பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 135

அதுபோல் நமது மூதாதைகளின் புத்தரும அரசாங்கம் இருக்குமளவும் குடை செடி விருதுகளாகிய பற்பல சின்னங்களுடன் ஆனந்தங் கொண்டாடி வந்தோம். தற்காலம் பராய மதஸ்தர்களின் வஞ்சினத்தால் நமது அரசபோகங் களும் குருப் பிரதாபங்களும் நசுங்குண்டு எழிய நிலையிலிருக்குங்கால் பூர்வ ஆடம்பரங்களைச் செய்வதில் மேலுமேலும் எழியநிலையுற்று துக்கவிருத்தி அடைகின்றோம்.

இனியேனும் அவ்வகை ஆடம்பரச் செயல்களை நிறுத்தி குலகுருவின் போதனா ஒழுக்கத்தினின்று காலத்திற்கும் செயலுக்குந் தக்கவாறு நமது விவாக வீண் சிலவுகளை சுருக்கி சீலத்தையும் ஒழுக்கத்தையும் பெருக்கவேண்டு மென்பது சங்கத்தோரின் நன்னோக்கமாதலால் இதனை வாசித்துணரும் ஒவ்வோர் அன்பர்களுந் தங்கள் யுக்திக்கு எட்டியவரையில் விவாக சீர்திருத்தங் களையும், விவாகம் முடிந்தவுடன் மணமக்கள் கடனென்னும் கவலையில்லாமல் சுகத்தை அனுபவிக்கும் பாதைகளையும் எழுதி சங்கத்திற்கு அனுப்புவார் களானால் அவைகளை ஒருங்குசேர்த்து நமது குலத்தாரின் பெருங்கூட்டமிட்டு பெருந்தொகையோர் சம்மதப்படி விவாக சீர்திருத்தம் செய்துக்கொள்ளலாம்.

திருப்பதி, மாவலிபுரம், சிதம்பரம், ஸ்ரீரங்கம், காஞ்சிவுரம், திருவாரூர் மற்றமுள்ள பூர்வ கட்டிடங்கள் யாவும் புத்தரும் சமண முநிவர்களின் மடங்களா அல்லது தற்கால நூதன மதஸ்தர்களின் கட்டிடங்களாவெனத் தெரிந்துக் கொள்ள விருப்பமுடையவர்கள் நமது கருணை தங்கிய அரசாங்கத்தாரால் வித்தையிலும் புத்தியிலும் மிகுத்த ஒவ்வோர் ஆங்கிலேயர்களை நியமித்து இத்தேசத்திலுள்ள பூர்வக் கட்டிடங்களைத் தோண்டியதின் விருத்தாந்தங்களை தெரிவிக்கும்படி விட்டிருந்ததில் அவர்கள் ஒவ்வொருவரும் தங்களாற் கூடியவரையில் அங்கங்கு புதைக்கப்பட்டிருந்த சிலாசாசனங்களையும் சிலைகளையும் கண்டெடுத்து அப்படங்களுடன் சரித்திரங்களையும் விவரித்து புத்தகங்களையும் அச்சிட்டிருக்கின்றார்கள். அவர்கள் யாவரையும் எழுமூர் மியூசியம் புத்தகசாலையிலும், அடையாறு தியாசபி புத்தகசாலையிலும் சென்று வாசித் துணர்ந்துக் கொள்ளலாம். ஆயினும் பொய்ப் புராணக் கட்டுக்கதைகளை புலம்பித்திரியும் போலிப் புலவர்களுக்கு பூர்வ சரித்திரங்களை விளக்குவது செவிடன் காதில் சங்கு ஊதுவதுபோலாம்.

- 3:41; மார்ச்23, 1910 –

45. கிறீஸ்து நமக்காகப் பாடுபட்டார்

வினா : நமது நேயராம் கிறீஸ்தவர்கள் கிறீஸ்துவானவர் நமக்காகப் பாடுபட்டார். நம்முடைய பாபங்கள் நீங்கிவிட்டனவென்று கூறுகின்றார்கள். அவர்கள் வாக்கை மறுத்து முன் செய்துள்ள பாவங்கள் நீங்கிவிட்டதா இனி செய்யும் பாவங்களும் நீங்கிவிடுமாவென்று வினவுங்கால் யாதொரு விடையுமின்றி திகைக்கின்றார்கள்.

வி. ஏபிராம், குண்டூர்

விடை : முன் செய்துள்ள பாவத்திற்காக ஒருவர் தோன்றி பாடுபட்டாரென்னும் உறுதி உள்ளத்தில் லயிக்குமாயின் பின்னும் பாவங்களுக்காய் மற்றொருவர் தோன்றி பாடுபடுவார் என்னும் தைரியத்தால் தினேதினே பாவங்களை அஞ்சாது செய்வதற்காகும்.

ஆதலின் அவரவர்கள் அறியாது செய்த பாவத்திற்காய் ஒருவர் வந்து பாடுபட்டார் என்பது வீண்மொழியேயாம்.

கிறீஸ்து நமக்காகப் பாடுபட்டார் என்னும் மொழியின் அந்தரார்த்தம் யாதெனில், எருசலேமிலுள்ள விவேகிகள் கிறீஸ்துவின் மகத்துவத்தைப் பற்றிப் பேசுங்கால், அவர் தான் கண் கண்ட ஞானத்தின் காட்சியை தன்மட்டிலும் அனுபவித்துக் கொள்ளாது கருணைகொண்டு நமக்கும் அந்த பேரானந்த ஞானத்தை ஊட்டி ரட்சிக்க முயன்றபடியால் விவேகமற்றோர்களாகிய சதிசேயரும், பரிசேயரும் அவரைத் துன்பப்படுத்திக் கொல்ல ஆரம்பித்தார்கள். அதன் செயல் கொண்டு கிறீஸ்து நமக்காகப் பாடுபட்டார் என்று கூறியுள்ளார்கள்.