பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 151

வாழைப்பழம் தேங்காய் இவைகளே யாதலின் தேவதைப் பெயர்சொல்லி தேங்காயுடைத்து அவுல் கடலையுடன் சேர்த்துப் புசிப்பதற்கேயாம்.

கருப்பூரத்தைக் கொளுத்துங் குணம் அவ்விடமுள்ளக் கெட்ட நாற்றங்களைப் போக்கி சுத்தஞ்செய்வதற்கேயாம். அதை ஓர் மக்கள் சுகாதார ஔடதமென்றே கூறல் வேண்டும். - 4:18; அக்டோபர் 12, 1910 – 58. சைநரும் சமணரும் சமணரென்பது பௌத்தசங்கத்து செயலுக்குரியப் பெயர், சைனரென்பது பௌத்தமார்க்கத்தினின்று பிரிந்த ஓர் கூட்டத்தோர் பெயர்.

மகடபாஷையில் சமணரென்றும், சகடபாஷையில் சிரமணரென்றும், கூறியுள்ள பெயர் பௌத்த சங்கத்தோர் முதற்சாதன நிலையாகும் இச்சமண முநிவர்களில் தேர்ந்தவர்களையே நமது தேசத்தோர் சித்தர்களென்று அழைத்துவந்தார்கள்.

பின்கலை நிகண்டு

“நீரினிற் பூவில் வானில் நினைந்துழி யொதுங்குகின்ற
சாரண ரெண்மராவர் சமணரிற் சித்திபெற்றோர்.”
சைனரென்பது புத்தருக்குரிய ஆயிர நாமங்களில் ஒன்று.
விரவு சாக்கையனே சைநன் / விநாயகன் சினந்தவிர்ந்தோன்

பாலி நிகண்டு

‘பஞ்சமார ஜீனோதீதி ஜீனா.’

சைநர்களென்பது பௌத்த தன்மத்தினின்று பிரிந்துள்ள ஓர் கூட்டத்தோர் தற்கால சாதியாசாரத்தையும், சமயாசாரத்தையும் அநுசரித்துக்கொண்டு பௌத்த தன்மத்தின் நிருவாணமென்னும் கருத்தரியாது நிருமான உருவத்தை வைத்துப் பூசித்து வருகின்றார்கள்.

மற்றப்படி சன்னியாசிகள் என்போர் பகவனுடைய காலத்தில் நிருமானமாக இத்தேசத்தில் சஞ்சரித்ததுங்கிடையாது. அவர்கள் சரித்திரமுங்கிடையாது.

தற்காலமுள்ள சில சைந கூட்டத்தோர் பகவனது காலத்திலேயே சில நிருமான சன்னியாசிகள் இருந்ததுபோலும் அவர்களை பகவன் கண்டித்தது போலும் மகடபாஷையில் எழுதி இவ்விடம் வந்திருந்த யாத்திரைக்காரர்களிடங் கொடுக்க அவைகளை மொழிபெயர்த்து ஆங்கிலேயர்களால் வெளியிட்டிருக்கின்றார்கள். அதன் காரணமோவென்னில், நிருவாணமென்னும் மொழியின் பொருளறியாது நிருமான ரூபத்தைப் பூசிப்பவர்கள் பகவன் காலத்திலேயே இருந்ததாக ரூபித்து தங்கள் சமயத்தை மேற்படுத்திப் பேசுவதற்கேயாம்.

முற்காலத்திலுந் தற்காலத்திலுங் காட்டு முராண்டிகள் நிருமானமாகத் திரிந்திருப்பார்களன்றி சன்னியாசிகள் நிருமானமாகத் திரிந்திருந்தார்களென்பது பிசகு. அவ்வகைத் திரிவோரை சீலமிகுத்தோர் சேர்ப்பரோ, அவர்களை சன்னியாசிகளென்றுங் கூறுவரோ ஒருக்காலுங் கூறமாட்டார்கள். நிருமான சன்னியாசிகள் இத்தேசத்தில் இருந்ததுமில்லை அவர்களை சன்மானித்தவர்களுமில்லை. - 4:18; அக்டோபர் 12, 1910 –

59. மதக்கடைகளால் சுகமுண்டா? மண்டிக்கடை மளிகைக்கடைகளால் சுகமுண்டா?

மதக்கடைகளென்பது யாதெனில், கல்லுகளாலும், பித்தளைகளாலும், களிமண்களாலும், எலும்புகளினாலும் செய்துள்ள பலவகை சிலைகளைப் பரப்பி இந்தசாமி பெரியசாமி, அந்தசாமி சின்னசாமி, அந்தசாமி மோட்சத்திற்கு நேரேவழிகாட்டுஞ் சாமி, இந்தசாமி எதிரிகளையெல்லாங் கொல்லுஞ் சாமி, அந்தசாமி உங்கள் நோய்களைப் போக்கிவிடுஞ்சாமி, இந்த சாமி உங்கள் பாவங்களையெல்லாம் நீக்கிவிடுஞ்சாமி எனக்காட்டி தட்சணை தாம்பூலம் கொண்டுவாருங்கோளென்றும், உண்டிபெட்டிக்கு காசுகள் போட்டுக்