பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168 / அயோத்திதாசர் சிந்தனைகள்

தோற்றத்தில் நிகழும் நீதிநெறி ஒழுக்கங்களில் உண்டாவதாதலின் தேவர் என்னும், ஏழாவது தோற்றமுண்டாகி கடவுள் என்று அழைக்கப்படுவதும் அத்தகையோர் பலராயின் கடவுளர்கள் என்று அழைக்கப்படுபவர்களுமானார்கள்.

இத்தகையக் கடவுளென்னும் மொழியையும் அதன் பொருளையும் வகுத்து வைத்துள்ளவர்கள் பௌத்தர்கள் என்னும் சமணமுநிவர்களே அன்றி மற்றெவரும் வகுத்துள்ளது கிடையாது. பூர்வ பௌத்தர்கள் இத்தேசத்தில் தங்களது சத்துருக்களால் பலவகைத் துன்பமுற்று கல்வியற்றிருப்பினும் இக்கடவுள் என்னும் மொழியைமட்டிலும் மாறாமல் உச்சரித்தே வருவர்.

அதன் காரணமோவென்னில் புத்தபிரானுக்குரிய ஆயிர நாமங்களில் கடவுள் என்னும் பெயரும் அதில் ஒன்றாயதன்றி நன்மெய்க் கடைபிடித்தொழுகவேண்டும் என்பதும் வேதமொழியில் ஒன்றாதலின் பூர்வ பௌத்தர்கள் ஆதியங்கடவுளை கடவுள் கடவுள் என சிந்தித்து வந்ததுமன்றி அச்சிந்தனா ஒழுக்கத்தால் நன்மெய்க் கடைபிடிக்கும் சாதனங்களில் ஒழுகி வந்தார்கள்.

அங்ஙனமிருக்க பௌத்தர்கள் கடவுள் இல்லை என்று கூறுகிறார்கள் என்பது சுத்த பிசகேயாம். கடவுள் என்னும் மொழியும் அதன் பொருளும் அவர்களே வகுத்து அவர்களே வழங்கிவருதலால் அவற்றை இல்லையென மறந்துங் கூறமாட்டார்கள். ஆனால் கடவுளென்னும் ஓர் உருவங் கட்டைதடிபோல் சட்ட திட்டமாக உட்கார்ந்துகொண்டு உலகத்தை சிருஷ்டிப்பவர் ஒருவர் இருக்கின்றார் என்னில் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். காரணமோவென்னில் வெளிச்சத்தினின்று அம்மொழி கூறாது இருட்டினின்று கூறுகிறபடியால் அம்மொழியையுஞ் செயலையுமேற்காது தூற்றிவருகின்றனர். அதாவது அனுபவத்திற்குங் காட்சிக்கும் பொருந்தியவைகள் யாவையும் ஏற்றுக்கொள்ளுவார்கள். அவைகளே உள்ளபடி வெளிச்சமென்னப் படும். அநுபவத்திற்குங் காட்சிக்கும் பொருந்தாதது எதுவோ அவைகள் யாவையும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இதுவே இருள் என்னப்படும். ஒன்றைக் கண்டறிந்து பேசுவதே வெளிச்சமென்றுங் கண்டறியாது சொன்னதைச் சொல்லுங் கிளிபோற் பேசுவதே இருளென்றும் பௌத்த சாஸ்திரிகள் வகுத்துள்ளார்கள் மற்றும் பௌத்தர்களும் அம்மொழியை சிரமேற்கொண்டு ஒழுகிவருகின்றபடியால் இருளில் உள்ளோர் மொழியை ஏற்காது அகற்றுகின்றார்கள்.

- 4:43; ஏப்ரல் 5, 1911 –

73. மகாபோதி பௌத்தம்

வினா: பௌத்ததன்மத்தைப் பரவச்செய்யவேண்டுமென்று புதுப்பேட்டைக் கோமளீஸ்வரன் கோவிலருகே மகாபோதி சங்கமென்னும் ஓர் கூட்டத்தார் தோன்றி தன்மத்தைப் பரவச்செய்துவருங்கால் அவ்விடந் தாங்கள் வராமலும் வந்திருந்து தன்மத்தைப் போதிக்காமலுமிருப்பது எங்கள் யாவருக்கும் பெரும் ஆயாசத்தையும் சங்கையையும் உண்டு செய்கின்றபடியால் இச் சங்கையைத் தெளிவற நிவர்த்திக்கும்படி வேண்டுகிறோம்.

வே.உ. மாணிக்கம். புரசவாக்கம்.

விடை: நமது சங்கத்தின் பெயர் சாக்கைய பௌத்த சங்கம். அவர்களுடைய சங்கத்தின் பெயர் மகாபோதி சங்கம். நமது சங்கத்தின் கருத்தோவென்னில் பொய்யாகிய சாதிக் கட்டுப்பாடுகளைக் கனவிலும் நம்பப்படாது. அதை அநுசரித்து ஒற்றுமெய்க் கேட்டை உண்டு செய்துக் கொள்ளப்படாதென்பது துணிபு. அவர்களது சங்கத்தின் கருத்தோவென்னில் புத்ததன்மத்தில் சாதிபேத மென்னும் செயலேயில்லாதிருக்கத் தாங்கள் புத்ததன்மம் போதித்தோமென்று கூறி அவற்றை தாழ்ந்த வகுப்போர்களுக்குப் போதிக்கப் போகின்றோமென்று தங்களைத் தாங்களே உயர்த்திக்கொண்டு புத்ததன்மமென்று கூறுகின்றார்கள்.