பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 203

வீணைகோபாலன் வாசித்த ஏழாழினோசையால் கேழ்ப்பவர்களுக்கு மனோலய ஆனந்த சுகமுண்டாகி இதயாக்கினிதணிவதற்கோர் கலைக்கருவியாக விளங்கினபடியால் வீணைவிருத்த முதற்குருவானார் ஓர் சங்கத்திற்கு இதத்தைக் கொடுக்குங் கலைக்கியானத்திற்கு சங்கீதமென்னும் ஓர் பெயருண்டாயிற்று.

சக்கிரவர்த்தித் திருமகன் சங்கீதங் கோஷிக்குங்கால் அவர் முகம் பேரியாழ் முடிக்கி சச்சற்புட மிடுங்கால் சாத்தியோசாத முகமாகவும், சகோடயாழ் முடிக்கி சாசற்புட மிடுங்கால் வாமமுகமாகவும், மகரயாழ் முடிக்கி சம்பத்து வேட்ட மிடுங்கால் தற்புருட முகமாகவும் ஆகிய சதுர் முக தோற்றங்களுண்டாயிற்று. அதனாற் சித்தார்த்தரை சதுர்முகன் சதுர்முகனென்றும் அழைத்தார்கள்.

பின்கலை நிகண்டு

தேனவிழ்த் தளிர்களெல்லாஞ் - செவ்வழி பாடானின்ற,
பூனகைத் திலங்கு கஞ்சப் - பொகுட்டின்மீதே ஒதுங்கும்,
நான்முகக் கடவுள் பாத - நாவினா னவிற்றி ஏத்தி,
மானவர்க்கியன்றபேரை - வகுத்திடுந்தொகுதி சொல்வாம்.

நன்நூல்

பூமலிய சோகின் புனை நிழலமர்ந்த,
நான்முகன் தொழுது நன் கியம்புவனெழுத்தே.

சீவகசிந்தாமணி பதிகம்

கோனைக்களிற்றுத் தொடித்தேரி உளிக்கடல்சூழ்,
வாண்மொய்த்த தானை அவன் தம்பியுந் தோழன் மாரும்,
பூண்மொய்த்த பொம்மன் முலையாரும் புலந்துறப்ப,
வீணைக்கிழவன் விருந்தார் கதிசென்றவாறும்.

சங்க இதத்திலும், வீணை அபிநயத்திலுந் தினேதினே சுகித்து மலைமகள் லீலாவினோதனாய் துக்கமென்பது அணுவேனுந் தோற்றாமல் ஆண்டாண்டு நிகழ்ச்சியில் அசோதரைக்கு கருப்பமுண்டாகி அன்பின் பெருக்கும், ஆலிங்கன விருப்பும் அதிகரித்து நிற்குங்கால் சதுர்முகர்க்கோர் சங்கை தோன்றிற்று, அதாவது தான் அறுசுவை புசிப்பிலும், அபிநய விழிப்பிலும், அணை சயனத்திலும் ஆனந்தித்திருப்பதுபோல் அரசுக்குள் அடங்கியக் குடிகளும் இத்தகைய ஆனந்தத்தில் இருப்பார்களோ என்பதேயாம்.

இவ்வகை சிரேஷ்டவெண்ணமுதித்தவுடன் அரசனை வரவழைத்து தந்தையே, நம்முடைய தேசக்குடிகளின் சுகாசுகங்களைக் கண்டறிய வேண்டி விருப்புற்றிருக்கின்றேன் உத்திரவாகவேண்டுமென வினவினார்.

உடனே அரசன் திகைத்து மைந்தன் ஊர்வலம் வருங்கால் குடிகளின் அசுகபேதங் கண்களிற் தோற்றுமாயின் அதே துக்கத்திற் துறப்பாரென்னும் பீதியால் திருமகன் தேரூறும் வீதிகள் யாவையும் அலங்கரிக்கச்செய்து மைந்தனுக்கு ஊர்வல உத்திரவளித்தான்.

சித்தார்த்தி சதுர்முகன் சதுரங்க சேனைகள் சூழ ஊர்வலம் வருங்கால் வீதிகடோரும் வாழை, கமுகு, கரும்பு முதலியவைகளை நாட்டி பவழ தோரணம், முத்து தோரணங்கள் உயர்த்தி வீடுகடோரும் கற்புடை மாதர்க் கரங்களில் கர்பூராலமேந்தி கனகமழ் சுன்னந் தூவி நிற்கவும், அசுகபாவனையோர் எதிர்த்தோற்றாமல் எச்சரிக்கைக் கூறவும், பதாதி சேனைகள் வேறு பராக்குராமல் அரச பராக்கில் நிற்கும் ஜாக்கிரதையிலிருந்தும், ஓர் வீதியில் நரை திரை முதிர்ந்த ஒர் மனிதன் கூன் வளைந்து தடியூன்றி தள்ளாடி வருவதைக் கண்டவுடன் இரதத்தை நிறுத்தும்படி ஆக்கியாபித்துக் கீழிரங்கி மூப்பனை அணுகி நீவிர் யாரென்றார். அவன் மூப்பினாற் கண்பஞ்சடைந்து செவியுந் தூர்த்திருந்தபடியால் மறுமொழி யாதுங் கூறாமல் திகைத்து நின்றான்.

சித்தார்த்தி சதுர்முகன் அருகிலுள்ளவர்களை அழைத்து இஃது யாது. நம்போன்ற தேகியா அன்றேல் வேறு சீவனோவென உசாவினார். அதற்கு அவர்கள் அரசனே, இவன் நம்மெய்ப் போன்ற தேகியே ஆயினும் வயதேற தளர்ந்து தள்ளாடுவதுடன் கண்களின் பார்வையும், செவிகளின் கேட்டலும் அடங்கி விட்டது என்றார்கள்.