பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 215


நீங்காது பெருகுமென்னெஞ்சமு நிறுப்பாயோ
மறவாதவன்பினேள் மனனிற்குமாரருளாய்
துறவாத தமருடையேள் துயர்தீரு மாறருளாய்
காதலார் மார்பன்றி காமக்குமருந்துரையா
ஏதிலார் தலைசாய யானுய்யு மாறுரையாய்
இணைபிரிந்தார் மார்பன்றி இன்பக்கு மருந்துரையாய்
துணைபிரிந்த தமருடையேள் துயர்தீரும் மாறுரையாய்
பகைபோன்றது துறை பரிவாயினகுறி
நகையிழந்தது முகம் நணிநாடிற்று டம்பு
தகையிழந்தது தோள் தலைசிறந்தது துயர்
புகை பரந்ததுமெய் பொறையாயிற்றென்னுயிர்.

காசிக்கலம்பகம்

இல்லாளே முப்பத்திரண்டறமுஞ் செய்திருப்ப
செல்லார் பொழிற் காசிச்செல்வனார் - மெல்ல
பரக்கின்ற புன்கை பருவகல்கொண் டைய
மிரக்கின்ற வாறறிகிலேன்.

மாசிமாதப் பௌர்ணமியில் துறவடைந்த மன்னன் விம்பாசார் நகரிலுள்ள ஓர் நதியிலிறங்கி தேகசுத்தஞ் செய்துக்கொண்டு ஆற்றுநீரை அருந்தி கரையேறி நகரவீதிச்சென்று சிரேஷ்டமுற்றக் கையில் ஓர் அகலையேந்தி பிச்சையேற்கும் குமரப்பருவமுற்ற கோமான் முகமலர்ச்சியையும் கண்ணொளியையுங் குளிர்ந்த பார்வையையும் தேஜசையுங் கண்ட லோபியர்களும் நாணிப் பிச்சமளித்தார்கள்.

சீவக சிந்தாமணி

மாசித் திங்கண் மாசினமுன்ன மடி வெய்த
ஊசித்துன்ன மூசியவாடை உடையாகப்
பேசிப் பாவாய் பின்னுமிருக்கை அகலேந்த
கூசிக்கூசி நிற்பர் கொடுத்துண்டறியாதார்.

பௌர்ணமியில் பிறந்து பௌர்ணமியில் துறவடைந்த பூரணன் தன் கரத்துள்ள வகலில் கிடைத்த அன்னத்தை எடுத்துக்கொண்டுபோய் ஓர் ஆற்றங்கரையில் வைத்துக்கொண்டு தேகசுத்தி செய்து அன்னத்தைப் புசித்துக் கையலம்புங்கால் நீரிலுள்ள மட்சங்கள் ஓடிவந்து கரத்தில் கழிந்த அன்னங்களைப் புசிக்கக் கண்ட குமரர் அகலில் மிகுந்திருந்த அன்னங்களையும் எடுத்து கொஞ்சங்கொஞ்சமாய் நீரில் விடுங்கால் ஒரு மட்சத்தின் மீது மறுமட்சங்கள் விழுந்து சண்டையிட்டுப் புசிப்பதைக் கண்டு தவிர்த்தும் அவைகள் விடாது போரிடுவதை உணர்ந்து ஒன்றுக்கொன்று உண்டாகும் ஆசையின் மிகுதியே இக்கலகத்திற்குக் காரணமென்றறிந்து அவ்விடம் விட்டெழுந்து ஓர் கால்வாயருகில் தழைத்து நிழலுற்றிருக்கும் மரத்தடியில் உட்கார்ந்துகொண்டு கால்வாயிலோடும் நீரை உற்றுநோக்குங்கால் ஓடும் நீரினுடன் மட்சங்கள் போகாமல் எதிர்நோக்கி ஏறுவதைக்கண்டு அவ்விடம் விட்டெழுந்து கடைக்காலண்டைச் சென்று பார்க்குங்கால் நீர் வயல்களில் பரவவும், அதில் சிதரியோடிய மட்சங்களைக் காகங்களுங் கொக்குகளும் பிடித்துத் தின்பதைக்கண்டு நீரில் எதிர்நோக்கியோடும் மட்சங்கள் எவ்விடம் போகுதென்று தொடர்ந்தேகுங்கால் வாய்க்கால் நீரிலேறி ஏரிநீரில் மறைந்துவிட்டதுகள். இவைகளைக் கண்ணுற்ற சித்தார்த்தர் நீரோடுங்கால் மட்சங்கள் எதிரேறுவது சுவாபமா அன்றேல் தன் பிராணனைக் கார்த்துக்கொள்ளற்காவென்று ஆராய்ச்சி செய்யுங்கால் ஓடும் நீரில் எதிரேறுவது சுவாபமாயின் சிலமட்சங்கள் வயல்வெளியில் சிக்குண்டு காகங்களுக்கும் கொக்குகளுக்கும் இறையாயிரா,

அவ்வகை இறையாவதைக்கண்ட மட்சங்கள் தங்கள் பிராணனைக் கார்த்துக்கொள்ளுவதற்கு எதிரேறும் இயல்பென்றறிந்து அவைகளுக்குள்ள பிராண பயத்தையுஞ் சிந்தித்துக்கொண்டிருக்குங்கால், நகரவீதியிலுள்ள விவேகிகள் அரசனிடஞ்சென்று வணங்கி அரசே, நமது வீதியில் குமரப்பருவமும், குளிர்ந்த பார்வையும், மிருது வசனமும் வாய்த்த ஒருவர் தன் கையிலுள்ள அகலில் பிச்சையேற்ற அன்னத்தை எடுத்துக்கொண்டுபோய் ஆற்றங்கரையில் புசித்துக்கொண்டிருக்கின்றார். அவர் நடையுடை பாவனைகளைப் பார்க்குங்கால் சிறந்த சீமான்போல் காணப்படுகிறதென்றுரைத்தார்கள்.