பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 145

மிக்க பயபக்தியுடன் யேவல் புரிந்துவருவானாயின் வைசியனாகப் பிறப்பானென்றும், வைசியனாகப் பிறந்தவன் பிராமணனுக்கும், க்ஷத்திரியனுக்கும் மிக்க பயபக்த்தியுடன் ஏவல்புரிந்துவருவானாயின் அவன் க்ஷத்திரியனாகப் பிறப்பானென்றும், க்ஷத்திரியனாகப்பிறந்தவன் பிராமணனுக்கு மிக்க பயபக்த்தியுடன் ஏவல்புரிந்து வருவானாயின் பிராமணனாகப் பிறப்பானென்றும் வகுத்துப் போதித்து வருகின்றார்கள்.

இத்தகைய நான்குவகை ஜெநநங்களின்தோற்றங்களுக்கும் அவரவர்களுக்கு ஏவல்புரியும் கன்மங்களே காரணமாயின், பரசுராமனென்பவன் க்ஷத்திரியர்கள் கருவில்லாமலே அழித்து விட்டானென்னுங் கதை தோன்றிவிட்டபடியால் வைசியனென்பவன் யாருக்கு ஏவல்புரிந்து க்ஷத்திரியனாகத் தோன்றுவான். அவ்வகைத் தோற்றமுள்ளதாயின் பரசுராமன் கருவறுத்த க்ஷத்திரியக் கூட்டம் வேறென்றே விளம்பல் வேண்டும். இரண்டுவகை க்ஷத்திரியக்கூட்டங்கள் இருக்குமாயின் பிரம்மா புஜத்திற் பிறந்த க்ஷத்திரியக்கூட்டம் தற்காலம் இல்லையென்பதே துணிபாம். இத்தகைய கன்மத்தால் பிரம்மாமுகத்திற் பிறந்த பிராமண கூட்டமொன்றும், பிராமணருக்கு ஏவல் புரிந்து பிராமணனாகப்பிறக்குங் கூட்டமொன்றுமாகிய யிருவகைக் கூட்டத்தோருள் விசுவாமித்திரனென்னும் க்ஷத்திரியன் எந்த பிராமணனுக்கும் ஏவல்புரியாது தன்னுடைய தபோபலத்தால் பிராமணனானா னென்று கூறுகிறபடியால் இவனோர்வகைத் தோற்ற பிராமணனாக விளங்குகின்றது. இம்மூவகை பிராமணர் தோற்றத்துள் பிரம்மாவின் முகத்தில் தோன்றினோர் யதார்த்த பிராமணர்களா, க்ஷத்திரியனாகிபிராமணனுக்கு ஏவல்செய்து தோன்றியவர்கள் யதார்த்தபிராமணர்களா, அன்றேல், க்ஷத்திரியன் தனது தபோபலத்தால் பிராமணனாயது யதார்த்த பிராமணக்கூட்டமா, மூன்றும் யதார்த்த பிராமணக்கூட்டமென்பாராயின் கன்மபாக நிலையறியா மூன்று கூட்டமும்பொய்ப் பிராமணக்கூட்டமென்றே கூறல் வரும். மற்றோர்வகையில் சூத்திரனுக்கு ஏவல்புரியும் பிராமணன் யாவராகப் பிறப்பான். வைசியனுக்கு ஏவல்புரியும் பிராமணன் யாவராகப் பிறப்பான். க்ஷத்திரியனுக்கு ஏவல்புரியும் பிராமணன் யாவராகப் பிறப்பான். இதையும் அவரவர்கள் கன்மத்திற்குத் தக்கப் பிறப்பென்பதாயின் பிராமணனென்னும் பிறவி தோன்றுவதற்கு ஆதாரமில்லாமல் போம். அதாரமில்லாதிருந்தும் பிராமணக்கூட்டம் உண்டென்பாராயின், கன்மபாகை, அர்த்தபாகையற்று ஞானபாகையாம் யாதார்த்தபிராமணக் கூட்டம் இல்லையென்றும் கன்மத்தாலாயப் பிறவிகளின் ரகசியமறியாதோர் எழுதியுள்ளக் கட்டுக் கதைகளென்றும் துணிந்து கூறுவாம்.

- 4:11; ஆகஸ்டு 24, 1910 –

54. பஞ்சபாதகங்களில் ஒன்றாங் குடி

இவ்விடம் குடியென்பவற்றுள் கட்குடி, சாராயக்குடி, கஞ்சாக்குடி, என்பவைகளேயாம். இவைகளின் குணாகுணங்களோவெனில், பித்தத்தை அதிகரிக்கச்செய்யும். அதிமயக்கத்தால் புத்தியைக் கெடுக்கும். அவற்றைக் குடித்தவன் வாய்திறந்து பேசுவானாயின் சகிக்ககூடாத துன்னாற்றம் நாறும். இத்தகைய லாகிரியை அருந்துபவன் சற்று காமாதிகாரனாயிருப்பானாயின் இவைகளின் வெறிமயக்கத்தால் தாய்தங்கை என்றும், அன்னியர் மனைவி தன்மனைவி என்றும், மாமி மாதுலியென்றுணராது கெடுப்பான். சற்றுக் களவுமிகுத்த குணமுள்ளவனாயின் எவ்விதத்தானும் அன்னியர் பொருளைக் களவாடி அவர்களை மனம் வருந்தச் செய்வான். சற்று மிலேச்சக்குடும்பத்திற் பிறந்துள்ளவனாயின் லாகிரியை அருந்தியவுடன் இவன் மித்துரு அவன் சத்துருவென்றும், இவன் யோக்கியன் அவன் அயோக்கியனென்றும், இவன் விவேகி அவன் அவிவேகியென்றும், இவன் சிறியோன் அவன் பெரியோ னென்றுணராது தனது மிலேச்சக்குடும்பத்திற் பிறந்த வழக்கச்செயல்கள் மாறாது கொடூர வார்த்தைகளும், இழிமொழிகளும் தூஷணச்சொற்களுங் கூறி அன்பர்களை மனனோகச்செய்வதுமன்றி அவர்களால் சகிக்க முடியாது