பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 167

பரப்பி சீவிக்கும் பொய்க் குருக்களின் போதனையால் அந்தம்மாளுக்கு லஞ்சங்கொடுப்பதாகப் பிராத்தித்துக் கொண்டால் காற்றடங்கிவிடுமென வேண்டிக்கொண்டு அடங்காவிடின் சகலரும் மடிவதும், காற்று அடங்கும் நேரம் வந்தடங்கில் அதற்கென்று உண்டியில் சேர்த்துவைத்தப் பணங்களை அம்மாசாமிகளுக்கு லஞ்சங் கொடுத்து பஞ்சைகளாவதுடன் அச்சிலைகளுக்கு முதலாளிகளாக விளங்கும் பொய்க் குருக்களுக்கும் லஞ்சங் கொடுத்துப் பாழடைந்துபோகின்றார்கள். பேதைமக்களை வஞ்சித்து தங்களுக்கும் தங்கள் சாமிகளுக்கும் இலஞ்சம் வாங்கிப் புசிக்குங் குருக்களோ சோம்பலிலும் சுகசோம்பேறிகளாக சுகித்திருக்கின்றார்கள்.

அத்தகையாய் ஏழைக் குடிகளிடம் நெஞ்சிதக்கம்வையாது சாமிகளும் குருக்களுமே லஞ்சம் வாங்கிவருவதாயின் அதன் செயலைக் கண்டுவரும் கூலியாளர் முதல் எஜமானன்வரை இலஞ்சம், லஞ்சம். லஞ்சமென்னும் செயலே பெருகி சீவகாருண்யம் உபகாரமென்பதற்று கல்லையும் மண்ணையும் சுமக்கும் இரண்டணா கூலிக்காரனாயினும் அக்கூலிக்கார மேஸ்திரிகளுக்கு அவ்விரண்டணாவில் காலணா லஞ்சங் கொடுக்க வேண்டும். ஓர் எஜமானனைக் காணவேண்டி உத்தியோக சாலைக்குச் சென்று உள்ளேபோகவேண்டுமாயின் எஜமானன் உளரா, இலரா வெனக் கண்டறிவதற்காய் அங்குள்ள சிப்பந்தி சேவகனுக்கு ஓரணா லஞ்சங் கொடுத்தே தீரல்வேண்டும், அவ்வகைக் கொடாவிடின் எஜமானன் உள்ளதுந் தெரியாது, இல்லதுந் தெரியாது, வெளியினின்று விழிக்கவேண்டியதாதலின் இலஞ்சங் கொடுத்தே தீரும் யேதுவாகிவிடுகின்றது. ஓர் உத்தியோகங் கிடைக்க வேண்டியதாயின் முதலாவது சேவகனுக்கு லஞ்சம், ஆபீசு பெரிய உத்தியோகஸ்தனுக்கு லஞ்சம், அவன் வலது பக்கத்து உத்தியோகஸ்தனுக்கு லஞ்சம், அவன் இடதுபக்கத்து உத்தியோகஸ்தனுக்கு லஞ்சம், இத்தியாதி லஞ்சங்களுங் கொடுத்தது போதாது, மாதமாத சம்பளத்திலும், வாரவாரம் வாங்குங் கூலிகளிலும் லஞ்சம், மற்றும் விவசாயிகளிடம் விளையும் வாழக்காய் லஞ்சம், வாழையிலை லஞ்சம், முருங்கக்காய் லஞ்சம், பூசணைக்காய் லஞ்சம், கத்தரிக்காய் முதலிய லஞ்சங்களுடன் ஏழைகளை ஆபீசுவேலைவாங்குவதுடன் தங்கள் வீட்டுவேலை வாங்கும் லஞ்சம், ஆகிய நெஞ்சிரக்கமற்ற லஞ்சப்பரிதானங்களினால் இலஞ்சமளிப்போர் நாளுக்குநாள் கிஞ்சித்து சீரழியினும் இலஞ்சம் வாங்குவோர் தாங்கள் சீரழிவதுடன் தங்கள் சந்ததியோரும் சீரழிவதை யுணராது மேலுமேலும் இலஞ்சக்கூற்றையே பெருக்கி வருகின்றார்கள். இத்தகையக் காருண்யமற்ற லஞ்சப்பெருக்கமே தேச சிறப்பையும் தேசத்தோர் அன்பையுங் கெடுத்து நிலைகுலையச் செய்துவருகின்றது. இத்தியாதி கேடுகளுக்கெல்லாம் மூலக்காரணம் சாமிகளுக்கு லஞ்சமும் குருக்களுக்கு லஞ்சமுங் கொடுத்துவருவதேயாம். சாமிகளும், குருக்களும் லஞ்சம்வாங்கும்போது குடிகள் இலஞ்சம் வாங்குவதினால் யாதுகேடுண்டாமென்னுந் துணிபேயாம். சுயப் பிரயோசனத்தை நாடிய சோம்பேறி குருக்களின் லஞ்சப்பரிதானச் செயல்களானது சுடுகாடு சென்றும் விடாமல் நிற்கின்றது.

- 4:41; மார்ச் 22, 1911

72.கடவுளிலையோ கடவுளிலையோ

கடவுள் என்பதின் பொருள் "நன்மெய்" அதாவது பின்கலை நிகண்டினைக் காண்க. "கடவுடேமுநிநன்மெய்ப்பேர்." அதன் தன்மமோ யாதெனில், சகலசீவராசிகள் மீதுங் கருணைகூர்ந்து நன்மெய்புரிதல் அத்தகைய நன்மெய்புரிதற்குத் தக்க செல்வப்பொருளுங் கல்விப் பொருளும் இல்லாவிடில் சகல சீவர்களிடத்தும் நல்லவனாக நடந்துக் கொள்ளுதல் இவ்விரண்டில் ஒன்று பூர்த்தி அடைந்தவிடமே கடவுளென்னும் பொருளைப்பெறும். அங்ஙனமிராது சொற்ப தின்மெய்க் களங்கு அவ்விடம் நிலைக்குமாயின் கடவுளென்னும் பெயர் பொருந்தாவாம். அக்கடவுள் என்னும் பெயரும் நரரென்றும், மக்கள் என்றும் அழைக்கப்பெற்ற மனுக்களது