பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122 / அயோத்திதாசர் சிந்தனைகள்

மனிதன் தனக்குள்ள இராகத், துவேஷ, மோகமென்னும் பற்றுக்களற தனக்குள்ள நற்செயலையுந் தீச்செயலையுந் தன்னிற்றானே ஆராய்ந்து தீயச்செயல்களை அகற்றி நன்மெய்க் கடைபிடிக்கும் காலமே விசேஷகாலமாதலின், தன்மெயறியுங் காலமே சமயமென வற்புறுத்திக்கூறியுள்ளார். -

சைவமென்பது தன்னை அறிதலும்
சமயமென்பது காலக்குறிப்பும்
பொய்வந்துழலுஞ் சமயமென்பது.
அபுத்தமாம் மதக்கடைகளைப் பரப்பி அதினாற் சீவிப்போர் காலமும்.

தெய்வசபை என்பது ஞான விசாரிணையினின்று உண்மெ உணர்ந்து புலன் தென்பட்டோராகும் தென்புலத்தோர் வாசஞ்செய்யும் புத்தசங்கமேயாகும்.

அதாவது,
மநுக்களென்னும் ஆறாவது தோற்றங் கடந்து தேவர்களென்னும் ஏழாவது தோற்றமுற்றிருக்கும் சமணநிலை கடந்த அறஹத்துக்கள் வாசஞ்செய்யுமிடம் புத்தசங்கமாதலின் அவற்றையே தெய்வசபை என்றுங் கூறியுள்ளார். இவைகளே தாயுமானவர் பாடல்களிற் கூறியுள்ள மெய்ம்மொழிகளின் அந்தரார்த்தங் களாகும்.

- 3:33; சனவரி 26, 1910 –

44. சாக்கைய பௌத்தர் விவாக விளக்கம்
முகவுரை

இவ்வுலகின்கண் பண்டைகாலம் வித்தையிலும், புத்தியிலும், ஈகையிலும், சன்மார்க்கத்திலும் சிறப்புற்றிருந்து தற்காலம் பொறாமெயிலும், வஞ்சினத்திலும், குடியிலும், களவிலும் சீர்கெட்டுவரும் இத்தென்னிந்தியாவில் பற்பல மதங்கள் தோன்றித் தத்தம் மதக் கொள்கைகளைத் தழுவி சுபாசுபக் கிரியைகளை நிறைவேற்றி வருகின்றனர்.

இவ்வகை சுப அசுபக்கிரியைகளில் தாங்கள் எவ்வகை துற்கருமங்களைச் செய்யினும் தங்கடங்கள் தெய்வங்கள் அவற்றை பரிகரிக்குமென்னும் காரிய குருக்களின் மதக்கட்டுண்டு பணத்தினாலும், வாக்கினாலும், தேகத்தாலும் செய்யுந் துற்கருமச்செயல்கள் யாவும் மாட்டினாலும், ஆட்டினாலும், கோழியினாலும், பணத்தினாலும், பூசையினாலும் அப்பாவச்செயல்கள் அகலுமென்றெண்ணி வாளா துற்கன்மங்களைப் பெருக்கி வருகின்றனர்.

துற்கரும பெருக்கத்தால் நற்கருமங் குறைந்து நாளுக்குநாள் மநுக்குல ஒற்றுமெய்க்கெட்டு சதிபுருஷாள் சத்துருத்துவம் மேலிட்டு புத்திரசந்தான போகமும் பட்டு சீரழிவதற்குக் காரணமென்னையெனில் உலக சீர்திருத்தக்காரர்கள் முதன்மெயாகத் தோன்றி ஆதிபகவன் என்றும், ஆதி முனிவனென்றும், ஆதி தேவனென்றும், ஆதி கடவுளென்றும், ஆதி சிவனென்றும், ஆதி மூலமென்றும் காரணப்பெயர்கள் ஆயிரம் பெற்ற ஒப்பிலா சற்குருவாகிய புத்தரையும் அவர் போதித்துள்ள தருமங்களையும், அவர் சங்கங்களையும் மறந்து தங்கள் சீவனோபாவத்தினால் நூதன மதங்களை ஏற்படுத்தி மதக்கடைகளைப் பரப்பி அக்கடைகளில் புத்த தருமங்களில் மட்டும் சிலதைப் பூசலிட்டு புத்தரையும் அவர் சங்கத்தவர்களையும் தாழ்த்தி தங்கள் சீவனோபாயப் பொய் மதக்கடைகளைப் பரவச் செய்வதற்கு பொய்ப்புராணங்களாகும் பற்பலக் கட்டுக்கதைகளை ஏற்படுத்தி உலகொளியாக விளங்கும் சற்குருவின் சரித்திரங்களையுங் கெடுத்து அவர் நீதிவழுவா சங்கத்தவர்களுக்கும் தாழ்ந்த சாதிப் பெயர்களைக் கொடுத்து நாளுக்குநாள் நசித்து வரும் வஞ்சினச் செயல்களே சீரழிவுக்குக் காரணமென்னப்படும்.

சற்சங்க விருத்தியிலிருந்த சாதுக்களும் நாளுக்குநாள் துற்சங்க விருத்தியாகும் பொய்மதக்கடைகளில் பிரவேசித்து பொய்யை மெய்யெனப் பிதற்றித்திரிந்த போதினும் அவரவர்களுக்குள்ள சுபாசுபக் காரியங்கள் யாவற்றிலும் புத்தருமக் கிரியைகளையே நிறைவேற்றி வருகின்றார்கள்.