பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 217


காண்கின்றேன், அதன் சார்பால் என் அரசியலுந் துக்கத்தைக் காண்கின்றேன். ஆதலின் குடிகளின் சுகநிலை ஈதென விளங்கவில்லையே என்றான்.

சோதிரரே, தமது நாட்டுக் குடிகளிடத்திலுந் தமது அரசிலுந் துக்கமே விசேஷித்திருக்கக்கண்ட நீவிர் ஏதேனுஞ் சுகத்தைக் காணவில்லையோ என்றார்.

இறைவா, துக்கத்தைக் கருதாவிடத்து சுகமும், சுகத்தைக் கருதிய விடத்தில் துக்கத்தையும் காண்கின்றேனென்றான்.

சோதிரரே, சகல குடிகளையுந் துக்கத்தில் ஆழ்த்தி நாம் சுகமடையக் கருதுதல் சுகமாமோ என்றார்.

இறைவா, சகலர் சுகத்தையும் கருதுதலே சுகமென்றான்.

சோதிரரே, இருளுக்கு வெளிச்சமும், ஆணுக்குப் பெண்ணும், எதிரடையாகக் காணுதல்போல் துக்கத்திற்கு எதிரடை சுகமிருத்தல் வேண்டும். அந்தந்த துக்கங்களுக்குரிய உற்பவங்களைக் கண்டறிவோமானால் நித்திய சுகவாழ்க்கைத் தோன்றும்.

அந்த நித்திய சுகத்தை சருவ சீவர்களுக்கும் அளித்து அதில் நாமும் சுகமடைதல் மிக்க சுகமல்லவா என்றார்.

மணிமேகலை

தன்னுயிர்க் கிரங்கான் பிறவுயிரோம்பு
மன்னுயிர் முதல்வனறமுமிதென்றான்.

வீரசோழியம்

ஆருயிர்களனைத்தினையும் காப்பதற்கே அருள்பூண்டா
லோருயிர்க்கே உடம்பளித்தால் ஒப்புரவிங்கென்னாகும்.

இறைவா, அவ்வகை சுகத்தை இதுகாறுங் கண்டவர்களுமில்லை கேட்டவர்களுமில்லை, அனுபவித்தவர்களும் இல்லை. ஆதலின் தாங்கள் வீணில் அலைந்து சுகதேகத்தைப் பாழாக்கிக்கொள்ளாமல் இத்தேசராட்சிய பாரத்தைக் கைக்கொண்டு சுகவாழ்க்கை அடையவேண்டுமென வணங்கினான்.

சோதிரரே, சருவ உயிர்களின் ஈடேற்றத்தை நாடி வெளிவந்தயான் தன் சுகத்தைப் பார்த்தல் துக்கமாதலின் என் துறவை தடுக்காதேயுங்களென்று வேண்டினார்.

அதைக்கேட்ட விம்பாசார அரசன் மனங்கலங்கி சருவசீவர்களின் சுகத்தைக் கருதி சக்கிரவர்த்திப் பீடத்தைத் துறந்ததும், மனைவியைத் துறந்ததும், அருமந்த மகவைத் துறந்ததும் பெரிதல்ல எக்காலமும் ஆனந்த நிலையிலிருந்த சுகத்தை எவ்வகையில் துறந்தீரென்று கதரி உலக இன்பத்தை தவிர்த்த (பாலி மொழியால்) அவலோகிதா அவலோகிதா என்றேற்றி தாங்கள் செல்லுமிடத்தையேனுஞ் சொல்லவேண்டுமென்று பணிந்தான்.

சோதிரரே, நானோரிடத்தைக் கருதி செல்லாமல் சுகவாழியைக் கருதி செல்லுகின்றேன். என்னை மறுக்காதீரென்று வெளியேறுங்கால் அவலோகிதரை ஓர் விருத்தன் மறுத்து தாம் வெளியேறிய சங்கை யாதென உசாவினான்.

அவலோகிதர் பெரியோனை நோக்கி ஐயன்மின் தாமடைந்துள்ள மூப்புநிலைக்கு நரை திறை சான்றாயினும் ஏதேனும் பிணிகண்டுளதோ என வினவினார்.

அவலோகிதா, எனக்கு உலகந் தெரிந்தவரையில் உடல் பிணி ஒன்றும் அறியேனென்றான்.

பெரியோய், உமக்கு மனைவிமக்கள் உண்டா இல்லையா என உசாவினார்.

அவலோகிதா, சிறுவயதில் என் மனைவி மடிந்துவிட்டாள், மறு மனைவியை யான் தேடிக்கொள்ளவில்லை என்றான். அருகினிற் மற்றோர் பெரியோன் அவலோகிதா,யான் பிறந்து வளர்ந்து நார்ப்பது வயதுக்குள் மூன்று விவாகஞ்செய்து மூவரும் மடிந்து நான்காவது விவாகஞ்செய்திருக்கின்றேன் உடலில் பற்பல வியாதிகளும் தோன்றி உபத்திரவப்படுகின்றேன் என்றான்.

பெரியோய், விவாக சுகத்தை விரும்புதல் மனுகுல விருத்தியின் நன்மெய் ஒன்றும், அதே சுகத்தை அதிக விருப்பத்தால் பிணிகண்டு மடிக்குந் தின்மெயொன்றுமாகிய இருவினைச்செயல்கள் ஒருச்சுக இயல்பில் தோற்றுகிறதல்லவா என்றார்.