பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138 / அயோத்திதாசர் சிந்தனைகள்


தீயவினையைச் செய்தால் தீய துன்பத்தை அநுபவிப்பாயென்னும், கட்டளையாகிய விதியானதை அநுபவிக்குங்கால் கட்டளையை மீரியச் செயலென்று உணர்ந்தும் தீவினையைச் செய்து வருவானாயின் மேலுமேலுந் துக்கத்தை அநுபவிப்பான். விதியின்படி தீவினைகளை அகற்றி நல்வினையில் நடப்பானாயின் நித்தியசுகத்தை அநுபவிப்பான். இத்தகைய செயல்களைக் கொண்டே விதியின் பயனே பயனென்று வற்புறுத்திக் கூறியுள்ளார்கள்.

ஆதி விதி, தலைவிதி என்னும் பூர்வவினையை உணராதார்க்கு அதனந்தரார்த்தம் விளங்கவே விளங்காவாம். காலங்கள் நேர்ந்தவிடத்து இதன் கருத்தை விரிவாகக் கூறுவாம். - 3:45; ஏப்ரல் 20, 1910 –

48. தேக ஊரல்

வினா : சில வைத்தியர்களும் வாதிகளும் “தன் தேகம் ஊரலற்றால் தாம்பரம் ஊரலறும்” எனக் கூறுகின்றார்கள். அதன் கருத்தை வினவுங்கால் தேகவூரல் அவர்களுக்கு விளங்கவில்லை. ஏ. தருமலிங்கம், இரங்கூன்

விடை : “தன் தேகம் வூரலற்றால் தாம்பரம் வூரலறு” மென்னும் மொழியானது இரசவாதிகளுக்கே மொழிந்ததாகும். அதாவது அம்பரமென்னும் பொன்னானது தாய் அம்பரமாம் செம்பிலமைந்துள்ளதுபோல் தேய்வகமாம் தெய்வநிலை தேகமென விளங்கநிற்றலால் தேகத்துள்ள இராகத் துவேஷ மோகமென்னும் ஊரலற்ற போது தெய்வமென்னும் தேஜசும், சுயம்பிரகாசமுந் தோன்றும்.

தேகத்துள்ள இராகத் துவேஷ மோகமென்னும் திரிவூரலை அகற்றும் சாதனமுடையோர் செவிகளில் தாம்பரக் குண்டலங்களை அணிந்திருப்பினும் தேக வூரல் அறுந்துக்கொண்டேவருங்கால் செவியில் அணிந்துள்ள செம்பினூரலும் தாய் அம்பரமாம் பொன் பிரகாசமுண்டாம். அதுகொண்டே இரசவாதம் செய்து கெடும் வாதிகளைக் கண்டிப்பான் வேண்டி, “செம்பதுகளிம்பதற்றால் செம்பொன்னா” மென்னு முதுமொழிக்கிணங்க தேகவூரலை அறுக்கும் பஞ்சசீலத்தில் ஒழுகுவோருக்கு திரிவூரலற்று தேவநிலை மாறுதலும், செவியிலிட்ட செம்பு அம்பரமாய் தேறுதலும் அநுபவக் காட்சியாதலின் வீணாசைகொண்டு வாதமூதாதீரென வேண திருட்டாந்த தாட்டாந்தங்களை விளக்கியுள்ளார்கள். - 3:46; ஏப்ரல் 27, 1910 –

49. அறன் செயல் விரும்பு

வினா: நமது திருவள்ளுவநாயனார் இயற்றியுள்ளத் திரிக்குறளில், அறன்வலி யுறுத்த” லென்னு மொழியின் அந்தரார்த்தம் அடியேனுக்கு விளங்காதபடியால் அதன் பொருள் காட்சிக்கும், அநுபவத்திற்கும் பொருந்த விளக்கி ஆட்கொள்ளும்படி வேண்டுகிறேன். க. சரவண பெருமாள், காஞ்சி

விடை : தாம் வினவிய சங்கை சாம்புனதமாதலின் இழுத்தவர்க்கெல்லாம் கம்பியாகவும், அடித்தவர்க்கெல்லாம் தகடாகவும் அகன்று நீண்டு இடங் கொடுக்கும் மொழியாதலின், எச்சமயத்தோருந் தங்கள் தங்கள் சமயத்திற்குத் தக்கவாறு பொருள்படுத்திக் கொள்ளுகின்றார்கள். அச்சமயங்களும் பூர்வ தன்மத்தினின்றே தோன்றியதாதலின் பொருளும் பொருந்துவதாகவே விளங்கும்.

அவ்வகை விளங்கினும் அந்தரார்த்தப்பொருள் அதுவாகாவாம்.

அதாவது,“அற” மெனு மொழியை இல்லறமென்றும், துறவறமென்றும் இருவகையாகக் கூறப்படும்.

வீரசோழியம் - மனையறச்செயல்

கொடுத்தலும் அளித்தலுங் கோடலும் இன்மெயும்
ஒழுக்கத்தொடு புணர்தலும் புணர்ந்தோர் பேணலும்
வழுக்கில் பிறவு மனையற வகையே.