பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230 / அயோத்திதாசர் சிந்தனைகள்

அதற்கு ஐவர்களும் எழுந்து வணங்கி ஐயனே, சில காலங்களுக்கு முன் தாங்கள் இவ்வழியில் வந்தபோது தமது செவியிலிருந்த பொற் குண்டலங்களைக் கழட்டிக்கொண்டு செப்புக்குண்டலத்தை செவியிலிட்டுப் போய்விட்டோம். அதே செப்புக்குண்டலத்தை தங்கள் செவியில் காணுங்கால் முன்பு யாங்கள் கழட்டிக்கொண்ட பொற்குண்டலத்திற்கு மேலானப் பிரகாசமும் ஒளிவுங் காண்கின்றபடியால் எங்களுள்ளங் கலங்கி யாங்கள் முன்செய்த அக்கிரமத்தைப் பொருக்கும்படி வேண்டினோமென்றார்கள்.

தாங்கள் முன்செய்த செய்கையை அக்கிரமம் என்றறிந்து கொண்டீர்களா என்றார்.

ஐயனே அதனை அக்கிரமம் என்றறிந்து கொண்டோம் என்றார்கள்.

இதுகாருந் தாங்கள் செய்துவந்த செய்கைகள் யாவும் அக்கிரமம் என்றறிந்துக் கொண்டீர்களா, கிரமமென்று அறிந்து கொண்டீர்களா என்றார்.

ஐயனே, யாங்கள் செய்து வந்த செய்கைகள் யாவும் அக்கிரமமே என்றார்கள்.

தாங்கள் இதுவரையும் அறியாதக் கிரமங்களையும், அக்கிரமங்களையும் இன்று எவ்வகையில் அறிந்து கொண்டீர்கள் என்றார்.

ஐயனே, தாங்கள் செவியிலிட்டக் குண்டலங்களே எங்களை சீர்பெறச் செய்துவிட்டதென்றார்கள்.

தாங்கள் எமக்கு அளித்த செப்புக்குண்டலந் தங்களை எவ்வகையில் சீர்படுத்தியது என்றார்.

ஐயனே, அச்செப்புக் குண்டலம் எங்களிடம் இருக்குமளவும் களிம்பேறி இருளடைந்திருந்தது. அதைத் தங்கள் செவியிலிட்டபோது களிம்பற்று ஒளி வீசுகின்றது.

அவ்வொளியைக் கண்ட எங்களுள்ளத்து இருளகன்று இதுகாரும் யாங்கள் செய்து வந்த செய்கைகள் யாவும் அக்கிரமமென்று உணர்ந்து வருந்துகிறோம் என்றார்கள்.

நிகழ்காலத்திரங்கல்

ஐந்தரக்கர் செய்துவந்த அறியாக் கொலைக்களவு / உந்தன் முகங்கண்டே ஒழிந்தது அதிசயமே.
ஒழிந்த உள்ளத்துள்ளக்களங்க முழுதகற்றி / பழுதற்ற சங்கம் பதித்தது அதிசயமே.

அன்பர்களே, தாங்கள் அக்கிரமத்தை அக்கிரமமென்று எதுவரையில் தெரிந்து கொண்டீர்களோ அதுவரையிலும் அவற்றை நீக்கி கிரமத்தில் நடவுங்கள்.

உங்கள் பொருளை வேறொருவன் அபகரிக்காதிருக்க வேண்டுமாயின் அன்னியன் பொருளை நீங்கள் அபகரிக்காதீர்கள்.

உங்களை ஒருவன் அடித்து துன்பஞ்செய்யாமலிருக்கவேண்டிய விருப்புண்டாயின் நீங்கள் மற்றவர்களை அடித்துத் துன்பஞ்செய்யாமலிருங்கள்.

உங்கள் மனைவியை ஒருவன் இச்சிக்கக்கூடாத எண்ணங்கொள்ளுவீர் களாயின் அன்னியன் மனைவியை நீங்கள் இச்சியாதிருங்கள்.

உங்களால் உங்கள் அறிவை விருத்தி செய்யாமல், மயங்கி நிற்பதை நீங்கள் அறிந்துக்கொள்வீர்களானால் இன்னும் உங்கள் அறிவை மயக்கக்கூடிய வஸ்துவை அருந்தாதிருங்கள்.

அன்னியர்கள் பொய்சொல்லி வஞ்சிப்பது உங்களுக்குப் பொருந்தாவிடில் நீங்கள் அன்னியரைப் பொய்சொல்லி வஞ்சியாதிருங்கள்.

உங்களுக்குள்ள இராகத்துவேஷ மோகமென்னுங் களிம்புகள் அற்ற போது நீங்கள் அணிந்துள்ள செப்புக்களின் களிம்புகளுமற்றுக் கருணை பெருவீர்களென விளக்கிவிட்டு பிம்பாசார அரசநகரத்தை நாடிச்சென்றார். அரக்கர்கள் அனைவரும் ஐயனைப் பின்தொடர்ந்தார்கள்.

ஜெகத்குருவாகத் தோன்றிய நாதன் பிம்பாசார நகரத்துட் சென்று வீதியில் சிரங்கவிழ்ந்து இரு கைகள் அசைவாடாமல் ஒடுக்கத்தில் நடப்பதையும் அவரைப் பின்தொடர்ந்து நடக்கும் ஐவர்கள் அடக்கத்தையுங் கண்டவர்கள் திகைத்து அரசனிடம் ஓடி ஐயே, நமது நகர வீதியில் யாரோ ஓர் குமான் வருகின்றார் அவரைப் பின்பற்றி ஐவர்கள் வருகின்றார்கள். அவர் வடிவையுந் தேஜசையுஞ் சொல்லத் தரமன்றென்று கூறுங்கால் அரசன் எழுந்து முன்சென்று