அரசியல் / 41
அதுவுமின்றி மற்றவர்களுடன் ஒற்றுமெய் அடைந்துவிட்டால் ஆயிரத்தி ஐன்னூறு வருஷ காலங்களாக தங்களைப் பெரியசாதியென்று ஏற்படுத்திக் கொண்டு தங்களுக்கு அடங்கினவர்களால் சாமி, சாமியென்று அழைக்கும் கெளரதை நீங்கிவிடும் என்று எண்ணினாலும் எண்ணுவர்.
இத்தகைய எண்ணங்களைக் கொண்டவர்களாயிருப்பினும் தங்கள் சுயநலங் கருதி சாதியை ஒழித்து ஜப்பான் சைனா முதலிய தேசங்களுக்குச் சென்று அவர்களுடன் கலந்து சாப்பிட்டுக் கொண்டு கைத்தொழிலையும் கற்று வருகின்றார்கள்.
அவர்களைப் பின்பற்றி நிற்கும் மற்றவர்கள் அவர்கள் செயல்களை நோக்கி தாங்களும் பலதேசங்களுக்குச் சென்று வித்தைகளைக் கற்று சுகமடையவேண்டும் என்னும் எண்ணம் கொள்ளாமல் இன்னமும் அவர்கள் கட்டுக்குள் தாழ்ந்து நிற்பது என்ன குறையோ விளங்கவில்லை.
முதலிகள் என்போர் வகுப்பிலும் நாயுடுகள் என்போர் வகுப்பிலும் செட்டிகள் என்போர் வகுப்பிலும் எத்தனையோ பிரிவினைகள் நாளுக்குநாள் தோன்றிக்கொண்டே வருகின்றது. இத்தகையத் தோற்றங்கள் எக்காலத்தில் நீங்கி ஒற்றுமெயடையுமோ அதுவும் விளங்கவில்லை.
இவைகள் தான் சில நாட்களாக தொன்று தொட்டு வழங்கிவந்த போதினும் பிராமண மதத்தில் மோட்சம் போவதற்கு நேரான வழியில்லை. கிறிஸ்துமதத்தில் நேரான வழியுண்டு என்று மதமாறினவர்களில் பலர் செட்டிக் கிறிஸ்தவன், நாயுடு கிறிஸ்தவன், முதலில் கிறிஸ்தவன், வேளாளக் கிறிஸ்தவன் என்று டம்பஞ் சொல்லி சாதிப்பெயர்களைப் பரவச் செய்துவருகின்றார்கள்.
- 1:35: பிப்ரவரி 12, 1908 -
இத்தகைய சாதிப் போர்வையை இழுத்து விழுத்து போர்ப்பவர் மகமதியர் மார்க்கஞ் சேர்ந்திருப்பார்களாயின் செட்டி மகமதியன், நாயுடு மகமதியன், முதலி மகமதியனெனக் கூறுவரோ, ஒருக்காலுங் கூறார்கள்.
காரணம் - மகமதியர்மார்க்கஞ் சேர்ந்தவுடன் அம்மார்க்கத்தோர் நடை உடை பாவனைகளைப் பின்பற்றி அதன்மேரை நடத்தல் வேண்டும். அங்ஙனமின்றி செட்டி மகமதியன், முதலி மகமதியனென்னும் அழைப்புக்கிடங் கொடுக்கமாட்டார்கள்.
கிறிஸ்தவர்களோ அங்ஙனங் கிடையா. அதாவது கத்தோலிக்குப் பாதிரிகள் சேர்ந்த கும்பலைக்கொண்டே சார்ந்து பணஞ் சம்பாதிப்பவர்கள்.
புரோட்டெஸ்டான்ட் பாதிரிகளோ சேர்ந்த கும்பலுக்குத் தக்கவாறு நேர்ந்த சம்பளம் வாங்குகிறவர்கள். பிரதிபலன் கருதி தங்கள் சமயத்திற் சேர்ப்பவர்களாதலின் கிறிஸ்துமதத்தில் சேர்பவர்களின் மனோபீஷ்டப்படி செட்டிக் கிறிஸ்தவன், முதலிக் கிறிஸ்தவனென வைத்துக்கொள்ளும்படி உத்திரவளிப்பதுடன் பொட்டுகளும் இட்டுக்கொள்ளுவதற்கு சந்தனக்கட்டைகளையும் குங்கத்தையும் விஞ்சாரித்து அதாவது மந்திரித்து கொடுப்போம் என்பார்கள்.
இப்பாதிரிகளின் ஆதரவால் பிராமணப்போர்வையும், கிறிஸ்துமத சேர்வையஞ் செய்துவருகின்றார்கள்.
கிறிஸ்துமதத்திற் சேர்ந்தவர்களை பிராமண மத சாதிப்போர்வையை அகற்றவேண்டுமென்று அறிக்கை இடுவார்களாயின் கிறிஸ்துமதமும் மறைந்து பணவரவுங் குறைந்துபோமென்று எண்ணி சாதிகளை அவர்களும் பரவச்செய்து வருகின்றார்கள்.
பெரும்பாலும் நமது தேசத்தோர் வித்தையிலும், புத்தியிலும் முயற்சியற்று வேஷ பிராமணர் சோம்பலிற் பிழைக்கும் வழிகளைப் பின்பற்றி (சுவாமிகள்) பயங்காட்டி மதக்கடைகளைப் பரப்பி எங்கள் சுவாமி கண்ணைக் கொடுப்பார், உங்கள்சாமி மூக்கைக் கொடுப்பார் என்னும் ஆசைஊட்டி சம்மாங்குடைகளுக்கு மேற்குடை செய்யத்தெரியா சம்பிரதாரிகளும், பண்ணை பூமியில் பழைய ஏற்றத்தைவிட புதிய ஏற்றஞ் செய்யவறியா போதகர்களும்,