பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130 / அயோத்திதாசர் சிந்தனைகள்

நிறைவேற்றுவதுடன் அரச சின்னங்களாகும் புத்ததரும விருதுகளையும், கிரியா சம்மந்தங்களையும் விடாது நிறைவேற்றிவருகின்றோம்.

அதாவது குருகுல அரசர்களுக்குள் மங்கை பருவமடைந்து பெண்களை விவாகஞ் செய்துவந்தார்கள். அதுபோல் நாமும் பருவமடைந்த பெண்களை விவாகஞ் செய்துவருகின்றோம். அவர்கள் சாதகவோலைப் பார்ப்பதுடன் தேகபொருத்தமும் பார்த்து விவாகம் நடத்தி வந்தார்கள். நாம் சாதக வோலை ஒன்றைமட்டும் பார்த்து தேகபொருத்தம் பாராது கறுப்பு சிவப்பென்னும் அழகு பொருத்தம் பார்த்து விவாக முடிந்த நாலைந்து தினத்துள் கலகத்தையும், துக்கத்தையும் பெருக்கிக் கொள்ளுகின்றோம்.

- 3:38; மார்ச் 2, 1910 –

அவர்கள் ஊர்வலம் வருவதுடன் கோவில் வலமும் வந்து மணவரையிற் பூநூல் தரித்துக் கொள்ளுவார்கள். அதுபோலவே நாமும் ஊர்வலம் வருங்கால் அம்மன் கோவிலை வலம்வந்து மணவரையிற் பூநூல் தரிப்பது வழக்கமாயிருக்கின்றது. அவர்களுக்குப் பெண் நியமனமானவுடன் கையிற் கங்கணங் கட்டுவது வழக்கமாயிருந்தது. அதுபோலவே நாமும் விவாக காலங்களில் கங்கணங்கட்டி வருகின்றோம். அவர்கள் ஊர்வலம் வருங்கால் வெள்ளை யானை, வெள்ளைக்கொடி, வெண்குடை, வெண்சாமரை முதலிய பதிநெட்டு விருதுகளுடன் வந்தார்கள். அதுபோலவே நாமும் வெண்பிறை முடியென்னும் வெண்பிறைப் பாகை, வெண்ணங்கி, வெள்ளைகுதிரை, வெள்ளைக்குடை, வெண்சாமரை முதலிய விருதுகளுடன் ஊர்வலம் வருகின்றோம் அவர்கள் தங்கட் பெண்ணைத் தாய்மாமன் பாதத்தில் விழச்செய்து மணவரைக்குக் கொண்டுவருவது வழக்கமாயிருந்தது. அதுபோலவே நாமும் தாய்மாமன் பாதத்திற் பெண்ணை விழச் செய்கின்றோம்.

அவர்கள் அரசாணிக்கால், குடவிளக்கு, பஞ்சவர்ணப் பானைகள் முன்பு ஓமகுண்ட சோதியை வளர்த்து அதன் சாட்சியாக மாலையிடுவது அல்லது பொற்சாட்டில் பொட்டுக்கட்டுவது வழக்கமாயிருந்தது. அதுபோலவே நாமும் அரசிலைக்கால் நாட்டி, குடவிளக்கிட்டு பஞ்சவர்ண பானைகளமைத்து ஓமகுண்ட சோதியைவளர்த்து நமது எழியநிலமைக்குத் தக்கவாறு நூல் சரட்டில் (தாலி) என்னும் ஓர் மங்கல்யச் சின்னத்தைக் கட்டிவருகின்றோம்.

அவர்கள் மங்கல்யம் - முடிந்தவுடன் நவரத்தினங்களாலும் பொன்னரிசியாலும் ஆசீர் கூறி அருந்ததி என்னும் வடமீனைக் காட்டி வந்தார்கள். பராய மதஸ்தர்களால் நாம் நசுங்குண்டு எழிய நிலமைக்கு வந்துவிட்டபடியால் நவரத்தினங்களுக்குபதிலாக பலவருணபுட்பங்களும் பொன்னரிசிக்கு பதிலாக மஞ்சட்கலந்த அரிசியுங்கொண்டு ஆசீரிட்டு அருந்ததியைக் காட்டிவருகின்றோம்.

அவர்கள் விவாகமுடிந்த மறுநாள் பெண்ணும் பிள்ளையும் பொற்குடங்களில் மஞ்சள் நீரும் சந்தனக்குழம்புங்கொண்டு நீராடிவந்தார்கள். அதுபோலவே நாமும் மட்குடங்களில் மஞ்சள் நீர்க்கொண்டு விளையாடிவருகின்றோம்.

இவ்வகைக் கிரிகைகளின் அந்தரார்த்தமும், மணவரையிற் பெண்ணும் பிள்ளையும் கொடுக்கும் சத்தியவாக்குபாடுகளும் பூர்வத்திலிருந்த தன்மகன்ம குருக்களாகிய வள்ளுவர்கள் புத்த தருமங்களைத் தழுவி நீதிவழுவா ஒழுக்கத்திலும் சீலத்திலும் இருந்த காலத்தில் சத்தியதருமங்களையும் கிரியா சம்மந்தங்களையும் விளக்கிவந்தார்கள். தற்காலத்திலுள்ள வள்ளுவர்கள் பராயர் மதாசாரங்களைத் தழுவி ஒழுக்கமும் சீலமும் கெட்டு பொய்ப்பிராமணர்களைப் போல் பொருளாசை மேலிட்டு பராயர்கள் போதனைக்குட்பட்டு மதவித்தியாசமானதுமன்றி சாதி வித்தியாசமும் ஏற்படுத்திக்கொண்டு நமது வீடுகளில் சாப்பிடாமல் தங்கள் சாதியை உயர்த்திக்கொண்டு நமது கருமக்கிரியைகளைமட்டும் அதினந்தரார்த்தம் உணராது நடத்திவருகின்றனர். இத்தகைய வள்ளுவர்கள் புத்ததருமத்தைத் தழுவியிருந்தகாலத்தில் களங்கமற்ற நெஞ்சினர்களாய் நம்முடன் கலந்து புசித்து வந்ததாக அடியிற் குறித்துள்ள சரித்திர நூலால் விளங்குகின்றது.