பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 101

ஆயிரங் கிறீஸ்தவர்களில் ஒரு யதார்த்த கிறிஸ்த்தவன் இருப்பானாயின் உலகம் நடுங்கும். பத்தாயிரம் கிறீஸ்த்தவர்களில் ஒரு யதார்த்தக் கிறிஸ்த்தவன் இல்லாமல் போவானாயின் உலகம் பழிக்கும். இவ்விரண்டிற்குங் காரணம் அம்மத குருக்களேயாவர்.

- 2:9; ஆகஸ்டு 12, 1908 –

26. தசராவென்னும் ஆயுதபூஜை

பூர்வ வடநாட்டரசர் சுத்தவீரத்திலும், வல்லமெயிலும் மிகுத்த காளிகா தேவியைப்போன்ற ஓருருவமைத்து தாங்கள் கொலு வீற்றிருக்கும் ஆசனத்தில் பத்துநாள் நிறுத்தி ஒவ்வோர் நாளும் ஒவ்வோர் ஆயுதவித்தைகளை விளையாடி பத்தாநாள் தாங்களெடுக்கும் படைக்கு இருதியினின்று ஆதரிக்க வேண்டுமென்று கோறி கொலுவைக் கலைப்பது வழக்கமாம்.

இஃது பத்துநாள் விளையாட்டாதலின் வடமொழியில் தசராவென்றும், உயுத்தியா யுத்தங்களாம் யுத்த ஆயுதங்களாகும் வேலாயுதம், சூலாயுதம், கதாயுதம், வாகாயுதமென்னும் யுத்தக்கருவிகளை வைத்து பூசித்து வந்ததினால் ஆயுதபூஜை என்றும் வழங்கி வந்தார்கள்.

இத்தகைய பூஜையால் சில சாதியோர்களுக்கு சீவனவிருத்தி கிடையாது. இதை அநுசரித்தே தங்கள் தங்கள் சமயங்களைச் சார்ந்தவர்களை வீடுகடோரும் ஆயுதபூஜை செய்யவேண்டுமென்று கற்பித்து அடுப்பங்கட்டையும் ஓராயுதம், துடைப்புகட்டையும் ஓராயுதம், அறுவாமணையும் ஓர் ஆயுதம், திறுவாமணையும் ஓர் ஆயுதம், அடுக்குந்தட்டும் ஓர் ஆயுதம், வெட்டுபாறையும் ஓர் ஆயுதம், கொடுவுகத்தியும் ஓர் ஆயுதம், மடிவுகத்தியும் ஓர் ஆயுதம் என்னும் நிராயுதபூஜையை உண்டுசெய்து அதன் சார்பாய் சில சீவன விருத்தியைத் தேடிக்கொண்டார்கள்.

ஆயுதபாணிகளென்பதும், நிராயுதபாணிகள் என்பதும் அரசர்களின் யுத்தக் கருவிகளைக் குறிக்குமேயன்றி அடுப்பங்கட்டைக் கருவிகளுக்காகாவாம்.

- 2:20, அக்டோபர் 28, 1908 -

27. பட்டினத்தார்

வினா : நமது பௌத்த சகோதிரர்களுக்குள் சிலர் பட்டினத்து சுவாமிகளையும் பௌத்தரென்று கூறுகின்றார்கள் அவ்வகைக் கூறலாமோ, அவற்றிற்கு ஆதாரம் ஏதேனும் உண்டோ .

ப. முனிசாமிபிள்ளை , செக்கன்றாபாத்

விடை : தாம் வினாவிய சுவாமிகளை பௌத்தரென்றே கூறற்கு அவரருஞ் செய்யுட்களே ஆழ்ந்த ஆதாரங்களாகும்.

அதாவது:- புத்தபிரான் ஓரரச புத்திரனாகப் பிறந்து மனைவி மக்களைத் துறந்து சற்குருவாகச் சிறந்து ஓடேந்தி இரந்து நின்றதுமன்றி செல்வமிகுத்த தனது சங்கத்தோர்களுக்கும் ஓடளித்து இரந்து ஒடுங்கும் பற்றற்ற செயலுள் வைத்துள்ளாரென்பது சருவசாஸ்திர சரித்திர சம்மந்தமாகும்.

பட்டினத்து சுவாமிகள் பாடல்

மானார் விழியைக் கடந்தேறிவந்தனன் வாழ்குருவுங்
கோனாகி யென்னைக் குடியேற்றிக்கொண்டனன் குற்றமில்லை
போனாலும் பேரிருந்தாலு நற்பேரிது பொய்யன்றுகாண்
ஆனாலு மிந்த வுடம்போடிருப்ப தருவெறுப்பே.

இச்செய்யுளால் புத்தபிரான் அரசாங்கத்தைத் துறந்து குருவானவிடயம் விளங்குவதால் இனிவருஞ் செய்யுளால் புத்தசங்கத்தோருக்குள்ள ஓட்டின் மகத்துவத்தையும் அறிந்துக்கொள்ளலாம்.

பட்டினத்து சுவாமிகள் பாடல்

வீடு நமக்குண்டு திருவாலங்காடு விமலர்தந்த
வோடு நமக்குண்டு வற்றாத பாத்திரம் ஒங்கு செல்வ
நாடு நமக்குண்டு கேட்டதெல்லாந்தா நன்நெஞ்சமே
ஈடு நமக்குச் சொலவோ வொருவரு மிங்கில்லையே.