பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 159

கடவுளென்னு மொழியையும், தெய்வமென்னு மொழியையும் ஏற்று அதன் பொருளுணராது பௌத்தர்கள் கடவுளில்லை, தெய்வமில்லை என்று கூறுவதாக விதண்டவாதஞ் செய்வதழகின்மெயேயாம். மயிலை திருக்குளத்துத் தாமரைப்பூ புதிதோ பழயதோவென வினவில், கண்டறிந்து புதிது அல்லது பழயதென்று கூறிவிடலாம். அங்ஙனமின்றி ஆகாயப்பூ பழயதோ புதியதோவென வினவுவார்களாயின் ஆகாயப்பூ இல்லையென்னும் விசாரிணையற்ற மந்தமதிகள் வினாவென உணர்ந்து மவுனமுறுவது சுவாபம். மறுத்துங் கேட்பார்களாயின் இல்லையென்றே துணிந்து கூறுவர்.

அதுபோல் மநுமக்களையன்றி மக்களையும், மலைகளையும் உண்டு செய்த கடவுள் ஒருவரிருக்கின்றாராவென உசாவுவார்களாயின் அதனைக் காட்சியிலும், அநுபவத்திலும் உணராத மெய்யர்கள் மவுனஞ் சாதிப்பார்கள். மறுத்துங் கேட்பார்களாயின் இல்லையென்றே துணிந்து கூறுவர். காரணமோவென்னில், உண்டுசெய்யுங் கடவுளை கண்டுசெல்லுவோர் ஒருவருமில்லாததினால் கண்டதை உண்டென்றும், காணாததையில்லையென்றுங் கூறுவது பௌத்தர்களின் நெறியாகும்.

சருவ சீவர்களிடத்தும் தேய்வென்னும் ஒளியுண்டு. அதனழியா நிலை கண்டோர் சருவசீவர்களிலும் தெய்வம் நிறைந்துள்ள தென்னிற் பொருந்தும். சருவசீவர்களிடத்தும் அன்பென்னும் சிவமுண்டு. அதன் பெருக்க சுகங் கண்டோர் சருவசீவர்களிலும் சிவம் நிறைந்துள்ளதென்னிற் பொருந்தும். சருவ சீவர்களிடத்தும் நன்மெயென்னுங் கடவுளுண்டு. நன்மெயின் சுகச்செயலைக் கண்டோர் சருவசீவர்களிலுங் கடவுள் நிறைந்துள்ளதென்னிற் பொருந்தும்.

இத்தகையுணர்ந்து கூறும் வாக்கியத்தை பௌத்தர்களும் ஏற்பர். மேற்கூறியுள்ள வாக்கியங்களின் அந்தரார்த்தங்களை உணராது தன்செயலற்று ஏனையோன் செயலொன்று உண்டென்பதை பௌத்தர்கள் இல்லையென்றே துணிந்து கூறுவர். அக்கூற்றின் நீதிபோத முணராதோர் பௌத்தர்கள் கிறீஸ்துமார்க்கத்தையுந் தூஷிக்கின்றார்களென்று தூற்றுவர் அத்தகையோர் தூற்றினை அறியாதோர் ஏற்பாரன்றி அறிவுடையார் ஏற்காரென்பது திண்ணம்.

பௌத்த தன்மத்தினின்றே கிறீஸ்துவின் தன்மம் தோன்றியுள்ளதென்பது அலக்சாண்டர் சரித்திரத்தாலும் தீபேத்திற்கும் ரோமைக்குமுள்ள யாத்திரா சரித்திரத்தாலும் உலகெங்கும் பிரசித்திப்பெற்றிருக்க பௌத்தர்கள் கிறிஸ்துவின் மார்க்கத்தை தூஷிப்பரோ, ஒருக்காலுந் தூஷிக்கமாட்டார்கள்.

தற்காலம் சில பௌத்தர்களுக்குள் யாவரேனும் கிறிஸ்துவின் மார்க்கத்தை தூஷித்திருக்கின்றார்களென்பதாயின் தன்னை அடிப்போனை அடிக்காவிடினுந் தடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாதலின் தன்னைக்காக்கு நூல் தூஷணையாகாது. மற்றும் அவர்கள் அறியாமெயால் இவர்களை தூஷிக்கவும் இவர்களறியாமெயால் அவர்களை தூஷிக்கவும் ஏற்பட்டிருக்குமேயன்றி தோன்றிய ஏதுவை உணர்ந்தபின்னர்தோற்றத்தை தூஷிக்கமாட்டார்கள்.

ஏதுக்களை எவ்வகையால் உணர்வரென்னில் கத்தோலிக்குக் கிறீஸ்தவர்களுக்குள் புருஷர்கள் மடமென்றும், இஸ்திரீகள் மடமென்றும் தோன்றியதற்கு யேது பௌத்தமடங்களேயாகும். அதன் காலமும், சரித்திரமும், லூயிஸ் அலக்சாண்டர் காலமும், லூயிஸ் அலக்சாண்டர் சரித்திரங்களுமேயாம்.

பௌத்த போதகர்கள் நீங்கள் பௌத்தர்களானால் தான் சீர்பெறுவீர்களென்று கூறுகின்றார்கள். இதுவும் நியாயமோ என்கின்றார்களாம், அதுவும் நியாயமேயாம். காரணமோவென்னில், பஞ்சசீலம் புரிபவர்களே பௌத்தர்களாவர். ஒருவன் எம்மதத்தோனாயினும், எச்சமயத்தோனாயினும் சீவப்பிராணிகளைத் துன்பஞ் செய்யாமலும், பொய்சொல்லாமலும், அன்னியர் பொருளை அபகரிக்காமலும், அன்னியர் மனையாளை விரும்பாமலும், மதியை மயக்கும் லாகிரி பானத்தை அருந்தாமலும் இருப்பானாயின் அவன் பௌத்தனேயாவன்.

பஞ்சபாதகங்களை அகற்றுங்கோளென்பதும் பௌத்தர்களாகுங்கோள் என்பதும் ஒருபொருட்கிளவியாதலின் அன்பர்களை நோக்கியும், வற்புறுத்தியும்