பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 207

பிணிகள் தோற்றும் பீடங்களை ஏனுங் கண்டதுண்டோ என்றார்.

பிணிகளின் உற்பவ காரணம் அறியோமென்றார்கள்.

கண்காட்சியில் தோன்றும் பிணியோற்பவம் அறியாதார் பிறவியோற்பவம் அறிந்தாற்போல் பேசுவது பேதைமெய் அன்றோ என்றார்.

பேதைமெயே என்றொப்புக் கொண்டு அவரவர் இல்லஞ் சேர்ந்தார்கள்.

தம்மராசன் மூன்றாஞ் சங்கத்தோரை வரவழைத்து பெரியோர்களே, தங்கள் சங்கத்தின் உத்தேசமும் அதன் பயனும் யாதென்றார்.

அரசே, எங்கள் உத்தேசம் மனிதனுக்கு யாதொரு சுகமும் கிடையாது. பிறப்பது ஆதி, இறப்பது அந்தம், இறந்தபின் சகலமும் சூன்யமாதலால் விழித்திருப்பவன் சூனியத்தை விசாரிப்பதில் யாதொரு சுகமுங் கிடையாதென்பதே என்றார்கள்.

அருங்கலைச்செப்பு - மூன்றாஞ் சங்கவியல்

மக்கட் பிறப்பிற் சுகமு மில்லை / இக்கட்டிடு குறையால்.
பிறப்பதாதி யிறப்பதந்தங் / குறிப்பாம் பாழ்நிலையால்.
விழிப்போன் பாழை வினவுவதெல்லாம் / பழிப்பின் பகுதியேயாம்.

பெரியோர்களே, உலகத்தில் ஆணுக்குப் பெண்ணும், நன்மெய்க்குத் தின்மெயும், சூட்டிற்கு குளிர்ச்சியும், இருளுக்குப் பகலும், தூக்கத்திற்கு விழிப்பும் எதிரடையாகத் தோன்றுவதுபோல் துக்கத்திற்கு சுகம் எதிரடையாக வேண்டுமே. அங்ஙனம் இராததற்குக் காரணம் என்னை என்றார். மனிதன் பிறந்தது முதல் இறக்குமளவும் துக்கமே தோற்றமாதலின் சுகமில்லை என்பது கருத்தாம் என்றார்கள்.

உங்களுக்குச் சுகமென்னும் உணர்ச்சித் தோன்றியவிடத்தில் துக்கம் விளங்கிற்றா அன்று வேறாகத் தோன்றிற்றா என்றார். சுகம் உணரும் இடத்தில் துக்கம் விளங்குகிறதென்றார்கள். மனிதனுக்கு சுகமில்லை என்று கூறுங் காரணமென்னை என்றார். விசாரணைக் குறைவே என்று ஒப்புக்கொண்டார்கள்.

ஆதி என்னுந் தோற்றம் உண்டானபோதே அந்தமென்னும் முடிவும் இருப்பதாக விளங்குகின்றது. ஆதலின் தாங்கள் கூறும் பிறப்பிற்கும் இறப்பிற்குங் காரணம் எதுவென உசாவினார்.

அதன் காரணங்களை அறியோமென்றார்கள்.

பெரியோர்களே தங்கட் கண்களில் தோற்றும் பொருட்களை சூன்யம் என்கிறீர்களா தோற்றாப்பொருட்களை சூன்யம் என்குறீர்களா என்றார்.

தோற்றும் பொருட்கள் மறைந்தவிடத்தை சூன்யமென்றோமென்றார்கள்.

சூனியத்தினின்று எதேனுந் தோற்றுமோ என்றார்.

அதன் விளக்கம் அறியாது விழித்தார்கள்.

பெரியோர்களே, உங்களுக்குள்ள சூனியம் இருக்கட்டும் பிணிகளின் உற்பவம் ஏதேனுங் கண்டீர்களோ என்றார்.

அரசே, உபத்திரவங் கண்டு தீறும் பிணி ஒன்று, உபத்திரவங் கண்டு கொல்லும் பிணியொன்று ஆக இரண்டு பிணிகளைக் கண்டுள்ளோ மென்றார்கள்.

பெரியோர்களே இவ்விரண்டு வகைப் பிணிகளின் உற்பவங்களைக் கண்டீர்களோ என்றார்.

அறியோமென்றார்கள்.

மனிதன் மூப்படையுங் காரணத்தையேனுங் கண்டதுண்டோ என்றார்.

அதையும் அறியோமென்றார்கள்.

மனிதன் மரணத்திற்கு உள்ளாகுங் காரணங்களையேனுங் கண்டதுண்டோ என்றார்.

அதையும் அறியோமென்றார்கள்.

பெரியோர்களே, தாங்கள் கொண்ட விசாரிணையால் உங்களுக்கேனும், உங்களைச் சார்ந்தவர்களுக்கேனும் பயனுண்டோ என்றார்.

யாதொரு பயனையும் அறியோம் என்றார்கள்.