பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 117

இத்தகைய பரதகண்டமென்று இத்தேசத்தை வழங்கிவருங்கால் இத்தென்பரதம், வடபரதமெங்கும் புத்தபிரானை இந்திரரென்றும், இந்திர பூசையென்றும், இந்திர விழாவென்றும் மிக்க ஆனந்தத்துடன் இந்திரரென்னும் பெயரைப் பிரபலமாகக் கொண்டாடிவந்தார்கள்.

சித்தார்த்தி என்னும் புத்தபிரானை இந்திரரென்று கொண்டாடிய காரணம் யாதென்பீரேல், பெண்ணிச்சையாம் காமியத்தை வென்று பஞ்ச இந்திரியங்களை அடக்கி ஜெயம்பெற்று மகாஞானிகளாம் வானவர்களுக்கு அதிபராக விளங்கின படியால், அவரை இந்திரர், ஐந்திரரென்றும், அவரது தன்மத்தை ஐந்திர தன்மம், இந்திர தன்மமென்றும், அவரை சிந்திப்பதை இந்திரபூசையென்றும், அவரைக் கொண்டாடும் நாட்களை இந்திர விழாவென்றும், அவரைக்கொண்டாடுந் தேசத்தை இந்திரர்தேசம், இந்திய தேசமென்றும் வழங்கிவந்தவற்றுள் வடநாட்டை வடயிந்தியமென்றும், தென்னாட்டை தென்னிந்தியமென்றும் நாளதுவரையில் வழங்கிவருகின்றார்கள்.

சீவக சிந்தாமணி

ஆசையார்வமோ டைய மின்றியே / யோசைபோயுல குண்ணநோற்றபி
னேசுபெண்ணொழித் திந்திரர்களாய் / தூயஞான மாய்த் துறக்கமெய்தினார்

அருங்கலைச்செப்பு

இந்தியத்தை வென்றான் தொடர் பாட்டோடாரம்ப / முந்திதுறந்தான் முனி.

திரிக்குறள்

ஐந்தவித்தா னாற்றல் அகலவிசும்புளார்க் கோமான் ! இந்திரனே சாலுங்கரி.

அறநெறிச்சாரம்

இந்தியக்குஞ்சரத்தை ஞானப்பெருங்கயிற்றால்
சிந்தனைத்தூண் பூட்டிச் சேர்த்தியே - பந்திப்பர்
இம்மெயப்புகழும் இனிச்சொல்கதிப்பயனும்
தம்மெய்த் தலைப்படுத்துவார்.

காசிக்கலம்பகம்

புரவுபூண் டிந்திர திருவொடும் பொலிந்து / முடிவினு முடியா முழுநலங்கொடுக்கும்.

மணிமேகலை

இத்திரகோடனை விழாவணிவிரும்பி / வந்துகாண்குரூஉ மணிமேகலாதெய்வம்
இந்திரரெனப்படு மிறைவ நம்மிறைவன் / றந்த நூற்பிடகம்.

சிலப்பதிகாரம்

அந்தரசாரிக ளறைந்தனர் சாற்றும் / இந்திரர் வியார மேழுடன் போகி.
கப்பத்திந்திரர் காட்டிய நூலின் / மெய்ப்பாட்டி யற்கை விளங்கக் காணும்.

புத்தபிரானையே இத்தேசவாசிகள் யாவரும் இந்திரரென்று கொண்டாடிவந்த காரணத்தால் குடிகள் யாவரையும் இந்தியர்களென்றும் வாசங்செய்யும் தேசத்தை இந்திரர் தேசமென்றும் இந்திய தேசமென்றும் வழங்கிவருகின்றார்களன்றி வேறு காரணங்கிடையா.

இத்தேசத்தில் நூதனமாகக் குடியேறியவர்களாம் வேஷபிராமணர்களுக்கு இதனந்தரார்த்தந் தெரியாது. தங்களை இந்துக்கள் என்றும், தங்கள் மதத்தை இந்து மதமென்றுஞ் சொல்லிக் கொண்டே திரிகின்றார்கள்.

தெரியாமலே தங்களை இந்தியர்கள் என்றும் இந்துக்கள் என்றுஞ் சொல்லி வருகின்றார்கள் என்பதை அடியிற்குறித்த விஷயங்களா லறிந்துக்கொள்ளலாம்.

அதாவது உலகிற் தோன்றியுள்ள மார்க்கங்களில் புத்தரென்னும் ஒருவரிருந்தார். அவரால் போதித்த மார்க்கத்தை புத்தமார்க்கமென்றும், கிறீஸ்துவென்னும் ஒருவரிருந்தார். அவரால் போதித்த மார்க்கத்திற்கு கிறிஸ்து மார்க்கமென்றும், மகம்மது என்பவர் ஒருவரிருந்தார். அவரால் போதித்த மார்க்கத்திற்கு மகம்மது மார்க்கமென்றும் வழங்கிவருகின்றார்கள்.

இவைபோல் வேஷபிராமண மதத்தோர் தங்களை இந்திய மதத்தோரென்று கூறுவதில் இவர்களது மார்க்கத்தைப் போதித்த இந்து இந்தியர் என்பவர் எவரேனுமிருந்தாரா. அவரது மார்க்கத்தை எப்பாஷையில் போதித்தார். இவை களுக்கு மாறுத்திரங் கூற யாதோர் ஆதரவுங் கிடையாது. வெறுமனே தங்களை இந்தியர்கள் இந்துக்களென்று கூறித்திரிபவர்கள்,