பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 191

பிராமணர்களிருந்ததாகவும் ஞானமறியாது பேசியதாகவும் அப்பிராமணன் என்போர் பௌத்த மார்க்கத்தில் சேர்ந்ததாகவும் எழுதியிருக்குமாயின் அவைகள் யாவும் மத்தியில் சேர்த்துள்ள பொய் சரித்திரங்களென்றே நீக்கல் வேண்டும். புத்தரென்பதும் பிராமணனென்பதும் ஒரு பொருளந்தரங்கமாதலின் பெண்சாதிப் பிள்ளைகளுடன் சுகித்துப் பேராசையிலிருப்பவர்களைப் பிராமணர்களென்று கூறுவது தவரேயாம்.

அத்தகைய தவராகிய சரித்திரங்கள் தோன்றியதற்குக் காரணங்கள் யாதெனில், புத்தபிரான் பரிநிருவாணமடைந்த ஆயிரத்தி எண்ணூறு வருடங் களுக்குப் பின்பு பௌத்ததன்ம யதார்த்தப் பிராமணர்கள் குன்றி வேஷப்பிராமணர் கள் அதிகரித்தார்கள். அவர்களது காலத்தில் சீனயாத்திரைக்காரர்களும், சிங்கள யாத்திரைக்காரர்களும், பர்ம்ம யாத்திரைக்காரர்களும் இந்திரதேசம் வந்து புத்தபிரான் சரித்திரங்களை ஆராய்ச்சி செய்யுங்கால் இந்த வேஷப்பிராமணர்கள் தற்காலந் தோன்றினவர்களன்றி முற்காலத்திலேயே இருந்தவர்களென்று கூறி தங்களைப் பூர்வக்குடிகளென்று சிறப்பித்துக்கொள்ளுவதற்கு புத்தரது சிற்சில சரித்திரங்களுடன் பிராமணர்களையும் ஜெயித்து பௌத்தமார்க்கத்தில் சேர்த்துவிட்டாரென்று எழுதி கொடுத்துள்ளவைகள் யாத்திரைக்காரர்களுக்கு மிக்க வியப்பாயிருந்தபடியால் அவைகளை பத்திரமாக வரைந்துக்கொண்டுபோய் இப்போது வெளியிட்டுவருகின்றார்கள். தற்காலத்துள்ள வேஷப்பிராமணர்கள் முற்காலத்தில் இல்லை என்பது சரித்திர சுருக்கமாதலின் புத்தரது காலத்தில் வேஷப்பிராமணர்கள் இருந்தார்களென்பது முற்றும் பொய்யேயாம்.

அதற்குப்பகரமாக ஓர் ஆட்டிடையனின் காலுடைந்த ஆட்டுக்குட்டியையும் தோற்பை கம்பளத்தையும் புத்தபிரான் தூக்கிச்சென்று ஆட்டிடையன் வீட்டில் விட்டுச் சென்றதாக சரித்திரம். அதை அநுசரித்தே ஓர்ப் பொய்க்கதையை சேர்த்துவிட்டிருக்கின்றார்கள். அவை யாதெனில் பகவன் ஆட்டுக்குட்டியைத் தூக்கிக்கொண்டு பிராமணர்களென்போர் யாகஞ்செய்யும் இடத்திற்கே போனதாகவும் யாகத்தைத் தடுத்ததாகவும் அதனால் ஆடுகளை நெருப்பிலிட்டுக் கொல்லாமல் நிறுத்தியதாகவும் ஓர் கட்டுக்கதையை நுழைத்து யாத்திரைக்காரர்களிடங் கொடுத்திருக்கின்றார்கள். அவர்களும் அதை மெய் என்று நம்பி எடுத்துப் போய் இப்போது அச்சிடும் புத்தகங்களில் வெளியிடுகின்றார்கள். இவைகள் யாவும் தற்கால வேஷப்பிராமணர்கள் புத்தர்காலத்திலேயே இருந்தார்களென்று கூறி தங்கள் பொய்வேஷங்களையும், பொய்வேதங்களையும், பொய் வேதாந்தங்களையும், பொய்ப் புராணங்களையும் முற்படுத்திக்கொள்ளுவதற்காய சமய பேதக் கட்டுக்கதைகளேயன்றி யதார்த்த சரித்திரமாகமாட்டாது. அவர்களுக்குள் பெரும்பாலும் மாடுகளையும், குதிரைகளையும் சுட்டுத் தின்றதாக வரைந்துக்கொண்டிருக்கின்றார்களன்றி ஆடுகளை நெருப்பிலிட்டுச் சுட்டுத் தின்றதாகக் கிடையாது. புத்தரது பரிநிருவாணமடைந்த ஆயிரத்தி எண்ணூறு வருடங்களுக்குப் பின்பே மிலேச்சர்களென்னும் ஆரியர்கள் வந்து குடியேறி கொல்லாவிரதம் பூண்டிருந்த பௌத்தர்களின் முன் மாமிஷந் தின்பதற்கு பயந்து மாறுபாடாய யாகமென்று கூறி மாடுகளையும் குதிரைகளையும் சுட்டுத்தின்ற கதைகள் புத்தருக்குப் பின்னிட்டவைகளேயன்றி முன்பிருந்ததன்று. ஆதலின் புத்தரது காலத்திலேயே ஓர் வேஷப்பிராமணனிருந்தான், வாது புரிந்தான் புத்தமார்க்கத்திற் சேர்ந்தானென்னுங் கதைகளை ஏதேனுங் காணுவீர்களாயினும் புத்தருக்கு முன்பு சாதிபேதங்கள் இருந்ததென்றாயினும் புத்தகங்களில் காணுவீர்களாயின் அவைகள் யாவையுங் கற்பனாகதைகளென்று அகற்றி நீதிநெறி வாய்மெகளை மட்டிலும் உணரல் வேண்டும்.

அத்தகைய உணர்ச்சியில் சாதிபேதங்களே சகல கேடுகளுக்கும் மூலமாகவும் சாமி சண்டைகளே சகல விரோதங்களுக்கும் மூலமாகவும் விளங்குகிறபடியால் கேட்டிற்குப் போகும் வழிகளிலும் விரோதத்தை வளர்க்குமிடங்களிலும் அணுகாது தேகசுத்தம், உடை சுத்தம், மனோசுத்தம், வாக்கு சுத்தமுடையவர்களாயிருந்து சுகவாழ்க்கைப்பெறவேண்டிய ஒவ்வொரு