பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106 / அயோத்திதாசர் சிந்தனைகள்

தங்கை சீதையுந் தொடர்ந்தாள். மூவரும் வனசஞ்சாரிகளாய் அங்கங்குள்ள மடங்களில் தங்கி ஞானவிசாரிணைப் புரிந்து வந்தார்களென்பதை வசிஷ்டஸ்மிருதியிற் கண்டறியலாம்.

இம்மூவரும் வெளியேறிய ஒன்பதாமாண்டில் தசரதர் இறந்துவிட்டார். பட்டத்திற்கு ஒருவருமில்லாதபடியால் சிறியதாயார் பரதனுக்குக் கட்டவேண்டுமென்று ஆரம்பித்தாள். மந்திரிகளவற்றைத் தடுத்து காட்டிற் சென்றிருக்கும் இராமரே பட்டத்திற்கு உரியவரென்று கூறியதின்பேரில் பரதன் இராமரை அணுகி வணங்கி வரவேண்டுமென்று கோறினான்.

இராமருடைய சஞ்சாரகாலம் மற்றும் மூன்று வருடம் இருந்தபடியால் வைக்கோலினாற் செய்திருந்த தனது பாதரட்சத்தைக் கழற்றி பரதன் வசமளித்து இதைக் கொண்டுபோய் ராஜபீடத்தில் வைத்து இராட்சியத்தைப் பாதுகார்த் திருங்கோளென்று பரதனுடன் இலக்கணரையும், சீதையையுங் கூட்டியனுப்பி விட்டு பனிரண்டு வருட முடிந்தபின் இராமர் வாரணாசிச் சென்று சுகந்தகாவென்னும் அரண்மனையில் தங்கி அரசு செலுத்தி தனது காலத்தைக் கழித்துவிட்டார்.

இதுவே நாம் பிரசங்கத்திற் கூறிய ராமரது சரித்திர சுருக்கம்.

இந்த சரித்திரத்தைத் தாங்களே வாசித்தறிந்துக் கொள்ளவேண்டுமானால் பிராகிருதபாஷையிலிருந்து மொழி பெயர்த்திருக்கும் அடியிற்குறித்துள்ள இங்கிலீஷ் புத்தகத்தை வாசித்தறிந்துக்கொள்ளுவீராக.

THE STUPA OF BHARHUI - A BUDDHIST MONUMENT.
BY ALEXANDER CUNNINGHAM, C.S.I., C.I.E.
LONDON, 1879
DHASARATHA JATAKA.
(Page 72.)
Place - Baranasi; King - Dasaratha; Palace - Suchandaka.

The queen had two sons and one daughter. The elder son was the sage Rama by name, the second the Prince Lakkhana, the daughter the Princess Sita. Afterwards the queen died. The King's second wife had a son Prince Bharata.

- 3:5, சூலை 14, 1909 –

32. புத்தமதமும் அருகமதமும்

வினா : இத்தேசத் தமிழ்க்குடிகளிற் சிலர் புத்தமதம் வேறு, அருகமதம் வேறென்றுங் கூறுகின்றார்களே.

வே. ப. குலசேகரதாசன், வேலூர்.

விடை : சகஸ்திரநாம பகவனென்றும், ஆயிரநாமத்தால் வாழியனென்றும், வழங்கும் புத்தபிரானுக்கே அருகனென்னும் பெயரும் உரியதென்பதை அடியிற் குறித்துள்ள பின்கலை நிகண்டால் அறிந்துக்கொள்ளலாம்.

11-வது நிகண்டு தகரவெதுகை

புத்தன் மால் அருகன் சாத்தன்

ரகரவெதுகை

தருமராசன்றான், புத்தன் சங்கனோ டருகன்றானும்.

உலகரட்சகனை வடதேசமெங்கும் பகவனென்றும், புத்தரென்றும் வழங்கிவருவது போல் தென்தேசமெங்கும் இந்திரரென்றும், அருகரென்றும் விசேஷமாகக் கொண்டாடி வந்தார்கள்.

இத்தேசத்தோர் இந்திரரென்று கொண்டாடிவந்த விஷயத்தை மணிமேகலை, சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், காசிக்கலம்பக முதலிய நூற்களில் இந்திரவிழா வென்றும், இந்திர திருவென்றுங் கொண்டாடி வந்த உற்சாக நாட்களால் அறிந்துக் கொள்ளலாம்.