பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 105

30. பலிபூசை விவரம்

பலி என்பதின் பொருள் சோறு, பூர்வகாலத்தில் புத்தசங்கத்தோருக்கு பௌத்தக்குடிகள் கொண்டுவந்தளிக்கும் சோற்றினை ஓரிடம் குவித்துவைக்கும் இடத்திற்கு (பலிபீடமென்றும்) பெயர்.

சமணமுநிவர்கள் பாத்திரம் ஏந்தி வெளியில் சென்று புசிப்பவர்கள் நீங்கலாக ஆச்சிரமங்களிலுள்ளவர்களுக்கு குடிகள் வட்டித்த சோற்றினை பீடங்களில் கொட்டி முநிவர்களை வலம்வந்து வணங்கி பூசிப்பது வழக்கமாம்.

அம்மனைக்கொண்டாடும் ஆடிமாதப் பௌர்ணமி பத்தாநாள் உச்சாகமாகுந் தசரத்தன்று மடத்தின் முன்னுள்ள பீடத்தில் குடிகள் யாவரும் பொங்கலிட்ட சாதமாம் சோற்றினைக் குப்பலாகக் கொட்டி கும்பமென்றும், கும்பாபிஷேகமென்றும், பலிபூசை என்றும் கூறி அச்சோற்றினை சகல ஏழைகளுக்கும் அளித்து அன்னதானம் என்றும் வழங்கிவந்தார்கள்.

இத்தகைய சுத்ததன்மச் செயலானது புத்த தன்மத்தைத் தழுவியுள்ளவரையில் நிறைவேறி வந்து அசத்திய தன்மங்களைப் பரவச்செய்வோர் ஆடுகளையும், மாடுகளையும், குதிரைகளையும் சுட்டுத்தின்று மதுமாமிஷமயக்கத்தால் உள்ள மொழிகளின் பொருட்களை உணராது தங்கள் தங்கள் மனம்போனப்போக்கில் வார்த்தைகளின் பொருளை மாற்றிவிட்டார்கள்.

அத்தகைய சத்தியதன்ம வழக்கமானது விசாரிணையின்றி (வரிகள் சிதைந்து போயின)

முன்கலை திவாகரம்

பலியென்னும் பெயர், பலியேயையமு /..... (சிலவரிகள் தெளிவில்லை)
சோறு மாகும்.

மணிமேகலை

கடவுட்பீடிகை பூப்பலி கடி கௌ / கலம்பகர் பீடிகை பூப்பலி கடிரெ

பின்கலை நிகண்டு

பீடி கையாவணம்பூ ந்தட்டொடு பீடமும்
பூப்பல்லி - மல்லிகை மலரொத்த சோற்றுக்குவியல்
ஆவணம் - சோறு
பலியிடுதல் - சோறுகொண்டு வந்தீதல்
பலியேற்றல் - பிட்சாபாத்திரத்தில் சோற்றை வாங்கிக்கொள்ளுதல்

மணிமேகலையில் உண்டிகொடுப்போர் உயிர்கொடுப்போரே என்னும் சிறப்புமொழிக்கு மாறாக உண்டிகொடாது உயிர் வதைப்பதே மேலென்று ஏற்றுக் கொண்டார்கள்.

இத்தகைய செயல்களையே சத்தியதன்மத்திற்கு மாறுபட்ட அசத்தியதன்மம் என்று கூறப்படும்.

- 3:4; சூலை 7, 1909 –

31. ராமருக்குச் சீதை தங்கை

வினா : மாரிகுப்பம் சாக்கைய பௌத்த சங்கத்தில் இம்மதி 3-ம் 4 ஆம் நாட்களில் செய்தப் பிரசங்கத்தையுங் கேட்டு மகிழ்ந்தேனெனினும் 3-7-09 ல் செய்தப் பிரசங்கத்தில் ராமருக்கு சீதை தங்கையாக வேண்டுமென்று சொன்னதைக் கேட்டு சங்கைக்கிடமாயிற்று. வேறு சிலரும் இவ்விதமாகவே புகலக் கேட்டிருக்கிறேன்.

தி.ஆ. பார்த்தசாரதி செட்டியார், மாரிகுப்பம்.

விடை : வாரணாசியில் சுகந்தகாவென்னும் அரண்மனையில் தசரதனென்னும் ஓரரசனிருந்தார். அவருக்கு இராமனென்றும், இலக்கண னென்றும் இரண்டு ஆண்பிள்ளைகளும், சீதையென்ற ஓர் பெண்பிள்ளையும் இருந்து தாயாரிறந்தவுடன் தசரதன் வேறு விவாகஞ் செய்துகொண்டு அவ்வம்மனுக்கும் ஓர் ஆண்குழந்தை பிறந்து பரதனென்னும் பெயரளித்து வாழ்ந்துவருங்கால் மறுதாயின் மாறு பாட்டினாலும், இராமர் பனிரண்டு வருடம் வனவாசம் இருக்கவேண்டும் என்னும் தனது ஜாதகக்குறிப்பின் வினைப்பயனாலும் காட்டிற்கு ஏகும்படி ஆரம்பித்தார். தனது தம்பி இலக்கணருந் தொடர்ந்தார்,