உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42 / அயோத்திதாசர் சிந்தனைகள்


வாழைப்பழமும், மாம்பழத்திற்குமேல் பழவிருத்தி செய்யவறியா பாவாணரும், ஜெகத்திற்கே குரு என்று சொல்லிக் கொண்டு பத்தாயிரரூபாய் சம்பாதிப்பார்களானால் அவர்கள் பாடங்கற்ற புரோகிதர்களும் பாதிரிகளும் பூசாரிகளும் தங்கடங்கள் மதக்கடைகளைப் பரப்பி சோம்பேரி சீவனஞ் செய்வதற்கு சமயங்களையும் அதையே மேம்பாடு செய்துக்கொண்டு ஏழைகளை வஞ்சித்து பொருள் சம்பாதிப்பதற்கும், ஏழைகளை ஏய்த்து வேலைகள் வாங்கிக்கொள்ளுவதற்கும் பெரியசாதி சின்னசாதி என்னும் வேஷங்களையும் பெருக்கிக் கொண்டே வருகின்றார்கள்.

இதுவுமன்றி மதுரை முதலிய இடங்களிலுள்ள பட்டு நூல் வியாபாரிகளும் கைக்கோளரென்று அழைக்கும்படியான வருமான ஓர் கூட்டத்தார் முப்பது வருடங்களுக்கு முன்பு குப்புசாமி, பரசுராமன் என்று அழைத்து வந்தார்கள். அவர்களே சில வருடங்களுக்குமுன் நூல் வியாபாரத்தைக்கொண்டு தங்களைக் குப்புசாமி செட்டி, பரசுராமசெட்டி என்று வழங்கிவந்து தற்காலந் தங்கள் பெயர்களை குப்புசாமி ஐயர் பரசுராம ஐயர் என்று வழங்கி வருகின்றார்கள்.

இவ்வோர் அநுபவத்தைக்கொண்டே அரைச்செட்டையை நீக்கிவிட்டு முழுச்செட்டையை போர்த்துக்கொள்ளுவதும், முழுச் செட்டையை நீக்கிவிட்டு அரைச்செட்டையை போர்த்துக்கொள்ளுவது போல் சாதிப்பெயர்கள் யாவும் ஒவ்வோர் கூட்டத்தார் சேர்ந்து சாதிதொடர் மொழிகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டிய காலத்தில் சேர்த்துக் கொள்ளுவதும், அவற்றை நீக்கிவிடவேண்டிய காலங்களில் நீக்கிவிடவேண்டிய பெயர்களாய் இருக்கின்றபடியால் இச்சாதிப் பெயர்களைப் பெரிதென்று எண்ணி தேச சிறப்பையும் ஒற்றுமெயையும் கெடுத்துக் கொள்ளுவது வீண்செயலேயாம்.

நமது தேசத்தின் சீர்கேட்டிற்கும், சுகக்கேட்டிற்கும், ஒற்றுமெய்க் கேட்டிற்கும் இட்டபொய்யாகிய சாதி கட்டுகளும் சமய கட்டுகளுமே மூலமென்று உணர்த்தும் அவைகளை மேலும் மேலும் பரவச் செய்வதால் நமது தேச சிறப்பும் தேச சுகமும் நாளுக்குநாள் கீழுகிழென்றே தாழ்ந்துபோமென்பது திண்ணம்.

ஆதலின் நமது தேசத்தோரை சீர்திருத்த வெளிவந்துள்ள பத்திரிகாபிமானிகள் ஒவ்வொருவரும் பூர்வ வழக்கம்போல் தமிழ்பாஷைக்குரியோர்கள் யாவரையுத் தமிழ்சாதி என்றும் கன்னடபாஷைக்கு உரியோர்கள் யாவரையும் கன்னடசாதி என்றும், மராஷ்டக பாஷைக்குரியோர் யாவரையும் மராஷ்டக சாதி என்றும், தெலுகு பாஷைக்குரியோர்கள் யாவரையும் தெலுகுசாதி என்றும்,

- 1:36; பிப்ரவரி 19, 1908 -

பத்திரிகைகளில் வரைந்துக்கொண்டு வருவதுடன் வார்த்தைகளிலும் பேசிக் கொண்டு வருவோமாயின் சாதிப்பிரிவினைகள் நாளுக்கு நாள் மறந்து பாஷைப் பிரிவினைகள் பெருகிக் கொண்டே வரும்.

அத்தகைய பாஷைப் பிரிவினைகளின் பெருக்கத்தால் மேற்சாதி கீழ்ச் சாதியென்னும் பொறாமெகள் அகற்று தமிழ்பாஷைக்காரர்கள் யாவருமோனும் ஒன்றுகூடி கல்வி விருத்தியிலும், கைத்தொழில் விருத்தியிலும் ஒற்றுமெய் அடைந்து தேசத்தை சீர்திருத்தாவிடினுந் தாங்களேனுஞ் சீரடைவார்கள்.

சீர்திருத்த மூலங்களைத் தெரிந்து செய்யாமல் அவன் வேறு சாதி அவனைப்பற்றி நமக்கென்ன, இவன் வேறுசாதி இவனைப்பற்றி நமக்கென்னவென்று நீங்குவதால் சுயநலங்கருதி மணிலாக்கொட்டை விளைத்து பலதானிய விருத்தி குறைந்து பஞ்சந்தோன்றியதுபோல் பாழாய்விடும்.

அதாவது நகரவாயல்களிலுள்ள யாவரும் பொதுப்பிரயோசனங் கருதி சுதேசி சுதேசி என்று கூச்சலிட்டுவர நாட்டுவாயல்களிலுள்ள யாவரும் சுயப்பிரயோசனங் கருதி மணிலாக்கொட்டை எனும் வேறுகடலை விளைவால் (மெனிமணி) லாபத்தில் இருக்கின்றார்கள்.