பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104 / அயோத்திதாசர் சிந்தனைகள்

பூம்பாவை' என்று துக்கங்கொண்டாடினார்கள்.

தண்ணாரறவாழி சுகமீய்ந்த தாளினான்
கண்ணார் மயிலைக் கபாலீச்சுரமமர்ந்தான்
பண்ணார் பருவம் பணையமர வட்டமி நாள்
புண்ணியகாப்புண்ணாதே போதியோ பூம்பாவாய்.

என்றும் புத்ததரும விழாக்கோல் மயிலையிற் கொண்டாடிவந்தவற்றை மேற் குறித்துள்ள செய்யுட்களால் அறிந்துக் கொள்ளுவதன்றி மயிலை சேரியிலுள்ளோர் வரிசை செல்லுவதும், அதன் சபாமண்டபமும் இன்னும் விளக்கவேண்டுமேல் பின்னும் விவரிக்கக் கார்த்திருக்கின்றோம்.

- 2:37; பிப்ரவரி 24, 1909 –

29. மதவிசாரணை மஹாசங்கம்

வங்காளநாட்டில் சென்ற சுக்கிரவாரம் சகலமதஸ்தர்களும் கூடி மதவிசாரிணைப் புரிந்திருக்கின்றார்கள்.

இத்தகைய விசாரிணையில் அந்தந்த மதஸ்தாபகர்கள் எந்தெந்த சீர்திருத்தங்களையொட்டி தங்கடங்கள் மதங்களை இஸ்தாபித்துள்ளா ரென்றும், அந்தஸ்தாபங்களினால் மநுகுலத்தோர் என்னசீர்பெற்று முன்னேறினார்களென்றும், தற்காலம் எம்மதஸ்தர் சீர்பெற்று முன்னேறி சகல சுகங்களையும் அநுபவித்து வருகின்றார்களென்றும் அநுபவ திருஷ்டாந்த தாட்டாந்தங்களை ரூபிக்காதுவிளக்கி நெய்யால் வீட்டைக் கழுவியதுபோல் மநுகுலத்தோருக்கு மதத்தாலுண்டாம் பிரயோசனம் இன்னது யினியதென்று விளக்காமலும் அந்தந்த மதஸ்தாபகர்களின் கருத்தும் அதனதன்பலனும் அவர்களுக்கே விளங்காமலும் பேசி முடித்துவிட்டார்கள்.

அச்சபைக்கு கணநாயகராக வீற்றிருந்தவரோ எல்லோரும் ஒரே கடவுளைத் தொழுங்காலம் வருமென்றுகூறி முடித்து விட்டார். இஃது எவ்வகைத்தான தீர்க்கதெரிசன மொழியோ அதுவும் விளங்கவில்லை.

ஒருகடவுளென்று கூறிய கணிதமொழியானது ஒன்றென்று தோன்றிய பின்னர் இரண்டு, மூன்று, நான்கென்னும் தொடரிலக்கம் தோன்றுமென்பதை தெளியாது ஒருகடவுளென்னும் மொழியை உறுதிபெறக் கூறியது உன்மத்தநிலையேயாம்.

ஒருகடவுளென்னும் மொழியே இரண்டு கடவுள், மூன்றுகடவுள், நான்கு கடவுளென்னும் மொழிபெற்று ஒன்றன்பின் ஒன்றாய் உதிக்கும் என்பதை உணராமல் போதித்துவிட்டார்போலும்.

அந்தோ மதவிஷயங்களில் களங்கமற்ற புருஷாள் தன்மதம் பிறர்மதமென்றும், தன்கடவுள் பிறர் கடவுளென்றும், தன்சமயம் பிறர் சமயமென்றும், தன்னவர் அன்னியரென்றும் பட்சபாதமின்றி ஒவ்வோர் மதஸ்தாபகர்களின் குணாகுணச் செயல்களையும் அம்மத ஸ்தாபகத்தால் மக்கள் சீரடைந்த சுகங்களையும் தேற விசாரிணைப்புரிந்து தாங்களும் அச்சுகத்தை அனுபவித்து ஏனையோருக்கும் அச்சுகத்தை காட்சியாகவும், அநுபவமாகவும் விளக்குவரேல், இன்னமத ஸ்தாபகரால் மநுகுலத்தோர் இன்னின்ன சீர்பெற்று இன்னின்ன சுகபலன் அநுபவித்து வருகின்றார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளங்கும். அவற்றின் காட்சியாலும் அநுபவத்தாலும் மற்ற மக்கள் முன்னேறி மனக்களங் கங்களற்று மகா நிப்பானம்பெறுவார்கள்.

இதுவே உலகமாக்களுக்கு விசாரிணையுற்ற விவேகமிகுத்தோரளிக்கும் வித்தியாதானமென்னப்படும்.

இத்தகையக் களங்கமற்ற மத விசாரிணையை விடுத்து களங்கமுற்ற மதவிசாரிணைப் புரிவோமாயின் விசாரிப்பவர்களுக்கே அதஅதனுண்மெய் விளங்காது மயங்குவதுடன் அவர்களைப் பின்பற்றியவர்களும் அதிமயக்கமுற்று அழியவேண்டியதேயாம்.

- 2:45; ஏப்ரல் 21, 1909 -