பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94 / அயோத்திதாசர் சிந்தனைகள்

அள்ளியிடும் பொருள்கவராதானையின்மேற்
கவண்சிலைபோ மளவுந்தந்தால்
கொள்ளுதிநீ பின்போன கூலியையும்
பெறுதியெனக்கூறித்தீய
வெள்ளிதனை யுடன்கூட்டி மீண்டு மழைத்
தொருவாய்மெய் விளம்பலுற்றான்.

இத்தகைய யாகத்திற்கு வேண்டிய பேராசைப்பொருளின் பரிமாணத்தைப் பாருங்கள். ஓர் யானையை நிறுத்தி அதன் உயரம் திரவியத்தைக் கொட்ட வேண்டு மானால் எவ்வளவு சுற்றளவுள்ள திரவியத்தைக் கொட்டினால் யானையின் உயரம் குவியும் என்று கணக்கெடுத்துக் கொண்டால் யானையின்மீது ஓர் மனிதன் நின்று கவண்கல்லெறிந்து எவ்வளவு உயரம் போகின்றதோ அவ்வளவு திரவியங் கொட்ட வேண்டுமானால் எவ்வளவு சுற்றளவு திரவியங் குவியல் வேண்டும். அதுவுமின்றி கவண்கல் இவ்வளவு உயரம் சென்றதெனக் கூறு நூல் ஆதாரமெது. இம்மேறு நிறையற்ற உயரமும் பரிமாணமற்ற திரவியக்குவியலை பார்ப்பான் கேட்கவும் கையில் ஒருகாசுமில்லா அரசன் கொடுப்பதாக ஒப்புக்கொண்டு வாக்குத் தவிராமல் தன் மனைவி மகவை அவ்வளவு திரவியத்திற்கு விற்றுவிட்டானாம். அப்பணக்குவியலை எவ்விடங்கொட்டி அளவுபார்த்ததும் எடுத்துப்போனதும் யாரும் அறியார்கள்.

மேற்கூறியப் பொருள் யாவும் பெற்றுக்கொண்ட பார்ப்பான் தான்கூட சுற்றிவந்ததற்குக் கூலிவேண்டும் என்று கேட்க அதற்காய் அரசன் வீரவா கென்னும் புலையனுக்கு அடிமையாகி பதினாயிரம் பொன் கொடுத்தானாம்.

அரிச்சந்திரபுராணம் - காசிகாண்டம்

வாரமேதகு மந்திரி மன்னனைத் / தூரமேவிலை கூறிய சொற்கேளா
வீரவாகுவெனும் பெயர்மேவினான் / சூர நீர்மைப் புலைமகன் தோன்றினான்.
ஆயினென்றென் றமைச்சனு மவ்வயின் / மேவினன்னினி விற்பனுனக்கென்றான்
ஈயு நல்விலை யேதெனப் பொன்பதி / னாயிரமென் றமைச்ச னியம்பினான்.

இத்தகைய பார்ப்பானுக்குக் கொடுப்பேனென்ற சொன்மொழி தவிறா அரிச்சந்திரன் தன்தேசத்தை விசுவாமித்திரர்க்குக் கொடுத்துவிட்டு வேற்றுநா டேகுங்கால் மந்திரிப் பிரதானிகள் யாவருஞ்சூழ்ந்து அரசனைநோக்கி மன்னே, மறுபடியும் எக்கால் வருவீர் என்று வினாவினார்கள். மன்னனவர்களை நோக்கி நான் மறுபடியும் இந்நாட்டில் வரமாட்டேன் என்று உறுதிவாக்களித்தான்.

அரிச்சந்திரபுராணம் - நகர்நீங்கிய காண்டம்

அக்காலத் தமைச்சரெல்லா மடல்வேந்த / னடி போற்றியரசே நீமீண்
டெக்காலமெழுந்தருள்வ தென்றுரைக்க / வாங்கவரை யிருகணோக்கி
முக்காலங்களுமுணரு முநிவனுக்கின்று / யான் கொடுத்த மூதுர்தன்னில்
எக்காலமும் வருவதில்லை யென்றா / னமைச்சரெலா மேங்கிவீழ்ந்தார்

பொய்சொல்லா அரிச்சந்திரன் எக்காலமுந் தன்னாட்டுள் வருவதில்லை என்று வாக்களித்து மறுபடியும் நாட்டுள் வந்துசேர்ந்தான்.

அரிச்சந்திரபுராணம் - மீட்சிகாண்டம்

வள்ளலை முனிவன் கூட்டி வருகின்றவாறு கேட்டு
பள்ள முற்றும்பர் வெல்லாம் பரிசேபோல
வள்ளமு மகிழரோமஞ் சிலிர்ப்புற வூரிற் சேனை
வெள்ளமு மரசர்தாமும் வியந்தெதிர்கொண்டாரன்றே.

பதினாயிரம் பொன்னுக்குப் புலையனிடம் அடிமையுண்ட அரிச்சந்திரன் தனக்குக் கிடைக்கும் வாய்க்கரிசியை சமைத்துண்ணாமல் பசுமாட்டைப் புசிக்கச்செய்து சாணத்துடனும் கோமியத்துடனும் வெளிவந்து விழும் அரிசியைக் குத்தி சமைத்துண்பானாம்.

அரிச்சந்திரபுராணம் - காசிகாண்டம்

மண்டலத் திறைவனுய்த்து / வைத்தவாய்க் கரிசிதன்னை
கொண்டு போய் சுரபிக்கீய்ந்து / கோமயத்துடனே வீழ்ந்த
தண்டுல மெடுத்துக்குத்தி / சமைத்தினி துதவச்சோ
றுண்ணுவணுரைந்தான் பின்னை / யுற்றவ ரெடுத்துறைப்பாம்.

- 1:51; சூன் 3, 1908 -