பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 211

அரசே, அவைகளிரண்டிற்கும் நவக்கோட்களே ஏதுவென்றார்கள்.

பெரியோர்களே, தீக்கோட்களென்றும், நற்கோட்களென்றும் பகுப்பு உண்டானதற்கு ஏதுக்களெவை என்றார்.

அரசே, அதனதன் செயல்களே ஏதுவென்றார்கள்.

பெரியோர்களே, தீச்செயலும், நற்செயலும் ஒழிந்தவிடத்தில் தீக்கோள் நற்கோளென்னும் பெயருண்டோ என்றார்.

மாறுத்திரங் கூறாமல் திகைத்து நின்றார்கள்.

பெரியோர்களே, தீக்கோட்கள் நல்ல பலனையும், நற்கோட்கள் தீயபலனையுந் தாராவோ என்றார்.

அரசே, அந்தந்த கிரகங்கள் நின்ற விராசிபேதத்தால் நற்கோட்கள் தீயபலனையும், தீக்கோட்கள் நல்லபலனையும், தருமென்றார்கள்.

பெரியோர்களே, சருவ செயல்களுக்கும் நவக்கோட்களே ஏதுவென்று முன்பு கூறினீர்கள் இப்போது இராசியை ஏதுவாக்குகின்றீர்கள். ஆக இவ்விரண்டில் எவற்றை முக்கிய ஏதுவாகக் கொள்ளலாம் என்றார்.

அரசே, இராசிகளையும் ஏதுவென்னலாம் என்றார்கள்.

பெரியோர்களே இராசிகளையும் கிரகங்களையும் ஏதுவாகக் கொள்ளுவதில் ஒவ்வொரு சீவராசிகளின் உற்பவங்களில் ஒரேராசியில் ஒரே கிரகம் பொருந்திவருமோ என்றார்.

அரசே, காலத்திற்கு காலம் இராசிகளுங் கோட்களும் மாறுபட்டு வருமென்றார்கள்.

பெரியோர்களே, காலமும் ஒரே துவாகும் போலுமென்றார்.

அரசே, கிரகங்களை முதலேதுவாகவும், இராசியை இரண்டாமே துவாகவும், காலத்தை மூன்றாவது ஏதுவாகவும் கொள்ளல் வேண்டு மென்றார்கள்.

பெரியோர்களே, காலத்தை அநுசரித்து இராசியும், இராசியை அநுசரித்துக் கிரகங்களும் இருக்கின்றபடியால் கிரகங்களை முதலேதுவாக எவ்வகையில் கொள்ளலாம் என்றார்.

அரசே, இம்மூன்றேதுக்களுள் முதலேதுவை எதுவென்று எங்களுக்கும் விளங்கவில்லையே என்றார்கள்.

பெரியோர்களே, மூன்று ஏதுக்களுக்கும் முதலேது அவரவர்கள் செயல்களென்றே விளங்குகிறதல்லவா என்றார்.

அரசே, அவரவர்கள் செயல்களே முதலேதுக்களென்று நாங்கள் எவ்வகையில் கண்டடைவோமென்றார்கள்.

பெரியோர்களே, தாங்களென்னை நாடி இவ்விடம் வந்தபின்பு இன்னகாலத்தில் வந்தோமென்று குறிப்பீர்களா வராததற்கு முன்பே காலத்தைக் குறிப்பீர்களா என்றார்.

அரசே, இவ்விடம் வந்தபின்பே இக்காலத்தில் வந்தோமென்று குறிப்போமென்றார்கள்.

பெரியோர்களே, அதுகொண்டு தாங்கள் வந்த செயல் முந்தியதா காலம் முந்தியதா என்றார்.

அரசே, நாங்கள் வந்தசெயலே முந்தியதென்றறிந்தோம் என்றார்கள்.

பெரியோர்களே, செயலைத் தழுவிக் காலமும், காலத்தைத் தழுவி இராசியும், இராசியைத் தழுவிக் கிரகமும் நிற்கின்றதல்லவாவென்றார்.

அரசே, அவரவர்கள் செய்கைகளையே முதலேதுவாகவும், காலத்தை இரண்டாமேதுவாகவும், இராசியை மூன்றாமேதுவாகவும், கிரகத்தை நான்காமேதுவாகவுங் கொள்ளுவோமானால் நமது மூதாதை கலிவாகு சக்கிரவர்த்தி வகுத்துள்ள கலியுலகக் கணிதங்கள் மாறுபடுமல்லவோ என்றார்கள்.

பெரியோர்களே, தங்கள் கணிதங்களை யான் மாற்றுவதற்கு வரவில்லை முன்செயலைக்கொண்டு காலமுங் கணிதமும் விளங்குகிறபடியால் முன்செயலை விட்டுக் காலமுங் கணிதமும் விளங்காதல்லவோ என்றார்.

அரசே, உலகத்தில் தோற்றும் பொருட்களின் உதயத்தைக்கொண்டு பலன்களை கணிக்கின்றோமன்றி அவைகள் தோற்றுஞ் செயலை அறியோமென்றார்கள்.