அரசியல் / 39
கன்றுக்காவிகளுக்குங் கேடுண்டு செய்து துறத்தும்படி ஆரம்பிக்கின்றான். இவனுக்கு உண்டாகுங் குறைகளை கலைக்கட்டருக்குத் தெரிவித்தாலோ கலைக்கட்டர் அதை தாசில்தாருக்கு அனுப்பி விசாரிக்கும்படிச் செய்கின்றார். தாசில்தாரோ முநிஷிப்பையுங் கணக்கனையும் விசாரிக்க ஆரம்பிக்கின்றார். கணக்கனும் முநிஷிப்பும் பார்ப்பானுக்கு உரியவர்களாதலின் B லெட்டர் உடைந்து போச்சி C லெட்டர் புரம்போக்கில் போச்சுதென்னும் ஒவ்வோர் முடிகளிட்டுப் பறையனை பூமியைவிட்டு ஓடும்படிச் செய்து விடுகின்றார்கள். கணக்கன் காலால் போட்டமுடியை கலைக்ட்டர் கையால் அவிழ்க்க முடியாது என்னும் ஓர் பழமொழியும் உண்டு. இத்தியாதி கேடுகளையும் கலைக்ட்டர் விண்ணப்பத்தைக் கண்டவுடன் குடியானவன் வீட்டண்டை நேரில் வந்து விண்ணப்பத்தாரியை அழைத்து ஒவ்வொரு கெடுதிகளையும் விசாரிணைச் செய்வரேல் சகலமும் சிறக்க விளங்கும். பிரிட்டிஷ் ராஜாங்கமும் துலங்கும். இத்தகைய விசாரிணையற்று கணக்கனையும் முநிஷீப்பையும் பொறுப்பிடுவதால் குடிகள் யாவரும் இராஜாங்கத்தின்மீது குறைகூறும்படி நேரிடுகின்றதுமன்றி சகலகுடிகளுங் களங்கமற்று பூமியை ஆளுவதும் அரிதாய் உழுது பயிரிடுங் குடிகளின் முயற்சிகெட்டு சாதிநாற்றம் பொறுக்கமுடியாது சீர்கெட்டு பலதேசங்களுக்குஞ் சிதறிப்போய்விட்டார்கள்.
இத்தகைய வஞ்சகர் பெருக்கத்தினாலும் பொறாமெயர் காந்தலினாலும் மழை குன்றி விஷரோகங்கள் தோன்றி தேசமுஞ் சீர்கெட்டு வருங்கால் சுதேச சீர்திருத்தத்தை நாடியவர்கள் சுதேச சீர்கேட்டிற்கு மூலம் யாதென்று தெளிந்து அம்மூலத்தை களைந்தெரியவேண்டியதே கற்றவர்களின் கடனாம்.
- 1:34: பிப்ரவரி 5, 1908 -
இத்தேசத்துள் கொசுக்கள் அதிகரித்து மக்களை வாதிப்பதற்கு மூலம் யாதெனில், நீரோடைகளிலும் கால்வாய்களிலும் கிணறுகளிலும் நீரோட்டம் இன்றி தங்கி நாற்றமுறில் அதனின்று சிறிய புழுக்கள் தோன்றி அந்நாற்ற பாசியைப் புசித்து வளர்ந்து இறக்கைகளுண்டாய் புழுக்கள் என்னும் பெயர் மாறி கொசுக்கள் என்னும் உருக்கொண்டு பரந்து வெளிவந்து சீவர்களை வாதிக்கின்றது. இவ்வகை வாதிக்கும் கொசுக்களின் உற்பத்திக்கு மூலம் அங்கங்கு கட்டுப்பட்டக் கெட்ட நீர்களேயாம்.
அதுபோல் உலகிலுள்ள சகலவிவேகிகளும் கொண்டாடும் வித்தை, புத்தி, யீகை, சன்மார்க்கம் நிறைந்த இந்து தேசமானது நாளுக்குநாள் வித்தை கெட்டு, புத்தி கெட்டு, யீகை கெட்டு, சன்மார்க்கங்கள் கெட்டுவருவதற்கு மூலம் யாதெனில், தங்களை உயர்த்திக்கொள்ள தங்களுக்குத் தாங்களே ஏற்படுத்திக் கொண்ட சாதிகளும் வித்தை புத்திகளால் பிழைக்க விதியற்று சாமிபயங்காட்டிப் பிழைக்கும் சமயங்களுமேயாம்.
அஃது எவ்வகையிலென்னில் பூர்வம் இவ்விந்துதேச முழுதும் புத்ததருமம் நிறைந்திருந்த காலத்தில் புத்த சங்கத்தைச்சார்ந்த சமண முநிவர்கள் விவேகமிகுத்த தண்மெயால் வடமொழியாம் சமஸ்கிருதத்தில் பிராமணரென்றும் - பாலியில் அறஹத்தென்றும் தென் மொழியில் - அந்தணர் என்றும் பெயர் பெற்று அரசர்களாலும் குடிகளாலுஞ் சிரேஷ்டமாக வணங்கப் பெற்றிருந்தார்கள்.
ஆயிரத்தியைஞ்ஞூறு ஆண்டுகளுக்குப்பின் இந்துதேசத்தில் வந்து குடியேறி யாசகசீவனத்தால் பிழைத்திருந்த ஓர் சாதியார் இத்தேசத்தில் ஆந்திரசாதி, கன்னட சாதி, மராஷ்டகசாதி திராவிட சாதி என்னும் கூட்டத்தார் புத்த தன்மத்தால் ஒருவருக்கொருவர் பேதமின்றி கொள்வினை கொடுப்பினையிலும் உண்பினை உடுப்பினையிலும் ஒற்றுமெயுற்று சுக வாழ்க்கையில் இருப்பவர்களைக் கண்டு யுத்தத்திலேனும் மற்று வேறு விதத்தேனும் இவர்களை ஜெயிக்கமுடியாது, அரசர்கள் முதல் குடிகள் வரையில் பயந்து நிற்கும் அந்தணர்கள் வேஷத்தால் இவர்களை அடக்கி ஆளவேண்டும் என்று எண்ணி வடமொழியாம் சமஸ்கிருதத்தைக் கற்றுக் கொண்டு பிராமணவேஷம் ஆரம்பித்தார்கள்.