பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 139

துறவறச்செயல்

துறவும் அடக்கமும் தூய்மெயுந் தவமும்
மறவினையோம்பலு மறத்தினை மறுத்தலும்
மனையினீங்கிய முனைவர்த மறமே.

இவ்வகைப் பிறிவால் ஒருவனைநோக்கி அறஞ்செய்ய விரும்பென்னில் அவன் துறவறத்தைச் செய்ய விரும்புவதா, இல்லறத்தைச் செய்யவிரும்புவதா இரண்டையுஞ் செய்யவேண்டுமென்னில் நட்டாற்றில் விட்டவனைப்போலும் இரண்டு எஜமானனிடத்தில் ஒரு ஊழியன்படும்பாடுபோலும் முடியும்.

துறவறத்தையும், இல்லறத்தையும் ஒருவனே செய்யலாமென்று கூறுவதாயின் குடும்பிக்கு மாறுதலாக சங்கங்களையும், மடங்களையும் ஏற்படுத்தியுள்ள அநுபவமுங் காட்சியும் இராவாம்.

இல்லறத்தை சரிவர நடத்தியவனே துறவறத்திற்கு உரியவனென சங்கத்திற் சேர்ப்பது அநுபவமாயிருக்க ஈரறத்தையும் ஏககாலத்தில் ஒருவன் செய்வதியல்புக்கு மலைவாதலின் விவேகமிகுத்தோர் திருமொழி ஒருக்காலும் மலைவுறாதாம். “அறன்செயல் விரும்” பென்னும் மலைவில்லா மொழியையே ஆதாரமாகக் கொண்டு அறன்வலியுறுத்தலெனக் கூறியுள்ளார்.

அதற்குப் பகரமாய்த் திருத்தக்கத்தேவர் தானியற்றியுள்ள சீவகசிந்தாமணியில் "முந்து அறன்மொழிந்த பொருள் முற்று" எனக் கூறியுள்ளார். இதற்கு ஆதாரமாகப் புத்தமித்திரனார் தான் இயற்றியுள்ள வீரசோழியத்தில் “வாடாத போதிநெறி நீழன்மேய வரதன் பயந்த அற நூ" லென்றும் மற்றும் யாப்பருங்கலக்காரிகையுள் "மனையற முந்துறவறமும் மண்ணவர்க்கும் விண்ணவர்க்கும் வினையறுக்கும் வகைதெரிந்து வீடொடு கட்டிவை யுரைத்த" போதிவேந்தனும் ஆதிநாதனுமாகிய அறன் செயலை விரும்புமென்னும் ஆண்பால் விகுதி கொண்டே நாயனாருந் தனது கடவுள் வாழ்த்தலில், “பொறிவாயி லைந்தவித்தான் பொய்தீரொழுக்கம் நெறி நின்றார் நீடுவாழ்வா" ரென்னும் அறன் செயலையே வற்புறுத்திக் கூறி புத்தேளான் செயலையும் வல்லபத்தையும் உறுத்திக் கூறுவான்வேண்டி அறன்வலியுறுத்த லென்னும் அதிகாரத்தையும் வகுத்துள்ளார்.

உலகமக்கள் ஈடேற்றத்தைக் கருதி ஈரறமோதிய ஒப்பிலா அப்பனை அறக்கடவுள் என்றும், அறவாழியானென்றும், அறப்பளீசனென்றும் அறனென்றும் வழங்கிவந்தது கொண்டு அறன் கூறியுள்ள முத நூலாம் அற நூலுக்கு வழிநூலும், சார்புநூலுங் கூறியவர்கள் அறனை மறவேலென்றும், அறன்செயல் விரும்பென்றும், அவரது நெறியில் நில்லுமென்றும், அவர் பற்றியபற்றை பற்றுமென்றுங் கூறியிருக்கின்றார்கள்.

காரணமோ வென்னில் மெய்ப்பாட்டியல் சூத்திரம், “தீவினையை வெல்லும் அறவாழி தெய்வம் அஞ்ச” லென்றும்

அவர் பிறந்தது முதல் பரிநிருவாணமுற்ற வரையில் திரிகரணமாம் மனோசுத்தம், வாக்கு சுத்தம, தேகசுத்தமாஞ் செயலையுடையது கண்டு அறன் செயல் விரும்பென்று உறுத்திக் கூறியுள்ளார்கள்.

வீரசோழியம்

எறும்புகடை யானைமுத லெண்ணிறந்த வென்றுரைக்கப்
பிறந்திருந்த யோனிதொரும் பிரியாது சூழ்யோகி
யெவ்வுடம்பி லெவ்வுயிர்க்கும் யாதொன்றா லிடரெய்தி
லவ்வுடம்பி லுயிர்க்குயிரா யருள் பொழியுந் திருவுள்ளம்.
அறங்கூறு முலகனைத்துங் குளிர்வளர்க்கு மழைமுழக்கின்
திறங்கூற வரகதிருஞ் செழுங்கமல நனினாண
வொருமெய்க்க ணீரென்பா னுரைவிரிப்ப வுணர்பொருளா
லருமெய்க் கண் மலைவின்றி யடைந்தது நின்றிருவார்த்தை.
இருட்பார வினை நீக்கி யெவ்வுயிர்க்குங் காவலென
தருட்பாரந்தனி சுமந்த வன்று முத லின்றளவு
மதுவொன்று மலரடிக்கீழ் வந்தடைந்தோர் யாவர்க்கும்
பொதுவன்றி நினக்குரித்தோ புண்ணிய நின் றிருமேனி.

3:47; மே 4, 1910 -