44 / அயோத்திதாசர் சிந்தனைகள்
நோக்குகின்றவர்களில்லை. விஷயங்களை நோக்கவேண்டியவர்களாயின் அவரவர்கள் சுயபாஷைகளில் விஷயங்களை விளக்கி முடிவுசெய்யல் வேண்டும், அவ்வகை முடிவுகளை அதேபாஷையில் பதிவுசெய்து பிரசுரித்தல் வேண்டும். பிரசுரிக்கும் பத்திரிகைகளைக் கண்டுணர்வோர் நாளக்குநாள் ஒற்றுமெயுற்று நற்சீரை நோக்குவார்கள்.
நம்முடைய சீர்திருத்தங்களை ஆலோசிப்பதற்குமுன் அன்னிய தேசத்தோர் சீருக்குவந்த வழிகளையும், அவரவர்கள் குணாகுண ஒழுக்கங்களையும், அந்தந்த தேச சரித்திரங்களையும் வாசித்துணர்ந்து அதன்மேறை நடத்தல் வேண்டும்.
- 1:37: பிப்ரவரி 26, 1908 -
பலதேச சீர்திருத்தங்களில் நமது பந்துக்களாக விளங்கும் ஜப்பானியர்களின் சீரையுஞ் செய்கைகளையும் முதலாவது விசாரிப்பாம்.-
ஜப்பான் தேசக் கனவான்களில் ஒருவர் (ரிக்ஷா) என்னும் வண்டியில் ஏறிக்கொள்ள ஜப்பான் தேசத்து ஏழைகளில் ஒருவன் அவ்வண்டியை இழுத்துக்கொண்டு நெடுந்தூரஞ்சென்று அவ்விடமுள்ள ஓர் பலபட்சணங்கள் விற்கும் வீட்டுள் நுழைந்துவண்டியில் ஏறி வந்த கனவான் நாற்காலியின்மீது உட்கார்ந்து வேண்டிய பதார்த்தங்களைக் கொண்டுவரச்செய்து புசிக்குங்கால் அவ்வண்டியை இழுத்துச் சென்ற ஏழையும் உட்சென்று அவர் எதிர் நாற்காலியில் உட்கார்ந்து தன் கையிலுள்ள பணத்திற்குத் தக்கவாறு வாங்கி புசித்து கனவானும் ஏழையுங் கலந்து பேசிக்கொண்டு வெளிவந்து அவர் வண்டியிலேறிச் செல்லுவதும் இவன் இழுத்தோடுவதும் வழக்கமாயிருக்கின்றது. இத்தகையக் களங்கமற்றச் செய்கையை நமது தேசத்தோர் கையாடுவரோ. ஒருக்காலுங் கையாடார்கள்.
அதாவது - சாதிநாற்றங்கள் இங்கு மூக்கை அடைத்துக் கொண்டும் சமயநாற்றப் பொறாமெய்க் கண்ணை மறைத்துக் கொண்டும் இருக்கிறபடியால் அம்மேலோர்கள் குணம் இவர்களுக்கு வாய்ப்பது கஷ்டசாத்தியமாம். அங்ஙனம் ஒருகால் சாத்தியப்படினும் சிலர் பொருளவாக் கருதிபடிவரன்றி களங்கமற்ற நெஞ்சினராய்ப் படியார். களங்கமற்ற நெஞ்சினரல்லார் என்பதை அடியிற் குறிக்குஞ் செயல்களால் அறிந்துக் கொள்ளலாம்.
சிலவருஷங்களுக்கு முன்பு இச்சென்னை மின்சாரவண்டியென்னும் டிராம்வே நடாத்துதற்கு கூட்டங்கள் நியமிக்குங்கால் அக்கூட்டத்தாருடன் சேரவேண்டிச் சென்ற அசுதேசிகளிற் சிலர் டிராம்வே கம்பனியில் வேலைசெய்யுங் கண்டக்டர்கள் பறையர்களாய் இருக்கப்படாது என்றும் வேறு சாதியோராய் இருக்கவேண்டும் என்றும் பேசியது சகலருக்குத் தெரிந்த விஷயம். இவர்கள் சாக்குப்போக்கும் பறையர்களைத் தலையெடுக்கவிடாமல் செய்துவருஞ் செய்கையும் நாளுக்குநாள் உணர்ந்துவரும் ஐரோப்பியர் அப்படியே ஆகட்டும் என்று பதிலளித்துக் காரியாதிகள் நடத்தி வருங்கால் சொற்ப நஷ்டங்கண்டவுடன் சென்னைவாசிகள் யாவரும் நழுவிவிட்டார்கள். ஐரோப்பியர்களோ யாதுநஷ்டம் வரினுந் தளர்வடையாது காரியத்தை நடாத்தி லாபத்தை அடைந்து வருகின்றார்கள்.
டிராம்வே கம்பனியில் சேரும்போதே பறையன் சுகமடையலாகாது என்று எண்ணிக்கொண்டே அச்சங்கத்திற் சேர்ந்த பலன் பணமும் பாழாய் பாகமுந் துலைந்து பாழடைந்தார்கள்.
பறையன் கண்டக்கட்டராகவந்து எங்களைத் தீண்டப்போகாது என்ற அசுதேசிகள் தாங்களே தற்காலம் கண்டக்டர் வேலையில் அமர்ந்துகொண்டு வண்டிகளிலேறியுள்ள பறைச்சிகளிடமும் சக்கிலிச்சிகளிடமும் தோட்டிச்சிகளிடமுஞ் சென்று அருகில் நின்றுக்கொண்டு டிக்கட்டுக்கு அம்மா துட்டு கொடுங்கோ அம்மா துட்டு கொடுங்கோள் என்றுக் கேட்க ஆரம்பித்துக் கொண்டார்கள்.
இத்தகைய செயல்களால் பார்ப்பான் என்போன் பணஞ்சம்பாதித்து முன்னுக்கு வரவேண்டிய இடங்களில் எல்லாம் சாதியாசாரங் கிடையாது.