பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152 / அயோத்திதாசர் சிந்தனைகள்

கொண்டே வாருங்கோளென்றும், இந்த சாமிகள் பெயர்களால் உங்கள் வீடுகளில் வேறு உண்டிகள் சேர்த்து கொண்டுவந்து கொடுங்கோளென்றும், வேறு சாமிகள் உங்களுக்கு சுகங்கொடுக்கமாட்டாது எங்கள் சாமிதான் உங்களுக்கு சகலசுகமும் கொடுக்கும் வேறுசாமிகளை நீங்கள் தொழவேண்டாம் எங்கள் சாமிகளை மட்டிலும் தொழூஉங்களென்றும் கூறி ஏழைகளது பொருள்களை பறித்து தங்கள் தேசங்களுக்குக்கொண்டுபோவதும் தங்கடங்கள் பெண்டு பிள்ளைகளைக் காப்பாற்றிக்கொண்டு சுகசோம்பலுற்றிருப்பதுமாகியச் செயல்களே மதக்கடைச் செயல்களென்றும் அவைகளுக்கான காரியகுருக்களையே மதக்கடை வியாபாரிகளென்றுங் கூறப்படும்.

மண்டிக்கடைகளென்பது யாதெனில், அரிசி, கேழ்வரகு, சோளம், கடலை மொச்சை முதலிய தானியங்களைப் பரப்பிவைத்துக்கொண்டு அது மேலான சரக்கு, இது மேலான சரக்கென்று கூறி துட்டு பெற்றுக்கொண்டு தானியமளப்பது மண்டிக்கடையென்றும், அதனை விற்போர் மண்டிக்கடை வியாபாரிகளென்றும் கூறப்படும். மளிகைக் கடைகள் யாதெனில், உப்பு, புளி, மிளகாய், வெல்லம், நெய், சருக்கரை முதலிய தினுசுகளைப் பரப்பி வைத்துக் கொண்டு, அது நல்லநெய், இது நல்ல வெல்லம், அது புதுப்புளி, இது பழைய மிளகாய் எனக்கூறி துட்டு பெற்றுக் கொண்டு சரக்குகளை விற்பது மளிகைக்கடை என்றும் அவைகளை விற்போர் மளிகைக் கடைக்காரர்களென்றும் கூறப்படும். இம்மண்டிக்கடை, மளிகைக்கடை வியாபாரிகளோ தங்கள் வியாபாரமும் துட்டும் பெருகுவதற்கு மற்றவர்களின் கடை சரக்குகளைத் தாழ்த்தி தங்கள் சரக்குகளை உயர்த்திக்கூறுவது வழக்கமாகும். இவ்விரு கடைக்காரர்களும் தங்கள் சரக்குகளை உயர்த்தி ஏனையோர் சரக்குகளைத் தாழ்த்தித் தங்கள் வியாபாரத்தையும் பொருளையும் பெருக்கிக்கொள்ளுவதாயினும் அவைகளைப் பணங்கொடுத்து வாங்குவோர் தங்கள் பெண்டுபிள்ளைகளுடன் புசித்து பசிதீர்ந்து சுகமடைந்து வருகின்றார்கள்.

மதக்கடை வியாபாரிகளோ, காணாத சாமிகளைக் கண்டதைப்போல் பொய்யைச்சொல்லிப் பொருள் பறிப்பதும், காணாத மோட்சமென்னுமிடத்திற்குப்போய்க் கண்டுவந்தவர்களைப்போல் பொய்யைச்சொல்லி பொருள் பறிப்பதும், காணாத நரகத்திற்குப் போய்க் கண்டுவந்தவர்களைப் போல் பயமுறுத்திப் பொய்யைச்சொல்லி பொருள் பரிப்பதும், கப்பலில் அபாயம் நேரிட்டால் எங்கள் சாமியை வேண்டிக் கொண்டு உண்டியை சேர்த்துக் கொண்டு வந்துக் கொடுங்கள். உங்களுக்கு வியாதி வந்தால் எங்கள் சாமியை வேண்டிக்கொண்டு உண்டிசேர்த்துக் கொண்டுவந்து செலுத்துங்கோளெனப் பலவகைப் பொய்யைச்சொல்லி அறிவிலிகளை வஞ்சித்து பொருள் சேர்த்து தங்கள் தேசத்திற்கு அனுப்புவதும் தங்கள் பெண்டுபிள்ளைகளுடன் சுகமாக உண்டு உடுத்தி உலாவுவதுமாகியச் செயல்களுக்குரித்த இடங்களே மதக்கடைகளென்றும், பொய்யைக் கூறிப் பொருள் பறித்து சீவிப்போரே மதக்கடை வியாபாரிகளென்றும் கூறப்படும்.

இத்தகைய மதக்கடைகளும், மதக்கடை வியாபாரிகளும் உலகிலுள்ள எத்தேசத்திலும் விசேஷமாகக்கிடையாது. இந்துதேசத்தில் மட்டும் விசேஷமாகக் காணலாம். காரணமோவென்னில் விசாரிணையென்பதற்று சொன்னதைச் சொல்லுங் கிளிபோல் சொல்லிலித்திரிவோர் பலர். சொல்லின் காரணகாரியத்தை விசாரிப்போர் சிலர். கடைச்சோம்பேரிகளாகிய யாதொரு தொழில் முயற்சியுமின்றி சாமி கொடுப்பார், சாமிகொடுப்பாரென்றண்ணாந்துபார்த்திருப்போர் பலர். தன் முயற்சியே தன்னைக் கார்க்குமென்று முயல்வோர் சிலர். இத்தகையாய் விசாரிணையற்றக் கூட்டத்தோர் பெருகியும் விசாரிணையுள்ளோர் சிறுகியும்விட்ட படியால் வஞ்சினத்தாலும் பொய் சொல்லியும் பொருள் பறித்தும் சீவிப்பவர்களுக்கு விசேஷயிடங் கொடுத்துவிட்டது.

வஞ்சகர்களின் கூற்றும், பொய்யர்களின் புரளியும், கல்விகற்றுள்ளோம் என்பவர்களை ஏமாற்றுங்கால் கல்லாதவர்களை எவ்வகையால் வஞ்சிப்பார்