பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202 / அயோத்திதாசர் சிந்தனைகள்

சுத்தவிதயன் தனது புத்திரனால் வருத்தவித்து முளைத்ததும் பட்டமரந் துளிர்த்ததுமாகிய அபூர்வச்செயல்களைக்கண்டு திகைத்து இக்குழந்தையின் இயல்பில் ஆச்சரியச்செயல்கள் தோன்றுகிறபடியால் நமதரசாங்கத்தை ஒருபொருளா எண்ணி நடத்துமோ அன்றேல் துரும்பென்றெண்ணி துறக்குமோவென்னும் அச்சங்கொண்டு உலர்ந்த உலக்கை துளிர்த்தபடியால் பிண்டி நாதன் என்னும் மற்றோர் பெயரளித்து தன் புத்திரன் மனதை சிற்றின்ப லீலா வினோதத்தில் ஆழ்த்தி வைக்கவேண்டும் என்னும் நோக்கத்தினால் வீணையில் வல்லபமுள்ள ஊர்வசி என்னுமோர் குமரியையும், பரதநாட்டியத்தில் வல்லபமுள்ள அரம்பையென்னும் ஓர் குமரியையும், அபிநயத்தில் மிகுத்த திலோர்த்தமை என்னும் ஓர் குமரியையும், சங்கீதத்திற் சாதுரிய மேநகை என்னுங் குமரியையும் தருவித்து அவர்களுக்கு வேண்டிய பரிசுகளளித்து நீங்கள் நால்வரும் விசித்திரக்கூடத்திற்குச் சென்று என் புத்திரன் மனதை ஆயாசத்திலுந் துக்கத்திலுஞ் செல்லவிடாமல் எக்காலுஞ் சுகபோக சிந்தையில் நிறுத்தி வீணையிலும், அபிநயத்திலும், சங்கீதத்திலும், நாட்டியத்திலும் மயக்கி வைத்திருக்கும்படி ஆக்கியாபித்தான்.

அவ்வாக்கியத்தை சிரமேற்கொண்ட தோழிப்பெண்கள் நால்வரும் சித்திரக்கூடஞ் சேர்ந்து அசோதரைக்கு ஏவல்புரிந்து வருவதுடன் அரம்பை தன்னாட்டியத்திலும், திலோர்த்தமை தன்னபிநயத்திலும், மேனகை தன் சங்கீதத்திலும், பிண்டிநாதனை மகிழ்ப்பித்திருந்த போதிலும் ஊர்வசிமட்டிலும் தன் வீணையிற் தனக்கு நிகர் ஒருவருமில்லை என்னும் மமதை கொண்டிருந்தாள். அதை உணர்ந்த பிண்டிநாதன் ஓர்நாள் ஊர்வசியை அருகில் அழைத்து வீணையை மீட்டும்படி ஆக்கியாபித்தார் அவளும் வீணையைக் கையிலேந்தி ஏழாழ் முடிக்கி ஆ-சோ-ம-பு-கு-சு-ச என்னும் ஒலிவடிவ சப்த இசையால் வாசித்தனள்.

ஊர்வசி கரத்திலிருந்த வீணையைப் பிண்டிநாதன் கரத்திலேந்தி வீணையின் முதலாழ் தொனியை மயிலிரைச்சல் போலும், இரண்டாமாழ் தொனியை இடப தொனிபோலும், மூன்றாமாழ் தொனியை ஆடு கரைதல்போலும், நான்காமாழ் தொனியை கொக்குளைத்தல் போலும், ஐந்தாமாழ் தொனியை குயிலோசைபோலும், ஆறாம் ஆழ்தொனியை குதிரை கனைப்பைப் போலும் ஏழாம் யாழ் தொனியை யானை வீரிப்பு போலும் அமைத்து மிடற்றால் குறலும், நாவினாற்றுத்தமும், அண்ணத்தாற் கைக்கிளையும், சிரத்தாலுழையும், நெற்றியால் விளியும், நெஞ்சால் விளரியும், மூக்காற் ஆரமும் ஆகும் ஏழிசைகளைப் பெருக்கி வாசிக்குங்கால் அவ்விடமுள்ளவர்களில் விழித்த கண்ணோர் விழித்த பார்வையிலும், மேனோக்கினோர் மேனோக்கிலும், நின்றவர்கள் இடம் விட்டுப் பேராமலும், அவரவர்கள் தேகங்கள் அசையாமலும், அயர்ந்து நின்றுவிட்டார்கள். மும்மதிலுக்கும் புறம்பேயுள்ளவர்கள் சப்ததாதுக்களாலெழும் வீணையின் ஓசையைக் கேட்டு சித்திரகூடத்தில் வசிக்கும் கோபாலன் அதாவது அரச புத்திரன் வீணை வாசிக்கின்றா ரென்றரிந்து இசைகளின் சுகத்தால் வீணைகோபாலன் வீணைகோபாலன் எனக் கொண்டாடிச் சென்றார்கள்.

வீணைகோபாலன் வாசித்த வீணையின் நாதத்தையும், இசையையுங் கேட்ட ஊர்வசியானவள் தனது சிரத்தை கோபாலன் பாதத்திற்பட வணங்கி (சத்தாரி) சருவசீவர்களுக்கும் (ஆகம ) ஒழுக்கத்தை அருளும் (பதநீ) நின் கமலபாதத்தை சிந்திக்கின்றேனென்றாள்.

பாலிசுரசாயுத்ய சுருதி சூத்திரம்.- சத்தாரி-ஆகம பதநி எனும் பாலி ஒலி மொழிகளை பாகித்து ச-ரி-க-ம-ப-த-நீ என சப்தசுர ஒலியால் வீணையை மீட்டி சிந்தித்தாள். அன்று முதல் இதே சிந்தனையைக் கேட்டவர்களும், வீணை கற்றவர்களும், வாரசுரம் ஏழையும் விடுத்து சத்தாரி, ஆகம, பதநீ யாகிய ச-ரி-க-ம-ப-த-நீ என வீணை கோபாலனை சிந்திக்கும் சப்தவொலிகள் நிலைக்க ஏழாழ் முடிக்கி ஏழோசை இசைத்து ஒலிவடிவ மாறலிசையால் வாசித்து வந்தார்கள்.