பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 153

களென்பதைக் கண்டு கற்றோரே தெளிந்துகொள்ளல் வேண்டும். காரணம், விவேகமிகுத்தோர்களால் “கண்டுபடிப்பதே படிப்பு மற்றபடிப்பெல்லாம் தெண்டபடிப்பென்று” கூறப்பட்டிருக்கின்றது.

கண்டுபடிக்கும் விசாரிணையாவது யாதெனில், ஒருவன் எங்கள் சாமியை வேண்டிக்கொண்டால் உங்கள் வியாதிநீங்கிவிடுமென்பானாயின் அப்பா உங்கள் சாமியை வைத்திருக்கும் இடத்தில் கண்டிருக்கும் உவாந்திபேதியை தடைச்செய்வதற்கியலாத சாமி என் வியாதியை நீக்கிவிடுமா. என்னுடைய வியாதி நீங்குவதும் அதிகரிப்பதும் என்னுடையச் செயலாயிருக்க உங்கள் சாமியால் என் வியாதியை நீக்குவதற்கு ஏதுவில்லையே சருவச்செயலும் அவனவன் ஏதுக்குத் தக்க நிகழ்ச்சியாயிருக்க அவனையன்றி வேறு ஏதுவாவது நிகழ்ச்சியாவது கிடையாவே என்பான். கண்டுபடிக்காத விசாரிணையற்றவனிடம் ஒருவன் சென்று, அப்பா, எங்கள் சாமியை வேண்டிக்கொண்டால் உன் வியாதி நீங்கிவிடுமென்று சொன்னவுடன் தன்னால் தோன்றிய வியாதியைத் தானுணராதவனாதலின் அவன் சொன்ன சாமியை விழுந்து கும்பிட்டு வேண்டிக்கொண்டகாலம் அவ்வியாதி நீங்குவதற்குக் காலமாயிருந்துவிடுமாயின் அவன் தொழுத சாமியை மெய்சாமியென்றெண்ணி அச்சாமிக்குப் பணங்கிடையாதென இவன் சம்பாதிக்கும் பணங்களைக் கொட்டிக் கொடுப்பான். சாமி இவனுக்குப் பணங் கொடுப்பதா, இவன் சாமிக்குப் பணம் கொடுப்பதாவென்று உணரான். மனிதர்கள்தான் லஞ்சம் வாங்கிக் கொண்டு உதவி புரிகின்றார்கள். சாமியும் லஞ்சம் வாங்கிக்கொண்டு வியாதியை நீக்குமாவென்று பகுத்தறியான்.

இத்தகைய பகுத்தறியாதோர் கூட்டம் பெருத்தும், பகுத்தறிவோர் கூட்டம் சிறுத்தும்விட்டபடியால் மதக்கடை பரப்பி சீவிக்கும் பொய்க் குருக்களாகிய வஞ்சகர்களுக்கு மேலும் மேலும் பொய்யைச் சொல்லி வஞ்சித்துப் பொருள் சம்பாதிக்கும் வழிகள் பலவகையாகப் பெருகிவிட்டது. இத்தகையப் பொய்க் குருக்களின் போதனைகளையும், மாறுபாடுகளையும், நம்பி சோம்பேறிகள் அதிகரித்துவிட்டபடியால் கல்வியின் விருத்தியும், கைத்தொழில் விருத்தியும், விவசாயவிருத்தியும் ஞானவிருத்தியும் பாழடைந்து இந்துதேசக்குடிகள் சீர்கெடுவதுடன் இந்துதேசமும் சிறப்புக் குன்றிபோய்விட்டது. ஆதலின் நமதன்பர்கள் மதக்கடை பரப்பி சீவிக்கும் பொய்க்குருக்கள் போதனைகளை நம்பி வீண்மோசம்போகாது மெய்க்குருக்களாகத் தோன்றி நிற்கும் பிரிட்டிஷ் ஆட்சியாரின் போதனையில் நிலைத்து சீர்பெற வேண்டுகிறோம். - 4:18; அக்டோபர் 12, 1910 –

60. பரதேசத்தில் தன்மம் போதித்தது

வினா : பண்டை காலத்தில் பிராமணரென்போர் சைனா, ஜப்பான் முதலிய தேசங்களுக்குச் சென்று பௌத்ததன்மங்களை போதித்து அதேயிடத்தில் சமாதி அடைந்திருப்பதாகவும், அச்சமாதி பீடம் நாளதுவரையிற் காணப்படுகிறதென்றும் சில இங்கிலீஷ் பத்திரிகைகளிலும் தமிழ்ப் பத்திரிகைகளிலும் வரைந்திருப்பதைக் கண்டேன். அவ்வகை சரித்திரம் ஏதேனும் உண்டா அது மெய் சரித்திரமா. கோ. வேதாஜலம், புரசைவாக்கம்.

விடை : தாம் வினவிய சங்கை யதார்த்த சரித்திரமேயாம். ஆயினும் தற்காலம் பெண்சாதி பிள்ளைகளுடன் இகபோகத்திருந்து அனந்தம் பிறவிக்கு ஆளாகும் வேஷப்பிராமணர்கள் அவ்வகை பரோபகாரங்கொண்டு பல தேசங்களுக்குச்சென்று தன்மம் போதித்தது கிடையாது சாதியில் தலைவர்களென வேஷமிட்டுக் கொண்டு சூத்திரனுக்கு வேதம் போதிக்கப்படாதென்னும் கட்டுப்பாடுகளை வகுத்துக்கொண்டுள்ள இவர்கள் சீனருக்கும் ஜப்பானியருக்கும் தன்மம் போதித்திருப்பார்களென்பது மெய்யாமோ இல்லை, இல்லை, பெண்ணாசை, மண்ணாசை, பொன்னாசை என்னும் சகல பற்றுக்களையும் அறுத்து சருவ உயிர்களையும் தன்னுயிர்போல் கார்க்கும்