பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190 / அயோத்திதாசர் சிந்தனைகள்

தேடிக்கொண்ட படியால், அரிய பேதவாக்கியங்களும் வேத அந்தங்களும் ஞானசாதனங்களு மாறுப்பட்டு, உண்பதே ஞாலம் உடுப்பதே கோலமென்னும் அஞ்ஞானத்தடிப்பேறி பிறவி, பிணி, மூப்பு, சாக்காடென்னும் நான்குவகை துக்கங்களையுமுணராது நாளுக்கு நாள் நசிந்து பிறவியின் துக்கத்தைப் பெருக்கி வருகின்றோம்.

இத்தகைய நசித்தலின் உணர்வுதோன்றிய நாம் தங்கடங்கள் சுயப் பிரயோசனங்களுக்காய் ஏதுமிலாது மதக்கடைபரப்பி சீவிக்கும் பொய்க் குருக்களானோர்களை நாடாமலும் அவர்களது பொய் வேதங்களையும் பொய் வேதாந்தங் களையும், பொய்ப் புராணங்களையும் பாராமலுமொழித்து எல்லாமுடையான் குருவாகிவந்து போதித்த மெய் வேதவாக்கியங்களையும் மெய்வேத அந்தங்களையும் நன்காராய்ந்து பிறவியாம் பெருங்கடலைக் கடந்து பிணி, மூப்பு, சாக்காட்டை ஜெயித்து மனிதருள் தேவனெனத் தோன்றி நித்திய சுகம் பெறவேண்டியதே புத்ததன்மத்தின் பலனாகும்.

பிறவியை ஜெயித்து தேவனாகும் பலனை விரும்புவோர் புத்தரையும் புத்தரது தன்மத்தையும் சிந்திக்கவேண்டியதே செயலாதலின் அவரது பிறப்பு வளர்ப்பின் சரித்திரத்தையும், அறமொழிகளாம் சத்தியதன்மத்தையும் அன்னிய தேசத்தோரும் அன்னிய பாஷைக்காரரும் அன்னிய மதத்தோர்களுமான பெரியோர்களால் வரைந்துள்ள நூற்களை விசேஷமாகக் கவனியாது அவர் பிறந்து வளர்ந்து இத்தேசத்துள் நாட்டிய சங்கத்தவர்கள் வரைந்துள்ள அருங்கலைச்செப்பு, அறநெறி தீபம், அறநெறிச்சாரம், திரிக்குறள், திரிமந்திரம், திரிவாசகம், திரிக்கடுகம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், வளையாபதி, குண்டலகேசி, சூளாமணி, நிகழ்காலத்திரங்கல், நிகண்டு, திவாகரம், பெருங்குறவஞ்சி, சிறுங்குறவஞ்சி, பெருந்திரட்டு, குறுந்திரட்டு, மற்றுமுள்ள சமண முனிவர்களின் நூற்களைக்கொண்டும் புராதன பௌத்தவிவேகிகள் கர்ணபரம்பரையாக வழங்கிவரும் சுருதிகளைக் கொண்டும் அநுபவச் செயல்களைக் கொண்டும் ஆராய்வதாயின் சத்தியதன்மம் நன்கு விளங்கும். நாமும் அவைகளை ஆராய்ந்தே பூர்வத்தமிழொளியென புத்தரது அரிய சரித்திரத்தையும், அவரது அரிய தன்மத்தையும் விளக்கி வரைந்திருக் கின்றோம்.

நாயனார் திரிக்குறள்

அறவாழி யந்தணன் தாள் சேர்ந்தார்க்கல்லாற் / பிறவாழி நீந்தலரிது.

சித்தாந்தக் கொத்து

அருணெறியாற் பாரமிதை யாறைந்து முடனடக்கிப்
பொருள் முழுவதும் போதி நிழனன் குணர்ந்த முநிவறன்ற
னருள் மொழியா னல்வாய்மெயறிந்தவரே பிறப்பறுப்பார்
மருணெறியாற் பிறநூலு மயக்கறுக்குமாறுளதோ

.

வீரசோழிய கலித்துறை உதாரணம்

தோடாரிலங்கு மலர்கோதி வண்டு வரிபாடு நீடு துணர்சேர்
வாடாத போதி நெறி நீழன்மேய வரதன் பயந்த வறநூல்
கோடாத சீல விதமேவி வாய்மெ குணனாகு நாளுமுயல்வார்
வீடாகு வின்ப நெறிசேர்வர் துன்ப வினைசேர்த னாளுமிலரே.

பாட்டியல்

தீவினை வெல்லும் அறவாழி தெய்வம் அஞ்சேல்

இவ்வரிய தன்மமே சகல பாஷைகளுக்கு பீடகமும், சகல மதங்களுக்கு பீடகமும், சகல சித்துக்களுக்கு பீடகமும், சகல ஞானத்திற்கும் பீடகமாயிருக்கின்ற படியால் புத்ததன்மப் பிரியர்கள் நீங்கலாக அன்னிய மதஸ்தர்கள் யாவரும் தங்களது விரோத சிந்தையை அகற்றி அவிரோதச் சிந்தையில் நிலைத்து பூர்வத்தமிழொளியாம் இவ்வாதிவேத சாராம்சத்தை வாசித்துணருவரேல் முத்திபேறாம் நிருவாண சுகமுற்று தேவகதி அடைவார் களென்பது சத்தியம், சத்தியமேயாம்.

புத்த தன்மத்தை ஆராய முயல்வோர் கண்டுபடிக்கவேண்டிய நூற்கள் அனந்தமுண்டு. அதாவது சித்தார்த்தரது காலத்திலேயே தற்காலத்திய வேஷப்