பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

226 / அயோத்திதாசர் சிந்தனைகள்

இதில் பெருந்திண்டி, பேராசை, சோம்பல், கடுஞ்சினம், காமம், நீதிகேடு, பெரு நித்திறை, பொய், தன் முயற்சியின்றி பிறரை கெஞ்சுதலாகும் ஊக்கமற்ற தாமதகுணம் என்னப்படும்.

ஈகை, விரதம், தருமம் பேணுதல், அறிவின் விருத்தியை நாடல், கேள்வி முயலல், நன்று தீதென்று உணரலாதி முயற்சியை இராசதகுணமென்னப்படும்.

ஞானம், தவம், மெய்யுணர்ச்சி, அருள், வாய்மெய், ஐம்புலனடக்கலாதி நன்மெய்க் கடைபிடித்தல் சத்துவகுணமென்னப்படும்.

உலகதோற்றத்தில் மகிழ்ந்து இவன் மித்துரு அவன் சத்துருவென்றும், இவன் உன்னியன் அவன் அன்னியனென்றும், இவன் தாழ்ந்தவன் அவன் உயர்ந்தவன் என்றும், இவன் செல்லுமெயுடையவன் அவன் வருமெய் உடையவன் என்றும் ஒன்றுக்கொன்றை பேதிக்காமல் சகல சீவராசிகளுக்கும் உண்மெய் ஒன்று என்று உணர்ந்து சீவகாருண்யம் உடையவர்களாய் பொருமெய் என்னும் பொக்கிஷத்தைச் சேர்த்து சுகவழியைக் கண்டடையுங்கள்.

அச்சுகவழி யாதெனில், மாறாப்பிறவியில் சுழன்று மேலும் மேலுந் துக்கத்தை அதிகரிக்கச்செய்யுந் தீவினைகள் பத்தையும் அகற்றி நல்வினையாம் பத்துப் பாதையில் நடத்தல்;

அதாவது, அவாவின்மெய், அருள், தன்னை அறிதல் இம்மூன்றையும் மனத்தால் அனுசரிக்கவேண்டியது.

இனியவை கூறல், உண்மெய் கூறல், பயனுள கூறல், அறங் கூறல் இந்நான்கையும் நாவினால் அனுசரிக்கவேண்டியது.

பெரியோரை வணங்கல், தானமீதல், தவபீடமிடுதல் இம்மூன்றையும் தேகத்தால் அனுசரிக்க வேண்டியது.

பாரதம் தசரதமென்னும் பத்துப் பாதையையே சுகவழி என்றும் முத்திக்கேகுந் தசபாரமிதம் என்றுங் கூறப்படும்.

மணிமேகலை

தீவினை என்பதியாதென வினவி / னாய்தொடி நல்லாயாங்கத்து கேளாய்,
கொலையே களவே காமத்தீவினை / யலையா துடம்பிற் தோன்றும் மூன்றும்,
பொய்யே குறளை கடுசொல் பயனில் / சொல்லே நாவில் தோன்றும் நான்கும்,
வெஃகல் வெகுளல் பொல்லாக்காட்சி / என்றுளந்தனினிருப்பன மூன்றும் என,
பத்துவகையால் பயன்தெரி புலவ / ரித்திறம்படார் படர்குவராயின்,
விலங்கும் பேயும், நரகருமாகிக் / கலங்கிய உள்ளக் கவலையில் தோன்றுவர்,
நல்வினை என்பதி யாதென வினவில் / சொல்லிய பத்தின் தொகுதியு நீத்துச்,
சீலந்தாங்கி தானந்தலை நின்று / மேலென வகுத்த ஒருமூன்று திறத்துத்,
தேவரு மக்களும் பிரமருமாகி / மேவிய மகிழ்ச்சி வினைப்பயன் நுகர்வர்.

இச்சுகவழிக்குத்தடைகளாகும் தீயச்சிந்தை, பேராசை, கோபம் இம் மூன்றையும் மனத்தால் எழவிடாமல் அடக்கவேண்டியது.

கொலை, களவு, பயனற்றச் செய்கை இம்மூன்றையுந் தேகத்தால் செய்யாமல் இருக்கவேண்டியது.

இவ்வகையாக மனத்தால் செய்யுந் துர்க்கருமம் தேகத்தைப் பற்றிக் கொண்டும் தேகத்தால் செய்யுந் துர்க்கருமங்கள் மனதைப்பற்றிக்கொண்டும் துக்க விருத்தியை அதிகரிக்கச்செய்து, அநித்தியமாகிய மரணத்திற்குக் கொண்டு போகும் வழியைத் திறந்துவிடுவதுமல்லாமல் பிறவிக்கும் ஓர் வித்தாயிருக்கின்றது.

தேகத்தால் செய்யும் நற்கருமங்கள் மனதைப் பற்றிக்கொண்டும், மனதால் செய்யும் நற்கருமங்கள் தேகத்தைப் பற்றிக்கொண்டும், ஒன்றுக்கொன்று கலந்து அன்பையும் ஆற்றலையும் பெருக்கி உண்மெயாகிய நித்திய வழியைத் திறந்துவிடுவது மல்லாமல் பிறவிக் கேதுவாம் வித்தையும் அழித்துவிடுகின்றது.

தன்னை அறிந்தவன் எவனோ அவன் சுகப்படுவான். உண்மெய்யை உணர்ந்தவன் எவனோ அவன் நித்தியமடைவான்.

மதுரமும் பெருமெயுமானது உண்மெய், துன்பசாகரத்திலிருந்து உங்களை விடுவிக்கச் செய்வதும் உண்மெய், உலகபாசங்களினின்று விடுவிக்கச்செய்யும் இரட்சகரும் உண்மெய் என்றறிந்துக்கொள்ளுவீர்களாக.

நீங்கள் உங்கள் உண்மெய்யை அறிந்துக்கொள்ளுவதற்கு சக்தியற்ற வர்களாயிருந்தாலும் அவ்வமுதத்தைக் கசப்பென்று எண்ணினாலும் உங்கள் உண்மெயில் நம்பிக்கை வையுங்கள். உண்மெய்யை விரும்புங்கள். உண்மெய்யில் அன்பை வளர்த்துங்கள்.