பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156 / அயோத்திதாசர் சிந்தனைகள்

பாழடையச் செய்துவந்தார்கள். தற்காலம் ஏதுகாரணத்தைக்கொண்டோ அவர்களை சீர்பெறச் செய்யப்போகின்றோமென்பதினாலேயாம்.

யதார்த்தத்தில் ஏழைகளை சீர்திருத்தி சுகம்பெறச் செய்யவேண்டுமென்னும் அன்பு இவர்களுக்கு இருக்குமாயின் தீண்டாதவர்கள், தீண்டாதவர்களென்றும், தாழ்ந்த வகுப்பார், தாழ்ந்தவகுப்பாரென்றும் சொல்லிக்கொண்டே சீர்திருத்துவரோ, இல்லை. பொறாமெய்மிகுத்தோரால் தாழ்த்தப்பட்டவர்கள் கருணைதங்கிய பிரிட்டிஷ் ஆட்சியில் தன்னிற்றானே உயர்ந்துவரும் செயல்களைக் கண்டு சகிக்க ஏலாது ஏழைகளை சீர்திருத்துவது போல் அறுபது லட்சத்திற்கு மேற்பட்ட குடிகளைத் தீண்டாதவர்கள், தீண்டாதவர்களென்றும், தாழ்ந்த வகுப்பார், தாழ்ந்த வகுப்பாரென்றுங் கூறிவருவது பிரிட்டிஷ் ஆட்சியில் முன்னேறுகின்றவர்களை இன்னுந் தாழ்த்தி ஈடேறவிடாமற் செய்வதற்கு இதுவுமோர் தந்திரம்போலும்.

பொதுவாகியக் கோவிலுக்குள் விடாதவர்களும், பொதுவாகியக் குளத்து நீரை கிணற்றுநீரை மொண்டு குடிக்கவிடாதவர்களும், பொதுவாகிய அம்மட்டர்களை சவரஞ்செய்யவிடாதவர்களும், பொதுவாகிய வண்ணாரை வஸ்திரமெடுக்க விடாதவர்களுமாகிய பொறாமெயே உருக்கொண்ட இவர்களும் ஏழைகளை ஈடேற்றுவார்களோ. அவர்கள் சுகபோகத்தைக் கண்டும் சகிப்பார்களோ. அவர்களடையும் உயர் பதவிக்கு ஆனந்தமுங் கொள்ளுவார்களோ, இல்லை. இவர்களது பரிதாப நிலையும், வீடேற்று மொழிகளும், எத்தகையத்தென்னில் ஆடுகளெல்லாம் நனைகிறதென்று புலிகள் யாவும் புரண்டழுவதுபோலாம். பறையனைக்கொண்டு சங்கராச்சாரி வேதாந்தந் தெளிந்துகொண்டதாக டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகைக் கூறியதென சுதேச மித்திரன் கூறியது மெய்யாயின் அது கால் பறையன் ஜெகத்குருவா அல்லது சங்கராச்சாரி ஜெகத்குருவாவென்பதை விவேகிகளே தெளிந்துக்கொள்ளல் வேண்டும். - 4:20; அக்டோபர் 26, 1910 –


63. தீபாவளி கார்த்திகையென்னும் பண்டிகைகள்

இதுவே தீபவதி ஸ்நானம் கார்த்துல தீபமென்று கூறப்படும். இதன் செயல்களோவென்னில், பூர்வம் இத்தேசத்தில் பௌத்த தருமம் நிறைந்திருந்த போது அந்தந்த சங்கங்களிலுள்ள சமண முநிவர்கள் தங்கள் தங்கள் ஞானவிசாரிணை காலங்களும், ஞானசாதன காலங்களும் நீங்கலாக மற்றயகாலங்களில் புற் பூண்டுகளின் குணாகுணங்களையும், தானியங்களின் குணாகுணங்களையும், விருட்சங்களின் குணாகுணங்களையும், கனி வர்க்கங்களின் குணாகுணங்களையும், நெய்களின் குணாகுணங்களையும், ஓடதிகளாம் உபரசங்களின் குணாகுணங்களையும், பாஷாணங்களின் குணாகுணங்களையும், நீர்களின் குணாகுணங்களையும், மண்களின் குணாகுணங்களையும் ஆராய்ச்சிசெய்து சுகபலன் கண்டபோது அத்தேசத்து அரசர்களுக்கும், பௌத்த உபாசகர்களுக்குந் தெரிவித்து அதனை விருத்திபெறச்செய்து சகல குடிகளுக்கும் உபயோகப்படும்படி செய்வார்கள். அத்தகைய பௌத்த சங்கத்தோர் முயற்சி நாளதுவரையில் ஜப்பானியதேசத்தில் நிறைவேறிவருகின்றது.

இந்தியதேச நடவடிக்கைகள் ஜப்பான் தேசத்திற்கு எவ்வகையாய் சென்றதென்பீரேல், இத்தேசத்திய திராவிட பௌத்தர்கள் பலதேசங்களுக்குஞ் சென்று தங்கள் வியாபாரங்களை விருத்தி செய்து வந்ததுமன்றி திராவிடருக்குள் சங்கஞ்சேர்ந்து சிரமணநிலைகடந்து பிராணசித்திப்பெற்ற யதார்த்த பிராமணர்கள் ஜப்பான் தேசத்திற்குச் சென்று அவ்விடந்தங்கள் சாது சங்கங்களை நாட்டியதுமன்றி மேற்கூறிய உபகாரவிருத்திகளையுஞ் செய்து வந்தார்கள். அத்தகைய விருத்திகள் யாதெனில்:-

அத்தேச சங்கத்தோர் ஓர் தானியத்தையேனும், கனிவர்க்கங்களையேனுங் கண்டுபிடிப்பார்களாயின் அவற்றை அரசரைக்கொண்டேனும், குடிகளைக்