பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208 / அயோத்திதாசர் சிந்தனைகள்

பயனற்ற சங்கத்தைச் சாருதலும், பயனற்ற வார்த்தைகளைப் பேசுதலும், பாழாதலின் பெரியோர்களே தங்கடங்கள் இல்லங்களில் சேருங்கோளென்று அனுப்பிவிட்டார்.

சக்கிரவர்த்தித் திருமகன் நான்காம் சங்கத்தோரை வரவழைத்து ஆசனமீய்ந்து பெரியோர்களே, தங்கள் சங்கத்தின் நோக்கம் யாது, அச்சங்கத்தால் தாங்கள் அடைந்த பலன்கள் என்னை அதை விவரிக்க வேண்டும் என்றார்.

அரசே, எங்கள் சங்கத்தின் நோக்கம் யாதென்பீரேல்,
சீவர்களுக்கு ஆதியுங்கிடையாது, அந்தமுங் கிடையாது, நன்மெயுங் கிடையாது, தீமெயுங்கிடையாது எல்லாம் தானே ஏற்றுக்கொள்ளுவதால் யாவுந் தற்செயலென்றே கொள்ளுவதாக்குமென்றார்கள்.

அருங்கலைச்செப்பு - நான்காஞ் சங்கவியல்

தோற்றும் பிறப்பின் முதலுமில்லை / யாற்றுங் கடையுமது.
நன்மெயுமில்லைத் தீமெயுமில்லை / புன்மெயூர் சீவர்க்கது.
முற்செயல் யாவை யூர்ந்து மேற்றல் / தற்செயலென்றே யறி.

தம்மராஜன் அங்கு வந்துள்ள ஓர் பெரியவரைநோக்கி பெரியோய் உமக்கு வயதென்ன என்றார்.

அரசே, எனக்கு நாற்பது வயதாகின்றது என்றார். இவ்வயதை உமது ஆதி உற்பவங்கண்டு சொல்லுகின்றீரா, அன்றேல் அனாதியினின்று சொல்லுகின்றீரா என்றார்.

அரசே, என் ஆதியுற்பவங்கொண்டே சொல்லுகின்றேனென்றார்.

பெரியோய் அங்ஙனம் சீவர்களுக்கு ஆதியுமில்லை அந்தமும் இல்லை என்று கூறிய கருத்தென்னவென்றார்.

அரசே, சீவர்களுக்கு ஆதியுங் கிடையாது அந்தமுங் கிடையா தென்றார்கள்.

பெரியோர்களே, சீவர்களென்றால் ரூபிகளா அரூபிகளாவென்றார்.

அரசே, அரூபியே என்றார்கள்.

பெரியோர்களே, சீவர்கள் அரூபவஸ்துக்களாயின் மநுடசீவர்களென்றும் மிருக சீவர்களென்றும் ரூபங்களைக் குறிக்குங் காரணம் யாதென்றார்.

அரசே, தேகத்தை ஆட்டுவது சீவனேயன்றி தேகம் சீவனாகாதே என்றார்கள்.

பெரியோர்களே, உங்கள் கண்ணினால் தேகம் ஆடுவதைக் கண்டீர்களா தேகத்தை ஆட்டி வைப்பதைக் கண்டீர்களா என்றார்.

அரசே, தேகம் ஆடுவதையே கண்டோமென்றார்கள்.

பெரியோர்களே, தேகத்தை ஆட்டிவைப்பது ஓர் சீவனென்று கூறியது காணாமற் கூறும் பொய்யல்லவோ என்றார்.

அரசே, நாங்கள் கூறும் வழக்கமென்றார்கள்.

பெரியோர்களே, அறியாத சங்கதிகளை அடுத்துச்சொல்லி அயலாரைக் கெடுக்கும் பொய்யே தின்மெயாயிருக்க நன்மெயுமில்லை தின்மெயுமில்லை என்று கூறுவது பெரும் பொய்யல்லவோ என்றார்.

அரசே, நன்மெயுந் தின்மெயும் தீதென விளங்காமற் கூறுவது பொய்யாமோ என்றார்கள்.

பெரியோர்களே, விவேகிகளுக்கும் ஓர் சங்கம் வேண்டும், கள்ளர்களுக்கும் ஓர் சங்கம் வேண்டும், ஆதலின் தாங்கள் கூடியுள்ளது யாது சங்கமென்றார்.

அரசே, யாங்கள் கூடியுள்ளது விவேகிகள் சங்கமென்றார்கள்.

பெரியோர்களே, தங்கள் சங்கத்தை கள்ளர் சங்கமென்றாலோ என்றார்.

அரசே, யாங்கள் கள்ளர்களல்லவே என்றார்கள்.

பெரியோர்களே, கள்ளர்களென்றால் தீயச்செயலை உடையவர்களோ என்றார்.

அரசே, ஆமென்றார்கள்.

அப்போது நன்மெயுமில்லை தீமெயுமில்லை என்பது உங்கள் வழக்கமோ என்றார்.

அதற்கும் ஆமென்றார்கள்.

ஆதியுமில்லை, அந்தமுமில்லை, நன்மெயுமில்லை, தீமெயுமில்லை என்று