பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 219

சம்பாதிக்கத்தக்க மக்களும் உலகத்தில் உண்டோவென்று சொல்லிக்கொண்டு காடுமலைகளைக் கடந்து ஓர் சிற்றூர் சேர்ந்து பிச்சையேற்றுண்டு சற்றிளைப்பாறி அவ்வூரிலுள்ளோர் அதிக ஆடம்பரமும் கூச்சலும் இல்லாமல் தன்தன் வேலைகளில் அமைதியுற்றிருப்பதினால் ஆற்றலுற்றிருப்பதைக் கண்ட அவலோகிதர் அவ்விடஞ் சிலகால் தங்கவேண்டு மென்றெண்ணி ஓர் விருத்தக் கிழவி வாசமாயிருக்கும் சிறு குடிசையில் தங்கினார்.

நிகழ்காலத்திரங்கல்

அழகன் திவாகரனம்மண்ணலருள் வடிவன் / கிழவிச்சிறு குடிலங்காண்டல் அதிசயமே.

வீரசோழியம்

கொய்தினைகாத்துக் குளவியடுக்கத்துப் / பொய்தற் சிறுகுடிவாரனீயைய - நலம்வேண்டின்
ஆய்தினை காத்து மருவியடுக்கத்தெம் / ஆய்தற்சிறுகுடி வாரனீயைய - நலம்வேண்டின்
மென்றினைக்காத்து மிகுபூங்கமழ்சோலைக் / குன்றச்சிறுகுடிவாரனீயைய - நலம் வேண்டின்

அவ்விடந்தங்கி இந்த சிற்றூர் அமைதியினால் எவ்வளவாற்றலுற்றுளதோ அதைப்போன்ற நிலையே நமக்கு சுகநிலையாகுமென்று எண்ணி சீவராசிகளின் உற்பவங்களையும் அதனதன் முடிவுகளையும் பட்சிகளின் தோற்றங்களையும் அதன் ஒடுக்கங்களையும் மக்கட் பிறப்புகளையும் அவர்கள் மரணங்களையும் பூமியின்மீது நீர்த்தோயுமேதுவால் புற்பூண்டுகளும், கிருமிகளும், மட்சங்களும், பட்சிகளும், மிருகங்களும், மக்களுந் தோன்றும் நிகழ்ச்சிகளையும் நீரின் ஏதுவாலும், அக்கினியின் ஏதுவாலும், பிணிகளின் ஏதுவாலும், விஷங்களின் ஏதுவாலும் மறைதலின் நிகழ்ச்சிகளையும், பூர்த்தியாக அறியவேண்டிய நோக்கத்தால் மீளவுஞ் சிறுகுடியில் தங்கி அவ்விடமுள்ள சீவராசிகளின் குணாகுணங்களை ஆராச்சிசெய்வதும்,

மலையடிவாரங்களில் சென்று அவ்விடமுள்ள சீவராசிகள் உற்பவ ஒடுக்கங்களைக் காண்பதுவும், மலை சிகரங்களில் ஏறி அவ்விடத்திய தோற்ற ஒடுக்கங்களைக் கண்டறிவதுமாகியச் செயல்களில் பட்சிகள் தன்தன் கூட்டத்தைநாடி சேருவதும், மிருகங்கள் அதனதன் உருவங்களை நாடி அணுகுதலும், மனுக்களில் சுராபானம் அருந்துவோரிடம் சுராபான இச்சையுள்ளோரால் அணுகுதலும், கள்ளச்செய்கையுள்ளோர்பால் கள்ளவுள்ளமுள்ளோர் கலப்புருதலும், மூர்க்கச்செய் கைகளுள்ளோர்பால் மூர்க்கவிச்சையுள்ளோர் அணுகுவதுமாகிய சேர்க்கைகளுடன்;

மனிதவுருவங் கண்டுங் குரங்குகளுக்குரிய செயல்களையும், குரங்குருவங் கண்டும் மனிதருக்குரிய விவேகங்களையும், மனித உருவங் கண்டும் நாயிக்குரிய பொறாமைக் குணங்களையும் நாயுருவங் கண்டும் மனிதனுக்குரிய விவேகச் செயல்களையும் பிரித்துணர்ந்து; மனத்தின் ஆசைப் பெருக்கமும், கோபப்பெருக்கமும் கருமத்தோற்ற ஒடுக்கங்களுக்குக் காரணமாயிருப்பதென்று கண்டு உள்ள ஏதுக்களுக்குங் காரணந் தானாகவும், உள்ள நிகழ்ச்சிகளுக்குங் காரியந் தானாகவும் விளங்குதலால் உள்ள நிலையை அறியவேண்டிய உசாவலால்;

தன்னை நோக்கி உள்ளத்தெழும்பும் ஆசையை எழவிடாமல் நசித்தும் தோற்றும் ஆசையை உள்ளத்திற் கொள்ளவிடாமல் அகற்றியும், உள்ளத்தில் எழுங் கோபத்தை எழவிடாமல் நசித்தும், தோற்றத்தால் வருங்கோபங்களை சாரவிடாமல் அகற்றியும், வந்தச் செயல்களினால் மனதுக்குண்டாகுஞ் சொற்ப ஆறுதலை உணர்ந்து;

யாவும் உள்ளச்செயலென்றறிந்து காமக்கொதிப்பை எழவிடாமலும், தோற்றுங் காமத்தை எண்ணவிடாமலும் அகற்றுங்கால் உதிரத்திரட்சியின் தணலே காமாக் கினியாக வீசுதலை உணர்ந்து, புசிப்பை அடக்க வேண்டும் என்று எண்ணி தான் சிறிதுகாலந் தங்கியிருந்த சிறுகுடிலையும் விட்டகன்று சிலக்குன்றுகளேறி வருங்கால் அவ்வழியாக ஓர் ஆட்டிடையன் மந்தைகளை ஓட்டும்போது பாதையில் ஓர் குட்டி தவறி விழுந்து காலுடைந்துவிட்டபடியால் நடக்கவியலாது நொண்டிக்கொண்டு மெதுவிற்போகவும் இடையன் ஓட்டும் பயத்தால் தாயாடானது முந்தி ஓடுவதும் நடக்கமாட்டாமலிருக்குங் குட்டியிடம்