பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 121

உண்ணாவிருந்த சுட ருச்சிக் கெழுந்தனவொ வென்செய்கோம் யாம்
தண்மெய்யெழுந்த சுடர் தார்போன் மறைந்தனவா லென்செய்கோம்
யாம் கருணையே வோருருவாய்க் காட்டி மறைந்தனனோ வென்செய்கோம் யாம்
அருணனே யருளுங் கொண்டோதி மறைந்தனனோ வென் செய்கோம் யாம்
குமுதத்தில் வீற்றானை குவலயத்திற் காணாதா லென்செய்கோம் யாம்
அமுதத்தின் வாக்கை யடக்கி மறைந்தானே யென்செய்கோம் யாம்
செவிக்கின்பமா யுரைப்போன் சேவைத் துறந்தோமே யென்செய்கோம் யாம்
புவிபாரம் நீக்கவந்தோன் போதம் மறைந்தனவா லென்செய்கோம் யாம்
மறுளறுத்தப் பெரும்போதி மாதவரைக்கண்டிலமா லென்செய்கோம் யாம்
அருள் நிறைந்த திருமொழியா ரறவழக்கங் கேட்டிலோ மா லென்செய்கோம் யாம்
பொருளறியு மருந்தவத்து புரவலரைக் கண்டிலமா லென்செய்கோம் யாம்
திருவருளே முதற் குருவாய்த் தோன்றி மறைந்தனவே யென்செய்கோம் யாம்.

புத்தபிரான் பரிநிருவாணத்தைப்பற்றி ஆனந்தன் புலம்பியதுபோலவே வீரைமகாமுநிவரும் தனது தேவபாணியிற் பாடியிருக்கின்றார்.

ஆதலின் நமது பௌத்தசோதிரர்களும் தன்மப்பிரியர்களும் கலியுலகம் 5011 சௌமிய வருஷம் மார்கழி மீ 30உ க்குச் சரியான இங்கிலீஷ் 1901 வருஷம் ஜனவரிமீ 13உ குருவாரம் விடியர் காலையில் போகி நாதன் சோதியை வளர்த்தி நீதிமார்க்கத்தினின்று சங்கறர் அந்தியகாலத்தை சிந்தித்து பொங்கலிட்டு புண்ணியதானஞ் செய்யவேண்டுகிறோம்.

வீரசோழியம் அரசர்கள் வைராக்கிய வாக்கு
போதிவேந்தன் சரணலால் அரண் புகேன்

சங்கறரந்திய புண்ணியகாலம் / பொங்கலிட்டுப் புண்ணியஞ்செய்வோர்
தங்குஞ்சங்கத் தண்ணருள் பெற்று / மங்காசெல்வ வாழ்க்கைப் பெறுவர்.

- 3:30; சனவரி 5, 1910 –

43. சைவசமயம்

வினா : தாயுமானவரவர்களின் பாடலில் சைவசமயமென்றும், பொய்வந்துழலுஞ் சமயமென்றும், தெய்வசபையென்றுங் கூறி இருக்கின்றனரே அதின் அந்தரார்த்தங்களென்னை, அவற்றை அறிந்து செல்லும் மார்க்கங்கள் எவை யென்று அடியேனுக்கு விளக்கி ஆட்கொள்ளும்படி வேண்டுகிறேன்.

வி. நடேசன், மதுரை

விடை : அன்பரே, தாம் வினவியக் கருத்தை தெய்வப்புலமெய்த் தாயுமானவர் பாடலின் பரிபக்குவ உரையைக் கொண்டே உணர்ந்துக் கொள்ளலாம்.

அதாவது சைவசமயமே சமயம் சமயாதீதப் பழம்பொருள்
கைவந்திடவு மன்றுள் வெளிக்காட்டு மிந்தக் கருத்தைவிட்டு
பொய்வந்துழலுஞ் சமயநெறி புகுதவேண்டா மடநெஞ்சே
தெய்வசபையை சேர்வதற்கு சேரவாருஞ் ஜெகத்தீரே.

இதன் பொருள்.

சைவம் - தன்னை அறியும், சமயமே சமயம் - காலமே காலமாகும், சமயாதீத காலத்திற்கு அப்புறப்பட்ட, பழம்பொருள் - மெய்ப்பொருள், கைவந்திடவும் - தனது நன்முயற்சியால் கைகூடவும், மன்றுள் வெளிக்காட்டும் - அன்று வுள்ளொளிக்காட்டும், கருத்தைவிட்டு - ஆழ்ந்த ஆராயும் உண்மெய் நழுவி, பொய் வந்துழலும் - அபுத்தமாகுஞ் செயல்கொண்டு திரியும், சமயநெறி - காலநிலையில், புகுதவேண்டாம் - நுழையவேண்டாம், மடநெஞ்சே - பாழு மனமே, தெய்வசபையை புத்தசங்கத்தை, சேர்வதற்கு - அமைவதற்கு, சேரவாரும் - நெருங்கி வரக்கடவீர், ஜெகத்தீரே உலகத்தோரே என்றவாறு.

தன்னையறிந்து அடங்கு நிலைக்கு பாலிபாஷையில் சைவமென்று கூறப்படும்.இவற்றையே அகப்பேய் சித்தர். சைவமாருக்கடி - யகப்பேய் தன்னையறிந்தவர்க்கே சைவமானவிடம் - அகப்பேய் தானாகநின்றதடி

சமயமென்பது ஓர் காலத்தைக்குறிக்கும் மொழியாகும். அதாவது நல்ல சமயத்தில் வந்தீர் நல்ல சமயத்திற் போனீர் என்பதேயாம்.

மக்களுக்குக் காலமென்பது யாதென்பீரேல் பாலகாலம், குமரகாலம், அரசகாலம், மூப்புகாலம், மரணகாலம் ஐந்தினுள் வாலவிளையாட்டுகாலமும், குமர காமிய பாரகாலமும், அரசவாளுகை பாரகாலமும், விசேஷித்தன்று.