பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 195

ஆயுதவல்லபத்தால் கலிவாகுச் சக்கிரவர்த்தி என்னுந் தீவரப்பெயருண்டாயிற்று. அவன் ஏகசக்கிராதிபதியாக ஆண்ட இவ்வுலகத்திற்குக் கலியுலகமென்று வகுத்ததுமன்றி அவன் தலைத்தார் வேந்தன் என்னும் சக்கிரவர்த்தி பீடத்திற்கு வந்தது முதல் கலியுலக வருஷமென்னும் ஓர் கணிதநிலையையும் வகுத்து வைத்தான். அவன் வம்மிஷ வரிசையோர் கணிதத்தில் சிறப்புற்றிருந்ததுமன்றி வாகுவென்னும் ஆயுதவல்லபத்தால் கலிவாகு, குலவாகு, கணவாகு, வீரவாகு, இட்சுவாகு என்னும் ஒன்பது சக்கிரவர்த்திகள் கலியுலகமென்னும் தங்கள் மூதாதை கணித்த வருஷத்தைக்கொண்டு சகல கணிதங்களையும் வரிவடிவின்றி ஒலிவடிவாம் சுருதியில் நிலைக்கச் செய்யும் ஆறாவது சங்கத்தோர் தோன்றினார்கள்.

அவன் அரசுக்கு வந்தகாலத்தில் தேசமெங்கும் மழைபெய்து பயிர்களோங்கி குடிகளும் சிறப்புற்று அரசனும் சன்மானிக்கப்பெற்றான். அதை உணர்ந்த கலிவாகு மேஷராசியிற் சூரியன் வந்தகாலத்தில் அரசை ஏற்றபடியால் அதையே முதல்மாதமாக்கி மீனத்தில் சூரியன் வருங்காலத்தைக் கடைமாதமாக்கி ஒரு வருஷமென வகுத்து அவ்வருஷத்தில் தான் கண்ட சுப பலன்களால் அதையே தன்னரசுக்கு முதல்வருஷமாகக் கொண்டு பாலிபாஷையிற் பிரபவ வருஷமென்னும் பெயரைக் கொடுத்தான். அதை அநுசரித்துப் பின்வரும் வருஷங்களில் கிரகசஞ்சாரபேதங்களால் உலகத்தில் உண்டாகும் சுபாசுப குணங்களை அநுசரித்து நிறைவேறிவரும் பலன்களுக்குத் தக்கவாறு விபவ, சுக்கில, பிரஜோத்பத்தி, ஆங்கிரீஸ என்னும் பெயர்களைக் கொடுத்துவந்தான்.

இவ்வகையாக அவ்வவ்வருஷ குணாகுணங்களுக்குத்தக்கப் பெயர்களைக் கொடுத்துக்கொண்டு அவன் அரசுக்கு வந்த அறுபதை அக்ஷய வருஷம் என்னும் பெயரைக் கொடுத்து அதே வருஷத்தில் மரணமடைந்தான். இக்கணிதங்களை அநுசரித்துவந்த சாக்கைய குலத்தார் கலிவாகுச் சக்கிரவர்த்தி அரசுக்கு வந்த அறுபது வருஷத்திற்குமேல் அறுபத்தொன்று, அறுபத்திரண்டென்னும் நீண்ட கணக்காக்கி அவனது அறுபது வருஷ அரசவாழ்க்கை கியாபகத்தில் மாறாமலிருப்பதற்கு கணிதா சுருதி சிந்தனையில் பதித்து வந்தார்கள்.

மணிமேகலை

கதிரோன் தோன்றுங் காலையாங்கவ, / னவிரொளிகாட்டும் மதியே போன்று,
மைத்திருள் கூர்ந்த மனமாசு கழூஉம், / புத்த ஞாயிறு தோன்றுங்காலை,
திங்களு ஞாயிறுந் தீங்குறா விளங்க.

யிருதிளவேனி லெறிகதி ரிடபத், / தொருபதின் மேலும் ஒரு மூன்று சென்றபின்,
மீனத்திடனிலை மீனத்தகவயில், / போதித்தலைவனோ பொருந்திய போழ்தத்து.

சாக்கையராளுந் தலைத்தார்வேந்தன். / ஆக்கையுற்று தித்தன னாங்கவன் றானென,
தண்ணன் சாக்கையர் தவள மால்வரை ,. / மண்முகனென்னு மாவரசிடநிலை,
பொன்னின் கோட்டது பொற்குளம்புடையது, / தன்னலம் பிறர்தொழ தான் சென்றெய்தி,
யீணாமுன்னர் இன்னுயிர்க்கன்று, / நான் முலை சுரந்து நன்பாலூட்டலும்,

கலிவாகு சக்கிரவர்த்தியின் அரசாங்க கலியுலகின் நீண்டகணக்கு 1616-ல் சாக்கைய குல வீரவாகு வம்மிஷ வரிசையில் மண்முகவாகென்னும் அரசனுக்கும், மாயாதேவி என்னும் இராக்கினிக்கும் சித்தார்த்தி வருஷம் வைகாசி மாதம் 13-ம் நாள். பௌர்ணமி திதி கேட்டை நட்சத்திரம் மீனலக்கினம் ஆதிவாரம் அதிகாலையில் ஓர் ஆண்குழந்தை பிறந்தது.

அக்காலத்தில் தேசமெங்கும் சிற்சில நற்சகுனங்கள் தோன்றி அதைக் கண்ட சிற்றரசர்களும், சோதியின் இடங்கண்டு குணங் கூறும் சோதிட சாஸ்திரிகளும் குழந்தையைக் காணும்படி வந்தார்கள்.

வந்தவர்களுள் அசித்தா என்னும் பெரியவர் தங்கள் மூதாதை கலிவாகு வகுத்துக் கூறிவந்த அங்கபாக லட்சணங்களைக்கொண்டு குழந்தையின் குணக்குறிகளை ஆராய்ந்து கண்கலங்கி தேம்பலுற்றழுதார்.

அதைக்கண்ட அரசன் மனங்கலங்கி பெரியோய் தாங்கள் துக்கிக்குங் காரணமென்னை. குழவிக்கு ஏதேனும் ஆபத்துண்டோ என வினவினான்.