பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174 / அயோத்திதாசர் சிந்தனைகள்

கூட்டுரவிற் சேராமலும், அவர்களது சூன்ய போதங்களை கேளாமலும், அவர்களது சூன்ய புத்தகங்களைக் கண்களிற் பாராமலுமிருக்கும்படி வேண்டுகிறோம். அதாவது மக்களுலாவும் வீதிகளில் மலமூத்தராதிகளை விசுரிம்பிக்கலாகாதென்னும் சட்டத்தைப் பிறப்பித்து தெண்டித்து வரும்போதே எத்தனையோ பெயர் மலமூத்திர விசுரிம்பக் குற்ற தெண்டனையடைந்து வருகின்றார்கள். அத்தகைய சட்டமுங் கிடையாது தெண்டனையுங் கிடையாதாயின் வீதிகள் என்னக் குப்பைக்கேட்டை அடைந்திருக்கு மென்பது சொல்லாமலே விளங்கும். பிறப்பு, பிணி, மூப்பு, சாக்காடென்னும் நான்கு வாய்மெயையும் ஓர் மனிதன் இல்லையென்று மறுதலிக்க வியலாது அந்நான்கிலுமுண்டாகுந் துக்கமின்னது, துக்கோர்ப்பவ மின்னது, துக்க நிவாரணம் இன்னது, துக்கநிவாரணமார்க்கமின்னதென்று தெள்ளற வகுத்திருக்க அம்மார்க்கத்தில் நடந்து அதன் சுகதுக்கங்களை விளக்காது நடவாமலே பேசுவதும் சாதிக்காமல் போதிப்பதுமாகிய செயல்கள் சாக்கைய புத்த சங்கத்தோர் தோற்றத்தையும் அவர்கள் சீரையும், அவர்களது முன்னேற்றத்தையுங் கெடுத்துப் பாழ்படுத்தத் தோன்றியதாக விளங்குகின்றது. ஆதலின் அவர்களது சுகதுக்கம் இல்லையென்னும் அடித்தபோதனை களைச் செவிகளிற்கேளாமலும் அத்தகைய அபுத்தர்களின் சங்கதிகளை நமது பத்திரிகைக்கு எழுதாமலும் இருக்க வேண்டுகிறோம்.

துற்கருமத்தால் இம்மெயிலும், மறுமெயிலும், இன்னின்னக் கேடுகளுண்டு, நற்கருமத்தால் இம்மெயிலும் மறுமெயிலும் இன்னின்ன சுகமுண்டென்று கூறும் சத்தியசங்கத்தோரை அடுத்து அவர்களுக்கு பாதசேவை செய்வதே அழகாம். மற்றவை யாவும் நீதிநெறிக்கு இழிவாம்.

- 5:29, டிசம்பர் 27, 1911 –

79.இராயப்பேட்டை பௌத்தாச்சிரமத்தில் ஆதிவாரம்
மாலையில் நடந்த சங்கறாந்தி பண்டிகைப் பிரசங்கம்

அன்பர்காள் இன்று சங்கறாந்தி பண்டிகை என்றும் சங்கராந்தி புண்ணியகாலமென்றும், வழங்கும்படியான உற்சாக காலம் எம்மார்க்கத் தோரைச் சார்ந்ததென்றும், எச்சரித்திரத்தை அநுசரித்ததென்றும் விசாரித்து நடத்தவேண்டியதே விவேகிகளின் இயல்பாம். அங்ஙனம் விசாரியாது நடத்தல் சொன்னதைச்சொல்லுங் கிளிப்பிள்ளைக்கொத்ததென்றும், சொன்னதைச் செய்யும் ஏவலுக்கொத்ததென்றும் எண்ணப்படும். ஆதலின் இப்பண்டை ஈகையின் அந்தரார்த்தத்தை அநுபவ சரித்திரங்களைக்கொண்டு ஆராய்வோமாக

சங்கறர் என்பது புத்தருக்குரிய ஆயிரநாமங்களில் ஒன்றாம். அதாவது உலகெங்குஞ் சங்கங்களை நாட்டி அறத்தை ஊட்டிவைத்த காரணங்கொண்டு அவரை சங்கமித்தரென்றும், சங்கதருமரென்றும், சங்க அறரென்றும் வழங்கி வந்தவற்றை அடியிற் குறித்துள்ள பாடல்களால் அறிந்துக்கொள்ளலாம்.

மணிமேகலை

புத்த தரும சங்கமென்னும் / முத்திற மணியை மும்மையின் வணங்கி
போதி மூலம் பொருந்தியிருந்து / மாரனை வென்று வீரனாகி
குற்ற மூன்று முற்ற வறுக்கும் / வாமன் வாய்மெ யே மக்கட்டுரை.
மேற்சொன்னபடி 5. காதை
சாதுயர் நீக்கிய தலைவன் றவமுனி / சங்க தருமன்றா னெமக்கருளிய.

இத்தகைய சங்க அறநிறையோனாம் ஒப்பிலா அப்பன், கல்லால விருட்சத்தினடியில் வீற்று தனது அதிதீவரபக்குவ ஞானசாதனத்தால் சகலபற்றுக்களு மற்று பங்குனிமாத பௌர்ணமியில் நிருவாணம்பெற்று காமனையுங் காலனையுஞ் ஜெயித்து நித்திய சுகம்பெற்ற சதானந்த நிலையைத் தன்மட்டிலும் சுகிக்காது உலகெங்குஞ் சுற்றி சங்கங்களை நாட்டி அறத்தை ஊட்டிவைத்துள்ளாரென்பது சரித்திர ஆதாரமாம்.

மணிமேகலை

எண்ணருஞ் சக்கரவாள மெங்கணும் / அண்ணலறக்கதிர் விரிக்குங்காலை.