பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயம் / 13


வானத்திலிருந்து சோதிமயமான ஓர் நட்சத்திரம் பூமியிலிரங்கி தன் வயிற்றில் நுழைந்ததாக சொற்பனங்கண்டு சொல்லியிருந்தனளே அதற்கு சாட்சியாக இக்குழந்தையின் அங்கபாகக் கணிதப்படி வளர்ந்து உம்முடைய அரசுக்கு வருமாகில் உலகம் முழுமைக்கும் ஏகசக்ராதிபதியாயிருக்கும். அவ்வகை அரசாங்கத்தை விரும்பாமல் துறவடையுமாகில் பூமிசை எங்கும் தருமச் சக்கரத்தை உருட்டி மநுக்களின் தீவினைகளைப் போக்கிக் கொள்ளும்படியான ஞான போதனைகளைப்புகட்டி பிறவிதுன்பத்தை நீக்கிக்கொள்ளும்படியான வழிகளையுந்திரட்டி மூவுலகுங் கொண்டாடும் உலகரட்சகனாகிய சற்குருவாக விளங்கும். இவ்வகையானக்காட்சிகளை என் கண்குளிரக்காணாமல் போகும்படியான மூப்பு வயதுக்கு வந்துவிட்டோமே என்னும் ஏக்கத்தினால் அழுதேனென்றார்."

இத்தியாதி சங்கதிகளையுங் கேள்வியுற்ற சகலதேசத்தரசர்களும் பொன்னாபரணங்களையும் நவரத்தினங்களையும் காணிக்கைகளாகக் கொண்டுவந்து குழந்தையின் பாதத்தில் வைத்து தரிசித்துக் கொண்டார்கள்.

அக்காலத்து சிரேஷ்ட அரசர்களுக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்தால் அறுபது வருஷப் பெயர்களில் நளவருஷம் பிறந்தவனை நளராசனென்றும், விக்கிரம வருஷம் பிறந்தவனை விக்கிரம ராசனென்றும், பிங்கல வருஷம் பிறந்தவனை பிங்கலராசனென்றும், விஜயவருஷம் பிறந்தவனை விஜய ராசன் என்றும் வழங்கிவந்ததுபோல இவர் சித்தார்த்தி வருஷம் பிறந்தபடியால் "சித்தார்த்தி என்னும் பெயரைக்கொடுத்து ஆனந்தமாக வளர்த்துவந்தார்கள்.

ஐந்தாவது வயது வந்தவுடன் யானை ஏற்றம் குதிரை ஏற்றம் முதலியவைகளைக் கற்பித்து கல்வியைக் கற்பிடிக்கும்படியான ஓர் ஆசிரியனிடம் விட்டார்கள்.

ஆசிரியன் எழுத்து லட்சணங்களை சொல்லிக்கொடுத்து வருவதற்கு முன் பழையபாடங்களை ஓதுவதுபோல் குழந்தை சொல்லிவருவதை அறிந்து திடுக்கிட்டு கணிதாதி முதலிய பூதசாஸ்திரங்களைப்போதித்தார், அவைகளையும் அக்குழந்தை பழயபாடம் ஓதுவது போலிருந்தது.

அதை அறிந்த ஆசிரியர் ஆனந்தங்கொண்டு அரசனிடத்திற்போய், “அரசே உம்முடையக் குழந்தைக்கு நான் ஆசிரியன் அல்ல, எனக்கு அவர் ஆசிரியனாயிருக்கின்றா”ரென்று சொல்லி விடை பெற்றுக்கொண்டு போய் விட்டார்.

அரசன் தன் குழந்தையினுடைய கல்வி வல்லபங்களையும் ஒழுக்க நிலைமைகளையும் பனிரண்டு வயதுக்குள் போதிக்கும் நீதிவாக்கியங்களையும் நாளுக்கு நாள் பார்த்து பயந்து ஓ! ஓ! நம்முடைய பிள்ளை அரசபோகத்தை விரும்பமாட்டான் என்று எண்ணி மந்திரிகளைத் தருவித்து ஆலோசிக்கத் தொடங்கினான்.

அதற்கு மந்திரவாதிகள் தீர்க்க ஆலோசித்து அரசே உமது குழந்தைக்கு பாலபருவம் நீங்கிவிட்டபடியால் அவர் மனதைக்கவரும்படியான அதி ரூபமுள்ள ஓர் கன்னிகையை விவாகஞ் செய்து நடினத்திலுங் கீதத்திலும் மையலிலும் வல்லபமுடைய சிலக் கன்னிகைகளை அவளுக்குத் தோழிகளாக அமைத்து எப்பொழுதும் உல்லாசமாயிருக்கும்படியானக் கட்டிடங்களையும் நந்தவனங்களையும் அமைத்து அவர்களை அதற்குள்ளாக வைத்துவிடுவோமானால் உமது குழந்தை சுகபோகத்தில் அமிழ்ந்தி இருப்பாரென்றார்கள். இவைகளைக் கேட்ட அரசனுக்கு சந்தோஷம் பிறந்து பளிங்குகளாலிழைத்த வினோதமுள்ள மூன்று வகைக் கட்டிடங்களைக்கட்டி சலதாரைகள் ஓடும்படியான சூத்திரங்களியற்றி பலவருண புட்பங்கள் அமர்ந்த நந்தவனங்களைப்பறப்பி தென்றல் வீசும்படியான முகத்துவாரங்களமைத்து தன் பிள்ளையின் மனதைக்கவரும்படியான அதிரூபமுள்ள அசோதரை என்னும் ஓர் அரசகுமாரத்தியை விவாகஞ் செய்து அவளுக்குத் தோழிகளாக நடின கீதவல்லபமுள்ள அரம்பை, ஊர்வசி, மேனகை, திலோர்தமை என்னும் நான்கு தோழிகளை அமைத்து நூதனமாகக்கட்டி வைத்திருக்கும் மாளிகையில்