பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 209

சொல்லித்திரிவது உங்கள் சங்கத்தின் இயல்பு போலும் என்றார்.

மாறுத்திரங் கூறாமல் மௌனத்திலிருந்தார்கள்.

பெரியோர்களே, தாங்கள் ஒவ்வொருவரும் சொன்னதைச் சொல்லுங் கிள்ளைபோன்றவர்களாதலின் உங்களால் உள்ள சங்கை விளங்காது, தங்கடங்கள் இல்லஞ்சேர்ந்து ஆதி அந்தத்தை ஆராய்ச்சி செய்யுங்கோள் என்று அனுப்பிவிட்டார்.

அதன்பின் சித்தார்த்தி சிறுவர் ஐந்தாவது சங்கத்தோர்களை வர வழைத்து பெரியோர்களே, தங்கள் சங்கத்தின் நோக்கமும் அதன் பயனும் யாதென உசாவினார்.

ஐந்தாவது சங்கத்தார் சிறுவரை நோக்கி அரசே, எங்கள் சங்கத்தின் நோக்கம் புசிப்பை விரும்பாதவனும், தாகத்தை அடக்குவோனும், அக்கினியின் கொதிப்பை சகிப்பவனும், சூரியன் வெப்பத்தைத் தாங்குகிறவனும் எக்காலும் சுகமடைவான். இவைகளைத் தாங்காதவன் சுகமடைய மாட்டான் என்பதே என்றார்கள்.

அருங்கலைச்செப்பு - ஐந்தாம் சங்கவியல்

உண்ணலுணவை யொழிக்கு முளத்தான் / களங்கமகற்றுங்கரை
தீயவெப்பந்தாங்குந்தரியல் / ஆயசுகமென்றுணர்
இத்திரவொடுக்கமேவாதொருவன் / பற்றுஞ்சுகமற்றது.

பெரியோர்களே, தங்கள் தேகங்களில் பசி தானே தோற்றுகின்றதா அன்றேல் பசியைத் தாங்கள் தோற்றவைக்கின்றீர்களா என்றார்.

அரசே, பசி தானே தோற்றுகிறதென்றார்கள்.

அங்ஙனந் தானே தோற்றும் பசிக்குப் புசிப்பை விரும்பாமலிருக்கக் கூடுமோ என்றார்.

புசிப்பை விரும்பாமலிருந்தால் பசி எடுக்காமலிருக்கும் என்பது சங்கத்தின் கருத்தென்றார்கள்.

தற்காலந் தாங்கள் புசிப்புண்டு தேகத்தைப் போஷிக்கின்றீர்களா என்றார்.

அரசே, புசிப்புண்டு தேகத்தைப் போஷிக்கின்றோம் என்றார்கள்.

அங்ஙனம் புசிப்பை விரும்பாதிருத்தல் என்பதின் கருத்தென்னை என்றார்.

அஃதெங்கள் முன்னோர் கருத்தென்றார்கள்.

பெரியோர்களே, முன்னோர் கருத்தை உணராமல் பின்னோராகச் சொல்லிக் கொண்டு திரிவது உங்கள் கருத்துபோலும் என்றார். ஆமென்றார்கள்.

பெரியோர்களே, உங்கள் சங்கத்தோர்க்குப் பிணி, மூப்பு, சாக்காடு தோன்றுவதில்லையோ என்றார்.

அரசே, மூன்றுந் தோன்றுவதுண்டு என்றார்கள்.

பெரியோர்களே, இம்மூன்றின் உபத்திரவத்தால் உங்களுக்குத் துக்கம் உண்டா இல்லையா என்றார்.

அரசே, இம்மூன்றினாலும் எங்களுக்குத் துக்கம் உண்டு என்றார்கள்.

பெரியோர்களே, தங்கள் சங்கத்தோர் கருத்தின்படி நடந்தால் எக்காலுந்துக்கமணுகாவென்று கூறிய உங்களுக்கு இம்மூன்றினால் துக்கமணுகுங் காரண மென்னை என்றார்.

அரசே, எங்கள் சங்கத்தோர் நோக்கத்தைச் சொல்லிக்கொண்டு வருகிறோமன்றி அதன் பலனை அறியோமென்றார்கள்.

பெரியோர்களே, வியாபார சங்கமென்று சிலர்கூடி வியாபாரம் நடத்துவதில் ஓர் பயனைக் கருதி நடத்துகின்றார்களா பயனைக் கருதாமல் நடத்துகின்றார்களா. பூமியை விருத்தி செய்யும் ஓர் சங்கத்தார் உழுது பண்படுத்தி விதைப்பதில் அப்பயிற்றின் பயனைக் கருதி விதைக்கின்றார்களா கருதாமல் விதைக்கின்றார்களா என்று ஆராயுங்கால் ஓர் பயனையும் அதன் சுகத்தையுங் கருதியே செய்துவருவது கண்கண்ட காட்சியாகும்.

அங்ஙனமுள்ள தாங்கள் சங்கத்தின் கருத்தை சொல்லிக்கொண்டு அதன் பலனை அறியோமென்பது பாழல்லையோ என்றார்.

அரசே பயனற்ற சங்கம் பாழே என்று ஒப்புக் கொண்டார்கள்.