேசத்திற்கும் புறத்தேசங்களுக்கும் உள்ள சீர்திருத்த பேதங்களையுஞ் செல்வ பேதங்களையும் உற்றுநோக்குங்கால் நூற்றுக்கு ஒருவரை சீர்திருத்தக்காரர் என்று கண்டெடுப்பதற்கு அரிதாகின்றது.

அமெரிக்காதேசத்துக் குடிகளுள் சொந்த பூமியை வைத்துக் கொண்டு வேளாளர்களாய் இருப்பவர்கள் நூற்றுக்கு 87 பெயரிருக்கின்றார்கள். நமது தேசத்திலோ சொந்த பூமியிற் பயிரிடுந் தொழிலாளராகும் வேளாளரை நூற்றுக்கு 5 பெயரைக் கண்டெடுப்பது அரிதாயிருக்கின்றது.

அதற்குக் காரணம் யாதென்றால், நமது தேசத்திலுள்ள சில சுயநலங் கருதுகிறவர்களால் ஏற்படுத்தி வைத்துக்கொண்டிருக்கும் அண்டை பாத்தியமென்னும் சட்டமேயாம்.

அவ்வகை அண்டை பாத்தியமென்னுஞ் சட்டத்தால் உண்டாகும் கெடுதிகளை நமது கருணை தங்கிய பிரிட்டிஷ் இராஜாங்கத்தாருக்கு விளக்குவாருங் கிடையாது. ஒரு மனிதன் நூறு ஏக்கர் பூமியை வைத்துக் கொண்டு செவ்வனே பண்படுத்தாமலும் காடழித்து கரம்பு போக்காமலும் காலத்திற்குக்காலம் விளைவிக்கக்கூடிய தானியங்களைப் பயிறு செய்யாமலும் கரம்பேற வைத்திருந்தபோதிலும் அவன் பூமிக்கு அண்டையிலிருக்குங் காலிபூமியை வேறொரு மனிதன் தர்க்காஸ்து கொடுப்பானேயானால் நூறேக்கரை வைத்துக்கொண்டு சீர்படுத்தக் கையாலாகாதவன் தன்னுடைய பூமிக்கு அருகாமை மற்றொருவன் வரக்கூடாதென்னும் பொறாமெயால் தர்க்காஸ்துக் கொடுத்து உள்ளவனுக்குக் கொடுக்கப்படாது, அண்டை பாத்தியமுள்ள எனக்கே அப்பூமியைக் கொடுக்க வேண்டும் என்று விண்ணப்பமிட்டு தன் நூறேக்கருடன் அன்னியன் தர்க்காஸ்து கொடுத்த பூமியையுஞ் சேர்த்துக் கொள்ளுகின்றான்.

இவ்வகைத் தன்னைப்போல் அன்னியன் பூமியை வைத்துக்கொண்டு பிழைக்கலாகாதென்னும் பொறாமெயும் தானே சகல பூமியையும் கட்டி ஆளவேண்டும் என்னும் பேராசைக்கொண்ட பேமானிகளாதலின் சொந்த பூமியையாள்பவர் நூற்றுக்கு ஐந்து பெயரைக் காண்பதும் அரிதாயிருக்கின்றது.

அவ்வகை பூமி ஆளும் விருத்திக் குறைவுக்கு சாதிநாற்றக் கசிமலங்களும் ஓர் காரணமேயாம். எவ்வகையில் என்றால், ஓர் பார்ப்பான் பூமிக்கருகில் பறையன் தர்க்காஸ்துக் கொடுப்பானேயாகில் அண்டைபாத்திய சட்டத்தைக்காட்டி அவனை விரட்டிவிடுகிறான். பார்ப்பான் பூமிக்கருகில் மற்றோர் பார்ப்பானே தர்க்காஸ்து கொடுப்பானேயாமாகில் அண்டை பாத்திய சட்டத்தை அப்புறப்படுத்திவிட்டு ஐயனை அருகில் சேர்த்துக் கொள்ளுகின்றான்.

சோம்பேரியுஞ் சோம்பேரியும் ஒன்றுசேர்ந்து பூமியைப் பெருக்கிக்கொண்டு பண்படுத்த விதியற்றுப்பறையனைத் தேடுவார்கள். அப்பறையருள் ஏமாளிப் பறையனேனும் இளிச்சவாய்ப் பறையனேனும் அகப்படுவானாகில் அவனுக்கும் அவன் பெண்சாதிக்கும் நிதம் ஒரு அணாகூலிக்குத் தக்க தானியங்களைக் கொடுத்து நொறுக்கி வேலைவாங்கிக் கொள்ளுவான். அவனுக்கருகே ஓர் விவேகமுள்ளப் பறையன் பூமியைவைத்துக் கொண்டு சுகமாக வாழ்வானாயின் பார்ப்பானுக்கு முன்பு பறையனும் பூமி வைத்துக் கொண்டு வாழலாமா என்னும் பொறாமெயால் அவன் பயிறுக்கும் கால்நடைகளாகும்