பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90 / அயோத்திதாசர் சிந்தனைகள்

போதித்து அதினால் அதர்வணவேதம் என்னும் பெயர் கண்டிருப்பதினாலும், வேதங்களின் சிக்கை அறுத்தவரும் வியாசர், புராணங்களை உண்டு செய்தவரும் வியாசர். கைம்பெண்களைச் சேர்ந்து பிள்ளைகளை உற்பத்திச் செய்து அவர்கள் கதையாகும் பாரதத்தை எழுதியவரும் வியாசர். இத்தகைய பாரதப்போர் முடிவில் தோன்றிய பரிச்சித்துவின் மகன் ஜெனனமே ஜெயனென்பவன் குருவின் சங்கதிகளும் எசுர்வேதத்துள் எழுதியிருப்பதினாலும், தற்காலம் கிறீஸ்துவேதம் என்று வழங்கும். மோசே எழுதியுள்ள முதலாகமத்துள் பராபரன் தண்ணரின்பேரில் அசைவாடிக் கொண்டிருந்தாரென்று எழுதியிருப்பது போல், யசுர்வேத 114-வது பாகத்தில் இந்த உலகம் ஆதியில் சலமாக இருந்ததாகவும் அந்த சலத்தின்பேரில் அவர்களுடைய சிருஷ்டி கர்த்தா அசைவாடிக்கொண்டிருந்தார் என்றும் உலகமே சலமாயிருந்து ஒருவரும் அறியாமல் தோன்றிய பூமியை இவர்கள் சிருஷ்டி கர்த்தா பன்றி உருவெடுத்துத் தாங்கியிருந்தார் என்றும், அப்பன்றி எதன்பேரில் நின்றதென்று விளங்காததினாலும், யசுர்வேத 129-வது பாகத்தில் வேதாந்ததை போதித்தவர் சுவேதாசுவத்திரர் என்று கூறியிருக்க சங்கரவிஜயத்தில் சங்கராச்சாரி வேதாந்தங் கூறினார் என்று எழுதியிருப்பதினாலும், உபநிடதங்களையும் அவ்வேதங்களுள் எழுதிவைத்திருப்பதினாலும், சாமவேதம் 131-வது பாகத்தில் சாமவேதியர்க் கிரியைகளை ஓதுதலினால் சாமவேதம் என்று குறித்திருப்பதினாலும், சாமவேதத்தை ஓதுதலினால் சாமவேதியரானார்களா, அன்று, சாமவேதியர் கிரியைகளைக் கொண்டு சாமவேதம் உண்டாயிற்றாவென்று விளங்காததினாலும், சாமவேதம் 141-வது பாகத்தில் புத்தபிரான் பரிநிருவாணமடைந்த நெடுங்காலங்களுக்குப் பின்பு தோன்றிய உத்தாலகன் கதைகள் அடங்கியிருக்கின்றபடியாலும், இவ்வேஷபிராமணர்களின் வேதங்களும் புராணங்களும் மநுஸ்மிருதி பாரதம் இராமாயண முதலிய நூற்கள் யாவும் புத்தபிரான் பரிநிருவாணமடைந்த நெடுங்காலங்களுக்குப் பின்பே தோன்றியுள்ளது என்பது துணிபாம்.

இவைகள் வேதங்களில் உள்ள மற்றும் சங்கதிகளை விவரிக்கின் வீண்சங்கை வளரும். பிராமணவேதம் சைவம் வைணவமென நூதனமாகத் தோன்றியுள்ளவைகளுக்குப் பின்பு இன்னும் நூதனமாகத் தோன்றியுள்ள பிரமோசமாஜம், வேதாந்தம், ஆரியமதமென வந்துள்ளவர்களில் சிலர் புத்ததன்ம அஷ்டாங்க மார்க்கத்துள் சீலம், சமாதி, பிரக்ஞை என்னும் நிலையால் தோன்றும்.

பிரக்ஞானம் பிரமம் / அகம்பிரமாஸ்மி / அயமாத்ம பிரமம் / தத்துவ மசி.

என்னும் நான்கு சுத்தோதய சத்தியதானத்தை நான்கு பேதவாக்கியங்கள் என்று கூறியபோதினும் அதனுட்பொருள் பிரக்ஞா தெளிவின் பிற்போதமாதலின் நான்கு பேதவாக்கியங்களுக்கும் அதனுட் பொருளாம் கர்மபாகை, அர்த்தபாகை, ஞானபாகையாகும் அறம், பொருள், இன்பம் நிகழாமல் அநார்த்தத்தால் அழியும். இத்தகைய பேத வாக்கியங்களைக் கொண்டு குருடனுக்குக் குருடன் வழிகாட்டுவது போல வேஷபிராமணர்களுக்கு உதவியாய வேஷஞானிகள் தோன்றி ஞானப் பிரகாசமுற்றிருந்த தேசத்தை அஞ்ஞானவிருள் அடையச்செய்து விட்டதினால் ஞானிகளின் தோற்றமும் அவர்கள் தெரிசனமும் கிடையாமல் போய்விட்டது.

இப்போதும் இவ்வேஷபிராமணர்கள் எங்கள் வேதங்களும் நிலையுள்ளது வேதாந்தங்களும் நிலையுள்ளது என்று வெளிவருவார்களாயின் காசியில் விஷ்ணுவே பரமென்று கரமற்ற வியாசர், சிவனே வியாசராகவும் சங்கராச்சாரியாகவும் வந்துள்ள அவதாரபேதங்களாலும் போத பேதங்களாலும் இவர்கள் வேதங்களும் நிலையற்றது வேதாந்தங்களும் நிலையற்றதென ரூபிக்கக் கார்த்திருக்கின்றோம்.

கடுவெளிசித்தர்

பொய்வேதந் தன்னைப்பாராதே - அந்த / போதகர் சொற்புத்தி போதம் வோராதே (பாபஞ்)

- 1:49 ; மே 20, 1908 -