பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196 / அயோத்திதாசர் சிந்தனைகள்

பெரியோன் மண்முகனைநோக்கி அரசே! குழந்தையைப்பற்றி நீர் யாதுக்கும் அஞ்சவேண்டாம். இதன் அங்கபாத தாமரை ரேகையின் பலாபலனை ஆராயுங்கால் குழந்தை வளர்ந்து பாலதானத்தில் ஏகசக்கிராதி தலைத்தார் வேந்தனாக விளங்கினும் விளங்கும், அல்லது வாலறிஞனாகத் தோன்றி சருவ சீவர்களுக்கும் சற்குருவாக விளங்கினும் விளங்கும். ஆதலின் அம்மகத்துவத்தை என் கண்குளிரக் காணாது அற்பாயுவைப் பெற்றுள்ளதால் துக்கித்தேனென்றான்.

அக்கணிதங்களை உணர்ந்த அரசன் பெரியவரை நோக்கி ஐயே! இக்குழந்தை பாலதானமுற்று வெளியேறாது அரசாங்க இச்சையில் நிற்பதற்கு யாது செய்யலாமென வினவினான்.

அரசே உமது புத்திரன் நமது மூதாதைக் கலிவாகு போதித்திருந்த சித்தார்த்தி வருஷம் பிறந்தபடியால் சித்தார்த்தி என்னும் பெயரை அளித்து பாலதானம் பதினாறு வயதுக்குமேல் வெளியிலெங்கும் விடாமல் விசித்திரக்கூடம் ஒன்று அமைத்து பிள்ளையின் மனதைக் கவரத்தக்க வினோத அரண்களும், நீர்வாவி தூற்றும் நந்தவனங்களும், பரிமளமமைந்த பூஞ்சோலைகளும், பட்சிகளின் நாதகீத நடன மஞ்சனங்களும் அமைத்து மைந்தனுக்கொற்ற மலையரசன் மகளை மணம்புரிந்து அவ்விருவரையும் பவழமால் வரையில் வைப்பதுடன் பரதநாட்டிய சங்கீத சல்லாபம் அமைந்த தோழிகளையும் வைத்து உலகவிசாரந் தோன்றாமற் செய்யவேண்டுமென ஆக்கியாபித்தார்.

அதைக்கேட்ட அரசன் புத்திரனுக்கு சித்தார்த்தி என்னும் நாமகரணஞ்சூட்டி சிற்பசாஸ்திரிகளை வரவழைத்து பவழமால்வரைக் கட்டும் உத்தேசத்தில் இருக்குங்கால்; காற்குளம்புகளும், கொம்புகளும், பொன்போன்ற நிறம் வீசும் ஓர் பசுவானது கன்று ஈணாமுன்னம் பிள்ளையின் அருகில் வந்து நின்று பால் சுரந்து வடிய ஆரம்பித்துள்ளதை அரசன் கண்டு கன்றீணா காராம் பசுவின் பாலை மைந்தனுக்கூட்டி பசுவின் அன்பின் மிகுதியையும், அதன் ஈகையையும் சகலருக்கும் விளக்கி அன்று முதல் தேசத்துள்ள சகல குடிகளும் பசுக்களுக்கு யாதொரு துன்பமும் அணுகாமல் பாதுகாக்க வேண்டுமென்று ஆக்கியாபித்தான்.

பசுவின்பால் உண்டமர்ந்த குழவிக்கு பாலிபாஷையில் கௌதமர் கௌதமரென்னும் மறுபெயரையும் அளித்தார்கள்.

சக்கிரவர்த்தித் திருமகன் நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமாய் வளர்ந்துவருங்கால் விளையும் பயிறு முளையில் தெரியுமென்பதுபோல் குழவி வளர்ந்து தனக்கொற்ற குழவிகளுடன் கீரையாடுங்கால் இரு விழியின் நோக்கங்களும், செயலும், அன்புமிகுத்தே விளங்கி வளர்ந்தது.

வளர்ந்த குழவிக்கு வயது ஐந்து ஆனவுடன் தந்தை, வில்வித்தை, வாகுவித்தை முதலியவைகளைக் கற்பிக்கவும், யானையேற்றம், குதிரையேற்றம் முதலியவைகளை ஏற்றவும் ஆரம்பித்தான். அதையுணர்ந்த சிறுவர் வில்வித்தையையும், வாகு வித்தையையும் குதிரை ஏற்றத்தையும், யானை ஏற்றத்தையும், எளிதில் உணர்ந்து தனது வித்தியா ஆசிரியருக்குக் காட்டுவதை உணர்ந்த ஆசிரியனுக்கு ஆனந்தமும் பயமுந் தோன்றி அரசனிடஞ் சென்று ஐயே, உமது புத்திரனின் இனிய பார்வையும், மிருதுவசனமும், அறிவினுட்பமு முள்ளச் செயல்களை ஆராயுங்கால் அவர் எனக்கு ஆசிரியனே அன்றி நான் அவருக்கு ஆசிரியனல்ல என்று கூறி விடைபெற்று தன்னில்லஞ் சேர்ந்தான்.

வாலவயதிற்குள் உண்டாகும் வாலறிஞன் செயல்களையும், குணங்களையும் நாளுக்குநாளறிந்த அரசன் பிள்ளையின் நுட்பவறிவின் செயல்களைக் கண்டு ஆனந்தமுற்றபோதிலும் பிள்ளை தன்னரசுக்கில்லாமல் போய் விடுமோ என்னுஞ் சிந்தாக்கவலையால் மாளிகையை நிருமிக்குஞ் செய்கையில் இருந்தான்.

அக்கால் வாலறிஞன் வீதியுலாவி வருங்கால் ஓர் குறுபருந்தானது புறாவைத் துறத்திக்கொண்டு வரவும் அப்புறா பயந்து பலவிடங்களில் ஓடியும் பருந்து துடர்ந்துவர புறாவானது சென்று சித்தார்த்தி சிறுவர் மடியில் ஒளிந்தது.