பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 163

பௌத்தர்களுக்கு வேறு கலம், இந்துக்களுக்கு வேறு கலம் வகுக்கத்தக்க ஏதுக்களை செய்துவிட்டு சங்கங்களின் பொதுக் காரியதரிசி க. அயோத்திதாஸப் பண்டிதர் அவர்களுக்கும் மாறுத்திரம் அநுப்பிவிட்டார்கள்.

இத்தகையப் பிரிவினைகளைக் கண்டுநடந்துக்கொள்ள வேண்டியக் காரணங்கள் யாதெனில், சாதிப்பெயர்களும், சாதித் தொடர்மொழிகளும், சமயச் சின்னங்களும் இந்துக்களுக்கு உரியவைகளேயன்றி பௌத்தர்களுக்கு உரியவைகளன்றாம்.

ஆதலின் பௌத்தர்களென்று சொல்லுவோர்களை ஏனையோர்கள் நீங்கள் என்னசாதி என்று கேட்கும் ஆதாரமுங்கிடையாது, அவர்களும் தங்களுக்கு சாதியாசாரம் இல்லாதபடியால் தங்களை ஓர் சாதியானென சொல்லவும் மாட்டார்கள்.

மற்றப்படி பௌத்தர்களென்று கூறியவுடன் அதனை எழுதிக் கொள்ளாமல் பௌத்தர்களை இழிவுபடுத்தவேண்டுமென்று எண்ணி நீங்கள் முன்பென்னசாதி பின்பென்ன சாதி என்றும் பயமுறுத்தியும் கேட்பார்களாயின் தக்க சாட்சி ஆதாரங்களுடன் ராஜாங்கத்தோருக்கு விளக்கி அதற்குத்தக்க முயற்சி எடுத்துக் கொள்ளப்படும். அதுவுமன்றி பௌத்தர்களைத் தாழ்த்தி நாசமடையச்செய்வதற்காக ஓர் சாதிப்பெயரைக்குறித்து அழைத்தாலும் ஓர் சாதிப்பெயரைக்குறித்து பத்திரிகை களிலேனும், புத்தகங்களிலேனும் பிரசுரஞ்செய்தாலும் வேண முயற்சிகளை நிறை வேற்றப்படும் இவற்றை இந்திய தேச பௌத்தர்கள் ஒவ்வொருவரும் நன்குணர்ந்து சத்தியதன்மத்தில் நடந்து இராஜ விசுவாசத்தில் நிலைத்து சீர்பெறுவீர்களென்று நம்புகிறோம்.

இங்ஙனம், சாக்கைய சங்காதிபர்கள்.
- 4:28; டிசம்பர் 21, 1910 –

68. பௌத்தர்களின் நம்பிக்கை

புத்தரையே பகவனென்றும், ஈசனென்றும், கடவுளென்றும், சிவனென்றும், பிரமமென்றும், பரமென்றும், திருமாலென்றும், அவரது நற்கிரியைகளுக்குத் தக்க ஆயிரநாமங்களை அளித்து சகஸ்திரநாம பகவனென்றும், ஆயிரநாமத் தாழியனென்றுங் கொண்டாடிப் பூர்வத் தமிழ் நூற்கள் யாவிலும் வரைந்துள்ள போதினும் அவரது அளவுபடா அன்பிற்கும், குறைவுபடா ஞானத்திற்கும் பொதுவாய புண்ணிய திருமேனிக்கும் அருள் நிறைந்த உள்ளத்திற்கும், மலைவுபடா அவரது வாய்மொழிக்குமே அமர்ந்தும் அன்பு கொண்டும் ஆனந்தமாக சிந்தித்தும் அவரது போதனா நீதிநெறி வாய்மெய் வழுவாது நடந்துவருவார்களன்றி, பகவனே எங்கள் பாவத்தைப் போக்கவேணும், கடவுளே எங்களைக் காப்பாற்றவேண்டும், பிரமனே எங்களைப் பாதுகாக்க வேண்டும், சிவனே எங்களை சீர்திருத்தவேண்டுமென சிந்திக்க மாட்டார்கள். காரணமோவென்னில், தாங்கள் செய்த தீவினையைத் தாங்களே அநுபவிக்க வேண்டுமென்னும் நம்பிக்கையும் அனுபவமும் உடையவர்களாதலின் தங்கள் தீவினைகளை வெல்லுதற்கு அறவாழியானின் அறமொழியில் அஞ்சலியஸ்தராகி அறநெறியில் நடந்து தாங்களே அத்தீவினையை வெல்லவேண்டிய தேயன்றி மற்றெவராலும் அத்தீவினையைப் போக்கலாகாதென்பதே நம்பிக்கையாகும்.

இதுவே பௌத்ததன்மத்தின் விசேஷ நம்பிக்கையாதலின் அன்னியர் பொருளை அபகரித்து அதிகாரிகளிடம் அகப்பட்டுக் கொண்டு ஆண்டவனே என்னைக் காப்பாற்றவேண்டு மென்றால் காப்பாற்றுவரோ, இல்லை அன்னியர் பொருளை அபகரிக்கலாகாதென்று கூறியிருந்தும் அம்மொழியை சிரமேற்று நடவாது திருடிவிட்டு தண்டனை நேருங்கால், ஆண்டவனே, ஆண்டவனே, என்பதின் பயன் செய்த தீவினைக்குத் தக்க தண்டனையை அனுபவிக்க வேண்டியதே பயனாதலின் பௌத்தர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் செய்த தவினைக்கு பயன் தாங்களே அநுபவித்துத்தீரல் வேண்டுமென்பதே நம்பிக்கை யாகும். தங்களது துற்செயலாந் தீவினையை ஏனையோர் வந்து தீர்ப்பார்களென்று கனவிலும் நம்பமாட்டார்கள்.