பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102 / அயோத்திதாசர் சிந்தனைகள்

இன்னும் மற்றாதாரங்களை வரையின் விரியும் என்றஞ்சி விடுத்துள்ளோம் ஆயினும் சமய நேர்ந்துழி யெஞ்சிய தெழுதுவாம்.

- 2:31, சனவரி 13, 1909 –

28. மைலாப்பூரில் பௌத்தாலயம்

வினா : ஐயா, இவ்வாரம் வெளிவந்த 'தமிழன்' பத்திரிகையில் திருவளுர், மயிலாப்பூர், திருப்போரூர் மூன்றும் பூர்வபௌத்தர்கள் மடமெனக் குறித்து அவ்விடங்களுக்குப் பெரும்பாலும் பூர்வ பௌத்தர்களென விளங்கி தற்காலம் பறையர்கள் என்று அழைக்குங் கூட்டத்தார் போக்குவருத்து உண்டென்றுங் கூறியிருக்கின்றீர். அதுபோலவே இக்கூட்டத்தோர் பெரும் வரவை மூன்று ஆலயங்களிலும் கண்டுவருகின்றேன். திருவளுரில் நிருவாண சிலைக்கு நாமமிட்டுள்ளதைக் கண்டுள் ளேன். திருப்போரூரில் புத்தர் முத்திராங்கசிலைகளுள்ளதையும் கண்டுள்ளேன். ஆயினும், மயிலாப்பூரில் பௌத்த ஆலயம் இருக்கின்றது என்பதற்கு போதிய ஆதாரம் காணேன். ஆதலின், பத்திராதிபரவர்களே போதிய நூலாதாரம் கொடுத்து எமது சங்கையை நீக்கவேண்டும்.

பு.மா. சமரபுரிமுதலியார், திருவளுர்.

விடை : திருமயிலையில் சாக்கையர் நிமித்தகரென்னும் வரிசையோராகிய வள்ளுவர்கள் வாசஞ்செய்திருந்த வீதியின் பெயராலும் அல்லமா பிரபு மடமென்றும், குழந்தைவேலு பரதேசி மடமென்றும் வழங்கிவந்தவைகளையும் கணிதாதி சகல சாஸ்திரபண்டிதர் மார்க்கலிங்க நாயனாரவர்கள் அச்சிட்டுள்ள சுத்தஞானம் நூறிற் காணுவதன்றி பௌத்தர்கள் நூலாகும் திருக்கலம்பகத்தி லுள்ள மயிலாலய யோகசயன தியானத்தையும் காணலாம்.

திருக்கலம்பகம் - கட்டளைக்கலித்துறை

உரையோம்பயன் செய்வதற்கென்று / வைத்தறமோதும் வஞ்சத்
துரையோடு றாத சுகர்கண் / டீர்பொங்கு தூங்கொலிநீர்
திரையோ டுருண்டெழு சங்கஞ் / சொரிந்த செழுந்தரள
நிரையோ டுறங்குந் / துறை மயிலாபுரி நின்றவரே.

விருத்தம்

மயிலாபுரி நின்றவ ரரியாசன வும்பரின்
மலர் போதியிருந்தவர் அலர் பூவி நடந்தவர்
அயிலார் விழிமென்கொடி யிடைதீயையவித்தவர்
அமராபதி யிந்திரர் அணியாட லுகந்தவர்
கயிலாயமெனுந்திரு மலைமேலுரைகின்றவர்
கண நாயகர்தென்றமிழ் மலைநாயகர் செம்பொனின்
எயிலாரிலகுஞ்சினகிரியாள் பவர்சம்பைய
ரெனையாள நினைந்து கொல்வினையேனு ளமர்ந்ததே.

சாக்கையர்கள் மயிலாப்பூரில் அல்லமாப்பிரபுவால் புத்தர் மடம் இயற்றி அவர் மாசிபௌர்ணமியில் துறவடைந்து கரபோலென்னும் ஓடேந்திய பிச்சாண்டி வேஷத்தையும், அன்றிரவு முழுவதும் நித்தி றையற்று துறவடைந்த சிவராத்திரியையும், கல்லால விருட்சத்தின் கீழ் காமனை ஜெயித்து நிருவாணமுற்ற பங்குனிபுருவத்தையும், சுயம்பிரகாச பரிநிருவாணமுற்ற மார்கழிபருவ திருவாதிரைநாளையும், ஆனந்தமாகக் கொண்டாடிவந்தார்கள். அக்காலத்தில் மயிலை சாக்கையர் மடத்து பிச்சாண்டி வேஷங் காணும்படியாகவந்த கார்வெட்டிநகரத்து அரசன் மனைவி பூம்பாவை என்பவள் இறந்தபோது சாக்கையர்கள் துக்கங்கொண்டாடிய சரமகவி.

மார்க்கலிங்கநாயனா ரேட்டுப்பிரிதி.

திருமயிலை பூம்பாவை பதிகம் பத்து

உரிஞ்சாய வாழ்க்கை எமனுடைய போக்கு
மிருஞ்சாக்கையாகள் எடுத்துரைப்ப நாட்டிற்
கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சுரத்தான்றன்
பெருஞ்சாந்தி காணாது போதியோ பூம்பாவாய்.

சூளாமணியிலுள்ள பூம்பாவை என்பவள் சரிதையைக் காண்க.