பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 99

இதைக்கேட்ட வேஷபிராமணர்கள் ஆ ஆ இன்று கிடைக்கக்கூடிய இலக்ஷ பொன்னுக்கு மேற்பட்ட ஆபரணங்கள் போய்விட்டதென்று வருந்தி இப் பௌத்த பிஷுவேகெடுத்துவிட்டான் என்று எண்ணி ஏ அரசே, நீர் நீச்சனை அணுகி, நீச்ச வார்த்தையைக் கேட்டு நீயும் நீச்சனாகிவிட்டீர். ஆதலின் உமக்குதெய்வலோக சுகங் கிடைக்காமல் போய்விட்டது, போம் போம் என்று தூறி குடிமியை தட்டிக்கொண்டே போய்விட்டார்களாம்.

இத்தகையக் காரணங்களைக் கொண்டே பௌத்தர்கள் யாவரும் பறையர்கள் என்றுத் தாழ்த்தப்பட்டு பாழடைந்தார்கள் என்பதைப் பறக்கத் தெரிந்துக்கொள்ளலாம்.

- 2:1; சூன் 17, 1908 –

24. வேதாந்தம்

வினா : வேதாந்தம் என்பது ஓர் மதமா, ஓர் சமயமா, ஓர் மார்க்கமா இவ்வேதாந்ததை அனுபவித்தோர் என்ன சுகம் பெற்றார்கள்.

எ.வி. இராமலிங்கம்

விடை : விஷ்ணுவே கிருஷ்ணனாக அவதரித்தாரென்னும் ஆளில்லா வேதாந்தம் வேண்டுமா? சிவனே சங்கராச்சாரியாக அவதரித்தார் என்னும் ஆளில்லா வேதாந்தம் வேண்டுமா!

இவ்விரண்டினுள் ஒன்றைப் போதிப்போர்கள் பாதிவயதுகடந்து பாலனென்னும் பெயர் மாற்றி பரம் எனக்குள் இருக்கின்றது நான்பரத்துள் இருக்கின்றேன் என்னும் பிரசங்கங்கூறி அறைக்குள் நுழைந்து செம்புச்சிலை பித்தளைச்சிலைகளைப் பூசைசெய்துவிட்டு அவ்வகைப் பூசையாலுந் தனது வேதாந்தத்தாலும் தன்னாலும் யாதொரு பிரயோசனமும் கூடிவரவில்லை என்று கண்டு ஓர்வகைக் கொட்டையால் சிலப் பிரயோசனம் உண்டென்று நம்பி அதைக் கழுத்தில் கட்டிக்கொண்டு வேதாந்தம் பிரசங்கித்துக்கொண்டு வருகின்றார் அவர் வேதாந்தம் வேண்டுமா.

அன்றேல் அமேரிக்காதேசத்திற்குச் சென்ற போது புத்ததன்மமாகும் ஞானமே விசேஷமென்று கூறியும் மற்றதேசங்களுக்குச் சென்ற போது இந்துவேதமே முக்கியம் என்று கூறியும், வங்காளதேசம் வந்தவுடன் பிரமோவேதாந்தமே பெரிதென்று கூறியும் ஒருவர் மரணமடைந்தார். அவர் வேதாந்தம் வேண்டுமா.

அல்லது இவ்வேதாந்தங்களுக்கு அதிகாரிகளாகும் பாஷியாக்காரர்கள் கூறியுள்ளபடிக்கு வேதத்தை சூத்திரன் காதில் கேழ்க்கப்படாது அங்ஙனம் கேழ்ப் பானாயின் அவன் செவிகளில் ஈயத்தைக் காய்த்து விடவேண்டும் என்பது விதி. சூத்திரன் என்பவனுக்கு வேதத்தைக் கேழ்க்க சுவாதீனமில்லாத போது சுடு காக்கும் பறையனென்போனுக்கு வேதாந்தங் கேழ்க்க விதியுண்டோமோ, இல்லை இல்லை.

இத்தகைய வேஷ பிராமணர்கள் வேதத்தையும் அவர்கள் வேதாந்தத்தையும் இரகசியமாகக் கற்றுக்கொண்ட ஓர் சூத்திரர் செவியில் ஈயத்தைக் காய்த்து விட்டுவிடுவார்கள் என்று பயந்து தன் வீட்டிற்குள் உழ்க்கார்ந்துகொண்டு வெளியிலிருப்பவர்களுக்கு வேதாந்தஞ் சொல்லிக்கொடுத்துக்கொண்டு வருகின்றார். அவர் வேதாந்தம் வேண்டுமா.

இவர்களனைவர் வேதாந்தத்துள் யாருடைய வேதாந்தம் வேண்டுமோ அதை விவரிப்பீராயின் அவர் வேதத்தின் பிறப்பையும் வேதாந்தச் சிறப்பையும் விளங்கக்கூறுவோம்.

- 2:3; சூலை 1, 1908 –

25. கிறீஸ்த்தவன் கிறீஸ்த்து அவன் - அவன் கிறீஸ்த்து

என்னும் சிறந்த வாக்கியமானது கிறீஸ்த்து அவனுக்குள்ளும் அவன் கிறீஸ்த்துவுக்குள்ளும் அமர்ந்தவனே கிறீஸ்த்தவனாவான்.