பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 165

என புத்தபிரானையே சிந்தித்து விளக்கியிருக்கின்றார்கள். இத்தகைய முதனூலாம் ஆதிவேதத்தை போதித்தவரும் புத்தபிரான், அதனுட்பொருள் நுட்பமாம் உபநிடதங்களை விளக்கியவரும் புத்தபிரானென்றே தெளிவாகவிளங்குங்கால், கனந்தங்கிய மாக்ஸ்முல்லரவர் களும், கனந்தங்கிய ரைஸ்டேவிஸவர்களும் உபநிடதங்களினின்று புத்ததன்மந் தோன்றியதென்று முதலெழுதிய புத்தகம் முற்றும் பிசகேயாம். அஃது முழுவிசாரிணை யற்றக் காலவரைவாதலின் அவர்களது முந்நூலுக்குப் பின்னூல் தோன்றியுள்ளவற்றைக் கண்டேனுந் தெளிந்துக்கொள்ளல் வேண்டும். அங்ஙனங் கண்டுதெளியாது ஒருவ ரெழுதிவைத்துள்ளதை உடனே நம்பிக்கொள்ளுவது அழகன்று. அவரெழுதியுள்ள நூலினையும் நன்காராய்ந்து அந்நூலெழுதியுள்ள பாஷையையும் அப்பாஷையின் ஆக்யோனையும் அப்பாஷை தோன்றியக் காலவரையையுங் கண்டுணர்வரேல் பாஷையின் வரிவடிவிற்கு மூலகாரணரான புத்தபிரானே வேதபோதத்தின் உபநிடதங்களுக்கும் மூலகாரண ரெனத்தெள்ளென விளங்கும். அத்தகைய விளக்கத்தால் வேறொருவருக்கு விளக்குவதே விவேகிகளுக்கு அழகாம்.

- 4:35; பிப்ரவரி 8, 1911 –

70. தற்கால பிராமணர்கள் செய்யும் விவாகமும்
முற்கால வள்ளுவர்கள் செய்யும் விவாகமும்
இந்து விவாகமாமோ

ஒருக்காலுமாகாவாம். இந்துமதமென்பது யாவருடையதென்னில், தற்காலம் பிராமணரென்று சொல்லிக் கொள்ளுவோர் போதனைகளுக்குட்பட்டதும், அவர்களது மதத்திற்கு அடங்கியதும், அவர்கள் வருத்துப்போக்குக்கு இடமாயதும், அவர்களது ஆலயத்துக்குட் பிரவேசிக்க சுதந்திரமுடையதும், பிராமணர்களென் போர்களுக்கு தானங்கொடுக்கக் கூடியவர்களுக்கும், பிராமணர்களென் போர்களையே, தெய்வமாகவும், குருவாகவும் சிந்திக்குங் கூட்டத்தோர்கள் யாரோ அவர்களே இந்துக்களென்று அழைக்கப்படுவார்கள் பிராமணர் களென்று சொல்லிக் கொள்ளுவோர் முதலாக நின்று விவாகக்கிரியைகளை நடாத்தி மங்கல்யம் சூட்டுவதாயின் அதையே இந்துவிவாகமென்று கூறப்படும். பிராமணர்களென்போர் வந்து முன்னின்று செய்யப்படாத விவாகங்களை இந்து விவாகங்களென்று சொல்லுவதற்கு ஆதாரமில்லை.

இந்துக்களென்னும் ஆரியவகுப்போர் இத்தேசத்தில் வந்து குடியேறுவதற்கு முன்பிருந்த பௌத்தவரசர்களும் பௌத்த வியாபாரிகளும், பௌத்த விவசாயிகளு மாகிய முத்தொழிலாளருக்கும் கன்மகுருக்களாயிருந்து தன்மகன்மங்களாம் விவாகக் கிரியைகளை பரம்பரையாக நடாத்தி வந்தவர்கள் வள்ளுவர்களேயாவர்.

பௌத்தர்களுக்குள் ஞானகுருக்களாம் பிராமணர் களென்றழைக்கப் பெற்றவர்கள் விவாகமுதலியக் கன்மக்கிரியைகளுக்குப் பிரவேசிக்கமாட்டார்கள். குடிகளுக்கு நீதியையும், நெறியையும், வாய்மெயையும் போதிக்கும் தன்மச் செயலிலேயே நிற்பார்கள். வள்ளுவர், நிமித்தகர், சாக்கையரென்றழைக்கப் பெற்ற, கன்மகுருக்களே விவாக முதலிய தன்மகன்மங்களை நடாத்தியும் வந்தார்கள். நாளது வரையில் நடத்தியும் வருகின்றார்கள்.

முன்கலை திவாகரம்
வள்ளுவர் சாக்கையரெனும் பெயர் மன்னர்க்குன்படு கருமத் தலைவர்க் கொக்கும்.

பின்கலை நிகண்டு
வரு நிமித்தகன் பேர் சாக்கை வள்ளுவனென்று மாகும்.

பௌத்தமார்க்க அரசர்களுக்கும், பௌத்தமார்க்க வியாபாரிகளுக்கும், பௌத்தமார்க்க விவசாயிகளுக்கும் வள்ளுவர், சாக்கையர் நிமித்தகரென் றழைக்கப்பெற்றவர்களே கன்மகுருக்களாயிருந்து விவாக முதலிய தன்மகன்மங் களை நிறைவேற்றியுள்ளவற்றை மணிமேகலை, சீவகசிந்தாமணி, சூளாமணி,