பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198 / அயோத்திதாசர் சிந்தனைகள்

எவ்வகை என்றார். அதிகம் உளைக்கின்றதே என்றான். உதிரம் வாரா உணர்ச்சியில் அதிகம் உளைக்குங்கால் உதிரம் வெளிவரத் தைத்தப் புறாவின் உடலுக்கு எவ்வகை உளையுமென்பதை அறியாயோ என்றார்.

அதைக்கேட்ட சிறுவனுக்கு பயமும், உணர்ச்சியுந்தோன்றி அரச புத்திரா, என் அம்பைப் புறாவின்பேரில் எய்தது அதிதோஷமாகத் தோணுதலால் க்ஷமிக்கவேண்டுமென்றான்.

அதற்கு கௌதமச் சிறுவர் நேயனே, நீர் செய்த துன்பத்தை நான் க்ஷமிக்கக் காரணனல்ல இப்புறாவுக்கு நேரிட்ட துன்பத்தை நீயே ஆற்றி ரக்ஷிக்கவேண்டுமென்று கொடுத்துவிட்டு அரண்மனைச்சேர்ந்தார்.

இத்தியாதி செயல்களையுங் கண்ணுற்ற அரசனுக்கு ஆனந்தமும், பயமுந் தோன்றிற்று. அதாவது, பதினாறுவயதுக்குள் அறிவின்விருத்தி பெற்றிருக்கும் வாலறிஞன் பதினாறு வயதுக்குமேல் அரசபாரத் துன்பஞ் சகியாது துறந்து விடுவானென்றெண்ணி மந்திரிகளைத் தருவித்து மைந்தன் மனதைக் கவர்ந்து இன்பத்தை பெருக்கும் மாளிகையை நிருமித்து மணத்தை முடிக்க ஆரம்பித்துக் கொண்டான்.

அரசபுத்திரன் வாலவயதிற் கொண்ட விவேக மிகுதிக்கு வாலறிஞன், வாலறிஞனென்னும் பெயரையும் அளித்தார்கள்.

அரசன் தனதரிய மைந்தன் சுகத்தை நாடி மலையரண், காட்டரண், மதிலரண், நீரரணாகும் நான்கரண்களில் மலையரணாகும் உச்சியில் ரத்தினாம்பரக் கலசமும், மத்தியில் நவநிறங்கள் பூர்த்த தாபரப் பூடுகளும் தென்றலுடன் குளிர் வீசும் ஜலதாரைகளும் மயில், குயில், நாரை, அன்னந்தூக்குணான் வாழும் மடலமேடைகளும், அடிவாரத்தில் கண்குளிரப் பசும்புற்களை அமைத்தும்;

முன்கலை திவாகரம் - நால்வகையரண்

மலையரண் காட்டரண் மதிலரண் ணீரர
ணிவையரு சிறப்பி நால்வகை யரணே.

காடரணென்னும் முல்லை, மல்லிகை, யிருவாட்சி, சண்பக, சந்தன, வைம்மண நிரைந்த புட்பவிருட்சங்களையும் வாழை, பலா, மா, அத்தி நிரைந்த கனி விருட்சங்களையும் மான், முயல், புறா முதலிய சீவன்களுலாவும் சோலைகளை அமைத்தும்;

நீரரணென்னும் சுத்தநீர் வாவிகளும், பளிங்குகளிழைத்த பாக்கு நீரோடைகளும், கிரீடை வாவிகளும், எக்காலுங் குளிர்ந்த நீரூற்று சயன கற்களும், பன்னீரோடைகள் அமைத்தும்;

மதிலரண் விடுக்குமுன் பளிங்குகளிழைத்த கீதா மண்டபமும், பச்சைகளிழைத்த லீலா மண்டபமும், பவழங்களமைந்த உலாவு மண்டபமும், அறுசுவை அருந்தும் அம்பர் மண்டபமும், மோகனா தோழிகள் வாழும் முத்து மண்டபமும், அவைகளைச் சுற்றி பொன் தகடுகள் வேய்ந்த மதிலும், அதற்கப்பால் வெள்ளி தகடுகள் வேய்ந்த மதிலும், அதற்கப்பால் இரும்புகளால மைத்த மும்மதிலுங் கட்டிமுடித்து ராஜ கிருக மென்னும் பெயரையு மளித்தார்கள். சக்கிரவர்த்தித் திருமகன் வாழ்க்கையில் துக்கச்செயலாகும் அழுகை, பற்கடிப்பு முதலிய தோன்றாமலும் பிணிகொண்ட உடலும், மூப்படைந்த தேகங்களுங் கண்ணிற்காணாமலும், ஆதுலர்கட் பரிதாபக் கூக்குரல் செவிகளிற் கேளாமலும், வெளியிலுள்ளவர்கள் உத்திரவில்லாமல் உள்ளுக்குப் பிரவேசியாமலும், உள்ளுக்கிருப்பவர்கள் வெளியேறாமலும் இருக்கக்கூடிய விச்சித்திர மாளிகைகளை நிருமித்து இரும்பு தகடுகள் வேய்ந்த மதிலும், வெள்ளித்தகடுகள் வேய்ந்த மதிலும், பொன் தகடுகள் வேய்ந்த மதிலுமமைத்து மைந்தனுக்கு விவாகத்தை ஆரம்பித்து, மந்திரிகளைத் தருவித்து தசாங்கச் சிறப்புகளாகும் ஆறலங்கிருதம், மலையலங்கிருதம், யானை யலங்கிருதம், குதிரை அலங்கிருதம், நாடலங்கிருதம், நகரலங்கிருதம், கொடியலங்கிருதம், முரசலங்கிருதம், தாரலங்கிருதம், தேரலங்கிருதஞ் செய்யும்படி ஆக்கியாபித்தான்.'